தொடர்கள்
வலையங்கம்
தேவையா இந்த சுமை ?

20240702172723161.jpg

பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் புத்தகப் பையின் எடையானது நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. எல்கேஜி படிக்கும் மாணவ மாணவிகள் கூட தூக்க முடியாமல் புத்தகப்பையை சுமப்பது மிகவும் பாவமாக இருக்கிறது. இதில் அரசு பள்ளி, தனியார் பள்ளி என்று எந்த விதிவிலக்கும் இல்லை. எல்லோருமே சுமக்கிறார்கள்.

நமது கல்விமுறையில் மாற்றம் தேவை ஒரு பக்கம் மாய்ந்து மாய்ந்து எழுதுவது அல்லது முழு புத்தகத்தையும் மனப்பாடம் பண்ண சொல்வது. இது எந்த மாதிரி கல்வி என்று தெரியவில்லை. எல்லா மாணவர்களும் இதை தண்டனையாக தான் பார்க்கிறார்கள். பாடங்களை மனதில் பதிய வைக்கும் முயற்சியாக இது தெரியவில்லை.

கல்வியின் தரத்தை கூட்டுகிறோம் என்று நோட்டுப் புத்தகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. கேட்டால் கூடுதல் விஷயங்களை கற்றுத் தருகிறோம் என்கிறார்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பு எடுக்க வீட்டுப்பாடம் என்று தனித்தனியாக நோட்டு வாங்க வேண்டி இருக்கிறது. இதனால் புத்தகப்பையின் சுமை கூடிக் கொண்டே போகிறது. ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பையின் எடை கிட்டத்தட்ட இரண்டு கிலோ இருக்கிறது.

கேரள மாநிலத்தில் புத்தகப்பையின் எடையை குறைக்க பாடப்புத்தகத்தை இரண்டாகப் பிரித்து ஆறு மாதத்துக்கு ஒரு புத்தகம் என்று சுமையை குறைக்கும் திட்டம் பரிசீலித்து வருகிறது.

எனவே தமிழக அரசும் இதை பரிசீலிக்க வேண்டும். வாரத்தில் புத்தகப்பை இல்லாத ஒரு நாள் என்று கூட அறிமுகப்படுத்தலாம். சுமையில்லாமல் கற்பித்தலை மாணவருக்கு சுகமான அனுபவமாக மாற்றும் முறையை இந்த அரசு யோசிக்க வேண்டும்.