தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 31 "பிள்ளைக் கனியமுதே!" - மோகன் ஜி

2024918143226289.jpg

‘மா..ர்ட்டீனா... நவரத்தி...லோவா’

கருப்பு வெள்ளை டயனோரா டீ.வியில் பிரென்ச் உச்சரிப்புக் காமெண்டரியுடன் க்ரிஸ் எவர்ட்டும் மார்டீனாவும் ‘ஆத்தாடி பாவாட காத்தாட’ என்று டென்னிஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

அந்த ஞாயிற்றுக்கிழமை காலை சுகமாகத்தான் துவங்கியது.

ஹாலில் தரையில் அமர்ந்து கண்கள் டீ.வியிலும், கையில் பீலரும் இருக்க, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிக் கொண்டிருந்தேன். கர்ப்பிணியான மனைவிக்கு ஒத்தாசை செய்கிறேனாக்கும்.!

ஹாலுக்கும் இடைக்கழிக்கும் மத்தியிலான தளத்தின் படிக்கட்டுதான் என் மூத்த வாரிசின் சிம்மாசனம். மூணு வயசு இன்ஜினீயர். கையிலிருந்த கார் பொம்மையை எப்படி உடைக்கலாம் என்ற யோசனையுடன் கால்களை ‘M’ எழுத்தைப்போல் பரப்பிக்கொண்டு அதை உருட்டியவாறு இருந்தான்.

“என்ன.. ஆச்சா” என்று கேட்டபடி கையில் காப்பியையும், வயிற்றில் எங்கள் இரண்டாம் வாரிசை சுமந்தபடியும் ஹாலுக்கு வந்தாள் தர்மபத்தினி..

‘இந்த முறை கண்டிப்பா உனக்கு பொண்ணு தான்டீ.. வயிறு நல்லா சரிஞ்சிருக்கு பாரு’ என்று கீழ்வீட்டு ஜம்பகா மாமி நேற்று அவளுக்கு சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

மகளுக்கு நல்ல பேரா வைக்கணும்.... ‘கண்ணம்மா, நிவேதிதா, மதுமதி, ஓவியா, கவிதா, தாக்ஷாயினி, திரிபுரா....

“காலங்காத்தால டென்னிஸ்... விவேக்குக்கு பல்லுத் தேய்க்க சொல்லிக் குடுங்கன்னு தினம் உங்களுக்கு சொல்றேன். அதைக் கேக்காதீங்க. இந்த டீ.வியை முதல்ல நிறுத்துங்களேன்”.

அவன் பெயர் பிரஸ்தாபிக்கப் படுவதைக் கேட்டு நிமிர்ந்த விவேக் அவளைப் பார்த்து கண்ணடித்தான்.

“முழியத் தோண்டிடுவேன் கம்மனாட்டி. கண்ணா அடிக்கிறே?”

மீண்டும் கண்சிமிட்டும் குறும்பனைப் பார்த்து சிரித்தாள்.

“உங்கப்பா கிட்ட இதெல்லாம்தான் கத்துக்கலாம். நல்லாக் கண்ணடி.... ஏங்க இந்த டிவி சனியனை நிப்பாட்டுங்களேன்.”

“இருடி! உலகமே இதைப் பார்த்துகிட்டிருக்கு. அயனான மேட்சு.. படுத்தாதே”

“போறும் உங்க ரசனை! நீங்க ஆம்பளைங்க விளையாடுற டென்னிஸ் பாக்கறதை நான் கண்டதே இல்லையே!”

கிராதகி!

“மோகன் சார்!” வாசலில் கீழ்வீட்டு ஜக்கு சார் குரல். “விவேக்கு! அப்பா என்னடா பண்றா.”.

உள்ளே கைகாட்டி ‘ஆலூக்கு சேவீங் பண்றா’ என்றான் சின்னக் கள்ளன்.

“ஆலூக்கு ஷேவிங்கா?!” வியப்புடன் கேட்டபடி உள்ளே வந்தார்.

“வாங்க சார்!”

‘அடடே! இதத்தான் சொன்னியா’ என்று என் கையில் தோலுரிந்து வெளுத்திருந்த உருளைக் கிழங்கைப் பார்த்துப் பெரிதாக சிரித்தார்.

“தூக்கினியூண்டு இருந்துகிட்டு என்னமா யோசிக்கிறான் பாருங்க படவா! சரியானப் பயடா நீ!”

என் மனைவி பூரிப்புடன் கேட்டாள்.

” கொஞ்சம் காபி தரவா மாமா?”

“மகராசியா குடும்மா.”

“சார் ! உங்கப் பயலுக்கு நேத்து நான் முத்தம் கொடுத்தேன். தன் சட்டையால கன்னத்த தொடச்சிக்கிட்டான். ஆனா பாருங்கோ.. மாமியைத் தேடிப் போயி முத்தம் கொடுக்கிறான். பொல்லாதப் பய!”.

அடியே நான் என்ன பண்ணுவேன். என்னைப் பார்த்து முழிய உருட்டுறே?

“சொல்லுங்க சார். என்ன சமாச்சாரம்?”

