"மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க்" (MSSW)கல்லூரியும், "துணை" தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து "மகப்பேறு மனநலம் - பட்டய டிப்ளமோ " (PGDPH) சான்றிதழ் படிப்பினை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தியாவிலேயே முதல்முறையாக இப் படிப்பு வழங்கப்படுகிறது. ஒரு கல்வியியல் நிறுவனம், ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தோடு கைகோர்ப்பது இதுவே முதல் முறை என்று MSSW ன் முதல்வர் டாக்டர்.சுபாஷினி தெரிவித்தார்.
நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்த துவக்கவிழாவில் பேசும்போது இதனை குறிப்பிட்டார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய, தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையத்தின் தலைவரும், முன்னர் உள்துறை செயலருமான திரு. பிரபாகரன் இ.ஆ.ப , தனது உரையினில் " இதுபோல ஒரு கல்வி நிறுவனத்தின் நம்பிக்கையை பெற்று அவர்களோடு இணைந்து ஒரு பட்டப்படிப்பு வழங்குவது எளிதான ஒன்றல்ல, இரண்டல்ல, கடந்த 3 -4 வருடங்களாக தொடர்ந்துவரும் இவர்களது விடா முயற்சியை நானறிவேன் என்று பாராட்டினார். இத் திட்டத்திற்கு முனைவர். திரு. V.D. ஸ்வாமிநாதன் அவர்கள் தலைமையேற்று பாடத்திட்டங்கள் அமைப்பதில் பேருதவி புரிந்ததை "துணை" அமைப்பின் இணை நிறுவனர்களில் ஒருவரான திருமதி.ஸ்மிதா ராஜன் குறிப்பிட்டார். மற்றொரு இணை நிறுவனரான திருமதி.சுபஸ்ரீ இப்படிப்பு குறித்து விளக்கினார். இரண்டு செமெஸ்டர்களில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது, 100 மணிநேர நேரடி பயிற்சியும் உண்டு. இது துணை நிறுவனத்தோடு திட்டத்தில் இணைந்திருக்கும் இரண்டு பெரிய மகப்பேறு மருத்துவமனைகளில் நடக்கும். மாணவர்கள் அங்கு தங்களின் நேரடிப் பயிற்சியைப் பெறலாம். இப்படிப்பு அனைவருக்குமானது, இதற்கு சைக்காலஜி படிப்பு படித்திருக்கத்தேவையில்லை என்பதையும் விளக்கினார். வரும் செப்டம்பர் 28 இந்த படிப்பு துவங்க உள்ளதாகவும், முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே இப்படிப்பு வழங்கப்பெறும் என்றும், இதற்காக பல துறை வல்லுநர்கள் தங்களோடு இணைந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
உண்மையிலேயே ஒரு கருவுற்ற பெண்ணை எவ்வாறு கவனித்துக் கொள்ளவேண்டும், அவர்கள் மனநிலையை சரியாக வைத்துக்கொள்ள எவ்வாறு உதவ வேண்டும் என்பது குறித்து அனைவருமே அறிந்து கொள்ளவேண்டும். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தபோது அனுபவமிக்க முதியவர்கள் அருகில் இருந்து பிரச்சனைகளுக்கு தீர்வு தருவார்கள். இன்றைய காலகட்டத்தில் அதற்கு வாய்ப்புகளே இல்லை. அதனாலேயே இந்த படிப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
இப்படி ஒரு பட்டய படிப்பினை உருவாக்கியதற்காகவே இந்த இரு நிறுவனங்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
Leave a comment
Upload