தொடர்கள்
அரசியல்
மழை பெய்யட்டும் 1..-விகடகவியார்

2024919003235119.jpeg

தீபாவளி எப்படி வருகிறதோ அதேபோல் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் காவேரி நதிநீர் பிரச்சனை தவறாமல் வருகிறது. காவிரி நதி கர்நாடகாவில் உற்பத்தியாகிறது. ஆனால் அந்த நீரை நம்பி தான் பல ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் இருக்கிறார்கள். தமிழகத்தில் நெல் உற்பத்தியில் ஒரு பங்கு காவேரி படுக்கையில் தான் நடக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுவதைப் பொறுத்து இருக்கிறது என்பதுதான் காவேரி படுக்கையில் உள்ள விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது. ஆனால் கர்நாடக அரசு காவிரி நதிநீர் திறந்து விடுவதில் உச்ச நீதிமன்ற உத்தரவோ காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவு எதையுமே செயல்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. காவிரி நதிநீர் திறந்து விடுவது சம்பந்தமாக கர்நாடக அரசுடன் 38 முறை பேச்சுவார்த்தை நடத்தினோம், எந்த பலனும் இல்லை என்கிறார் அமைச்சர் துரைமுருகன்.

2024919003306445.jpeg

ஆனால் இயற்கைக்கு எதிராக எந்த அதிகாரமும் செல்லுபடி ஆகாது என்பதை காவேரி நதி பலமுறை நமக்கு பாடமாக சொல்லிக் கொடுக்கிறது. தண்ணீரே இல்லை விடமாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தது கர்நாடகா அரசு. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கடும் மழை காரணமாக அங்குள்ள நதிநீர் வழித்தடத்தில் நீர் நிரம்ப தொடங்கியதும் மீதமுள்ள உபரி நீர் தானாக தமிழ்நாட்டுக்கு வந்தடையும் இதுதான் இப்போதும் நடந்தது இதை கர்நாடக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. இவர்கள் சக்தியை விட இயற்கை மகாசக்தி உடையது என்பதை கர்நாடக அரசுக்கு இயற்கை பலமுறை உணர்த்தியிருக்கிறது. வினாடிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் காவேரி நதியிலிருந்து உபரிநீராக தமிழ்நாட்டுக்கு வந்தது. மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பி வழிந்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது அதேசமயம் உபரி நீரை நம்மால் சேர்த்து வைக்க முடியவில்லை .இதற்கு காரணம் போதிய அணைகளை நாம் கட்டவில்லை என்பதுதான். உபரி நீர் முழுவதும் வீணாக கடலில் போய் கலந்தது. இதற்கு தீர்வு நதிநீர் இணைப்பு தான் ஆனால் இன்று வரை நாம் இது பற்றி வெட்டியாக பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். செயல்படுத்தவில்லை. ஒரு பக்கம் நதிநீர் பிரச்சனையில் நாம் மல்லு கட்டிக் கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம் நமக்கு வரும் தண்ணீரை உரிய முறையில் சேமிக்க முடியாமல் வீணாக்குகிறோம். இதுதான் தமிழ்நாட்டின் உண்மை நிலை.

2024919010303700.jpeg