“ஏன் ஓய்? தியாகராஜா ஹால்ல வருஷப் பிறப்பு கவியரங்கத்துலே போன வாரம் கவிதை சொல்லி பின்னியெடுத்துட்டீங்களாம்?! நேத்து லேக் மார்க்கெட்ல மூ.நா. சொல்லி சொல்லி மாய்ஞ்சிப் போயிட்டார். எனக்கு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதோ? நான் ரசனைகெட்ட அசடுன்னு இருந்துட்டீங்களா? சண்டை போடலாம்னு தான் வந்தேன். உங்கபிள்ளை போட்ட போடுலயும், ஜெயந்தி கொடுத்த காபிக்காகவும் தான் உம்மை விடுறேன். பொழைச்சுப்போம்”.

“சாரி சார்! இது ஒரு பெரிய விஷயமான்னு உங்க கிட்டே சொல்லத் தோணலே. உங்களுக்கு இதெல்லாம் பிடிக்கும்னு தெரிஞ்சிருந்தா கூப்பிடாம இருந்திருப்பேனா?”

“போகட்டும் இந்த சின்ன வயசுல சபைலே கௌரவம் கிடைக்கிறதுன்னா லேசு பட்டதா? மூ.நா உங்களைப் பத்தி சொன்னப்போ எனக்கே அந்த கௌரவம் கிடைச்சா மாதிரி இருந்தது. எங்க தான் உங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்கோ. பெரிய விஷயம்.. பெரிய விஷயம்..."

“தேடிவந்து பாராட்ட உங்களுக்குத்தான் சார் பெரிய மனசு.”.

இந்திரா காந்தி, எம் ஜீ ஆர், துர்கா பூஜை, மாமியின் முட்டிவலி என்று பலவற்றையும் அலசிவிட்டுக் கிளம்பினார். “அடேய் குட்டிப் பயலே! என்னோட வர்றியா? “

விவேக் அவரைப் பார்த்து கண் சிமிட்டினான்...’பாலுக்கு கோபம் வந்துச்சு’ என்றான்.

“என்னடா சொல்றே?”

எனக்கும் புரியவில்லை.

அவனுடைய ஆஸ்தான மொழிபெயர்ப்பாளினியான என் மனைவி சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“அதுவா! காலைலே இவனை இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டு பால் காய்ச்சிக் கொண்டிருந்தேன்.பால் பொங்கி வர்றதைப் பார்த்து ‘பாலுக்கு கோவம் வந்துடிச்சி’ங்கறான். அதைத்தான் உங்களுக்கு சேதியா சொல்லியாறது”

“பலே பலே! கவிஞன் பிள்ளையில்லையா? என்னமா யோசிக்கிறான்? வரேன் சார்!”

அன்று பெருமையாய்த் தான் இருந்தது.

......................

இப்போது யோசித்துப் பார்க்கிறேன்.

என் பிள்ளை கவிதை எழுதுவதில்லை...

கண்ணடிப்பதில்லை...

சில நாட்களுக்கு முன் சரித்திரம் என் தோளை உரசிவிட்டுப் போனது.

பேத்தியுடன் லிஃப்டில் ஏறிக் கொண்டிருந்தோம். இன்னோரு பிளாட் பெரிசுடன் முணுமுணு என்று பேசிக் கொண்டிருந்தவனை, ‘ஸேம்’ தர்மபத்தினி

முழியை உருட்டி முறைத்துக் கொண்டு வந்தாள்.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் பிடித்துக் கொண்டாள்.

“ஏன் இப்படிப் பண்றீங்க? இவ லிஃப்ட்டுல விசிலடிச்சுக்கிட்டு வந்து என் மானத்தை வாங்கிட்டா!”

“ அப்படியா? சுவாரஸ்யமா பட்டேல் சார்கிட்ட பேசிக்கிட்டே வந்ததுல நான் இவளை கவனிக்கவேயில்லையே. அவ விசிலடிச்சா என்னை எதுக்குக் காய்ச்சறே? “

“நாக்கை கொஞ்சம் சுருட்டிக்கிட்டு மூச்சை வாய் வழியா சீராக விடணும் கண்ணம்மா!ன்னு டெமோவா விசிலடிச்சு சொல்லிக்கொடுத்து கெடுக்கறதே நீங்க தான்”

‘’விசிலிங் கொஞ்சம் ஃபீல் குட் உற்சாகம்மா! இதெல்லாம் ஒரு விஷயமா?எப்பவுமுமேவா விசில் அடிக்கறா? விடுவியா..” என்றேன்.

நான் வாயைமூடுமுன் விசிலடித்தபடி பேத்தி எனைப் பெயர்த்தெடுக்க வந்தாள். “தாத்தா! இப்போ நான் என்ன பாட்டை விசிலடிச்சேன்னு சொல்லு!”

“சொல்லவா? நெருப்புடா… நெருங்குடா பார்ப்போம் தானே செல்லம்”

‘நோ தாத்தா!’என்று தலையிலடித்துக் கொண்டாள்.

“நீங்க பாட்டைக் கண்டுபிடிச்சு வாழ்ந்தது.. எவ்வளவு கரெக்டா மோகனத்துல ‘வரவீணா ம்ருது பாணி’ன்னு சீட்டியடிக்கிறா! நெருப்பாம் நெருங்கணுமாம்! நீ வாம்மா! “

“ கண்ணம்மா! விசிலடிக்கிறதுல்லாம் நல்ல பழக்கம் கிடையாது! குழந்தைன்னு பார்த்தா ரௌடியாயில்லே இருக்கே!” என்றேன்.

கண்ணம்மா சிரித்துக் கொண்டே கண்ணடித்தாள். மூக்கும் முழியும் அவள் அப்பனைப் போலவே!