தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 28 “ஒரு மேடை பல்பு” - மோகன் ஜி

20240826220342249.jpg

ரொம்ப வருடங்களுக்கு முன்னே நடந்த நிகழ்வு இது.

நம்ம அசிரத்தையாலே பல்பு வாங்குவது ஒரு ரகமென்றால், பிறருடைய அசிரத்தையாலே நம் மடியில் விழும் பல்புகளும் உண்டு!

வங்கிப் பணியிலிருந்த நாட்கள். இலக்கிய கூடுகைகளில் பேசுவது, சிறப்புரை வாழ்த்துரை, செல்லவுரை என ஆற்றிக் கொண்டிருந்ததும் உண்டு தான்!

ஏதோ நிகழ்ச்சியில், என் மேடைப்பேச்சை முன்பே கேட்டிருந்த எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர் ஒருவர் என்னை வந்து சந்தித்தார்.

தன் அக்கா மகன் தனதுமுதல் கவிதைத் தொகுப்பை வெளியிடுவதாகவும், அவனை மேலும் ஊக்கப்படுத்த சிறிய வெளியீட்டு விழா ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொன்னார். நான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி கௌரவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அவர் குறிப்பிட்ட சனிக்கிழமை மாலை எனக்கு வேறு வேலை இல்லாததால் விழாவுக்கு வரச் சம்மதித்தேன். அந்தக் கவிதைப் புத்தகத்தை பற்றி பேசுவதற்காக எனக்கு ஒரு பிரதி அனுப்பச் சொன்னேன். இண்டர்நெட், செல்போன் போன்றவற்றைக் கேள்விப்பட்டிராத நாட்கள் அவை.

விழா நடக்குமிடத்திற்கு நேரத்தே தான் புறப்பட்டேன். ஆனாலும், இரண்டு கிலோமீட்டருக்கு முன்பே என் மோட்டார் சைக்கிள் பழுதாகி விட்டதால், வண்டியைத் தள்ளிச்சென்று அருகாமையிலிருந்த மெக்கானிக் கடையில் விட்டுவிட்டு, ஆட்டோவுக்குக் காத்திருந்து அரக்கப்பறக்கப் போய்ச் சேர்ந்தேன்.

விழா நிகழ்விடத்தின் வாசலிலேயே எனக்காக அந்த நண்பர் காத்திருந்தார். வண்டி ரிப்பேரானதைச் சொல்லி வருத்தம் தெரிவித்தேன்.

கொஞ்சம் தாமதமாகி விட்டதால் அப்போது தான் கூட்டம் தொடங்கியதாகவும், ஏதோ சங்க நிர்வாகி அறிமுக உரையைத் தொடங்கியிருப்பதாகவும் சொன்னார். அந்த நிர்வாகியும்கூட ஐந்து நிமிடத்திற்கு முன்பு தான் வந்து, தொகுத்து வழங்க குறிப்புகளுடன் நேரே மைக்குக்குப் போனதாகவும் சொன்னார்.

ஒரு அவசர வேலை வந்துவிட்டதால், தான் வெளியே போய்விட்டு திரும்ப வருவதாகச் சொன்னார்.

அருகிலிருந்த அவருடைய சிப்பந்தியிடம் “குப்பு சாமி! ஐயாவை மேடைக்கு கூட்டிக்கிட்டுப் போய் ஒக்கார வை. சரியா?” என்றபடி கிளம்பி விட்டார்.

லேசான தள்ளாட்டத்துடன் ‘குப்’சாமியும் ‘வாங்க!’ என்று வரண்டகுரலில் கூப்பிட்டபடி மேடை நோக்கி நடந்தார். கூட்டத்தை நோட்டம் விட்டுக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்தேன். அன்று நூறு பேர் விழாவுக்கு வந்திருக்கலாம்.

அந்த ஹாலுக்குள் நாங்கள் நடந்த சாரியில், ஒரு நீளமான மேஜைமேல் ஒருவர் காகிதத் தட்டுகளை அடுக்கி, அதில் பச்சைப் பசேல் என்று ஸ்வீட் வில்லையையும், செக்கச் செவேல் என்றிருந்த மிக்ஸரையும் நிரப்பிக் கொண்டிருந்தார். பக்கத்திலே ஒரு கேனில் டீ!

மேடை மேல் போட்டிருந்த நாற்காலிகளில், நடுவிலிருந்த இரண்டு பெரிய ரிஸப்ஷன் நாற்காலிகளில் கவிதைப் புத்தகத்தை எழுதிய இளைஞரும், அவர் பக்கத்தில் இன்னொரு இளைஞரும் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களுக்கு இருபுறத்திலும் இரண்டிரண்டாக நான்கு மடக்கு நாற்காலிகள்.

அதில் ஏற்கெனவே மூவர் அமர்ந்திருந்தனர்.

மைக் வைக்கப் பட்டிருந்த இடப்பக்க ஓரம் காலியாயிருந்த நாற்காலிவரை என்னை உருட்டிக் கொண்டு வந்த குப்புசாமி, ‘உக்காருங்க!’ எனச் சன்னமாக அதட்டினார். தொப்பென அமர்ந்தேன்.

பக்கத்து நாற்காலிக்காரரைப் பார்த்து புன்னகைத்தேன். அவரோ, நான் ஏதும் கைமாத்து கேட்டுவிடப் போகிறேனோ என்பதுபோல் கண்டுகொள்ளாமல் இருந்தார்.

மைக்கில் பேசிக்கொண்டிருந்த நிர்வாகி புத்தகத் தொகுப்பின் கவிஞரைப் பற்றி பேசிவிட்டு,

‘சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஐயா மோகன் ஜி அவர்களே!’ என்று என் விருத்தாந்தத்தையெல்லாம் ஒரு பேப்பரிலிருந்து படித்தார். ஆனால் படிக்கையில், புத்தக ஆசிரியரின் பக்கத்திலிருந்த இளைஞரை அவ்வப்போது பார்த்து புன்னகைத்தபடி அல்லவா பேசினார்?!

இவ்வளவு இளம் வயதில் நல்ல பதவியில் சமூகப்பணி ஆற்றுவதோடு இலக்கிய ஈடுபாடும் கொண்டிருப்பதையும் சிலாகித்து அந்த இளைஞரை பார்த்து மீண்டும் சிரித்தார்.

‘அது நான்யா! உன் பின்னாலயே உக்காந்துருக்கேன்… என் முப்பத்திமூணு வயசுல்லாம் அவ்ளோ இளமையா?! ஏதோ தப்பா இருக்கே!’ என்று எனக்குள் யோசித்தபடி இருந்தேன்.

அடுத்து மேடையிலிருப்பவர்களை மரியாதை செய்வதாக அறிவித்தார். இரண்டு பொன்னாடைகள் நடுநாயகமாக வீற்றிருந்த புத்தகம் எழுதிய இளைஞருக்கும் அவருக்கு அடுத்து அமர்திருந்தவருக்கும் போர்த்தப் பட்டன.

கொஞ்சம் டைட்டான பட்ஜெட் போலும்!

மீதி நால்வருக்கும் தலா ஒரு பூங்கொத்து.

அந்தப் பூங்கொத்தும்கூட, கூர்ச்சத்தில் ரெண்டு பூவை சொருகி வைத்தாற்போல ரொம்பவே சோனியாக இருந்தது.

“அடுத்து, சிறப்புரையை ஆற்றிட ஐயா மோகன்ஜி அவர்களை அழைக்கிறேன்” என்று கவிதைப் புத்தகம் எழுதியவருக்கு அடுத்திருந்த இளைஞரைப் பார்த்து அன்பொழுக அழைத்தார்.

அந்த இளைஞரானால் கருமமே கண்ணாக, அந்த பொன்னாடை சால்வையை நன்கு உதறி மடித்துக் கொண்டிருந்தார்!

நான் எழுந்து மைக்கருகே சென்று, அந்த நிர்வாகியின் காதில், ‘நான் தாங்க மோகன் ஜி!’ என்று கிசுகிசுத்து விட்டு, மைக்கைப் பிடித்தேன்.

தொகுப்பின் கவிதைகள், வாசிப்பு, பாரதி, கண்ணதாசன் என கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி அகடவிகடமெல்லாம் சேர்த்து பேசிமுடித்தேன். கூட்டமும் உரையை கைதட்டி ரசித்தது. புத்தகத்தையும் வெளியிட்டேன். அப்போதே என் நண்பரும் திரும்பி வந்திருந்தார்.

விழா இனிது முடிந்தது. அந்த நிர்வாகி பொன்னாடையை எனக்குப் போர்த்தாமல் மாற்றிப் போட்டு விட்டதற்கு ரொம்பவே சங்கடப்பட்டார். அவருக்கு சமாதானம் சொல்லி ஆறுதல் படுத்தினேன்.

அங்கு மேடையிலிருந்த யாருக்கும் நான் பரிச்சியமில்லை.

அந்த கவிதைத் தொகுப்பினை எழுதிய கவிஞருக்கு நெருங்கிய நண்பராம் அந்த இளைஞர். அவர் யார் என்று அந்த நிர்வாகிக்குத் தெரியாது!

அந்த இளைஞருக்கோ, தன்னைத் தான் மோகன் ஜி என்று அழைக்கிறார்கள் என்பதும் தெரியாது!!

நான் ஏன் அங்கு போனேன் என்பதும் எனக்குத் தெரியாது!

அடடா! அந்தப் பூங்கொத்துக் கூர்ச்சத்தை எடுத்துவர மறந்துட்டனே!