தொடர்கள்
தொடர்கள்
குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 29 - ரேணு மீரா 

20240629081252665.jpg

காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருது வர்

-குறள் 485

உலகத்தை ஆள நினைக்கும் எண்ணம் கொண்டவர்கள் மனம் கலங்காமல் தக்க காலத்தை எதிர்பார்த்து காத்திருப்பர்.

ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு நேர நிர்வாகமே ஆளுமை தருகிறது . நேரத்தை புரிந்து கொள்ளுதலும் திறம்பட அதனை பயன்படுத்துவதும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் அவசியமானது.

நேர நிர்வாகம் என்பது நாம் எந்த அளவிற்கு திறமையோடும், முறையோடும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஒரு வேலையை சிறப்பாக மற்றும் பயன்படும் விதத்தில் செயல்படுத்துகிறோம் என்பதில் அடங்கும்.

“ காலம் கடந்து நீ செய்யும் எந்த ஒரு செயலும், பயனற்றது”

“ உன் வாழ்க்கையில் நீ காலத்தை வீணடிக்கிறாய் என்றால் அது நீ தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்” என்கிறார் அறிஞர் சி எஸ். ரைட்.

இப்படி காலத்தில் ஒரு வேலையை செய்ய வேண்டும் என்ற படிப்பினையை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க அவர்களிடம் மூன்று கேள்விகளை கேட்டு ஒரு பேப்பரில் அதற்கான பதிலை அவர்களை எழுத செய்யுங்கள்.

1 சாதனையாளராக விரும்பும் ஆசை உன்னிடம் உள்ளதா?

2 அதனை அடைவதற்கு இதுவரை நீ மேற்கொண்ட முயற்சிகள் யாவை?

3 சாதிக்க விரும்புவதற்கான ஆசையை உன்னில் விதைத்தது யார்?

இவற்றிற்கான விடைகளை அவர்கள் எழுத வேண்டும், ஒருமுறை எழுதிய பெண் ஒரு வாரம் கழித்து மீண்டும் அதே நாள் இதையே எழுத வேண்டும்.அப்போது அவர்களது சாதனை பற்றிய எண்ணம் மாறுகிறதா என்று அவர்களுக்கு தெளிவு பிறக்கும். அதன்பின் யாரார் அவர்கள் தூண்டப்பட்டார்களோ அவர் பெயரில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்று பாருங்கள் .

இதே போல் மீண்டும் ஒரு வாரம் கழித்து அதே நாள் அதாவது ஒரு சனிக்கிழமை அவர்கள் இந்த கேள்விக்கு பதிலை எழுத ஆரம்பித்தால் அடுத்த சனிக்கிழமை மீண்டும் அதையே எடுத்து புதிதாக கேள்விகளை எழுதி மீண்டும் பதில்களை எழுத வேண்டும் இப்படி மூன்று வாரம் தொடர்ந்து செய்து வரும் பொழுது,அவர்களின் குறிக்கோள்களில் மாற்றம் ஏற்படுகிறதா அல்லது அவர்களை இந்த குறிக்கோளை நோக்கி பயணிக்க தூண்டுதலாக ஆக இருந்த நபரின் பெயரில் மாற்றம் ஏற்படுகிறதா என்று பாருங்கள். இதைப்பார்க்கும் போதூ அவர்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்.

இப்படி இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை எழுதும்போது அவர்கள் மனதில் இலக்கை ஒரு நிலைப்படுத்தவும் அதைப் பற்றின தெளிவும் அவர்களுக்கு கிடைக்கும்.

உதாரணத்திற்கு ஒரு குழந்தை கிரிக்கெட் சீசனின் போது ஐபிஎல் ஐ பார்த்துவிட்டு “நான் கிரிக்கெட்டராக வேண்டும்” என்று “பேட் வாங்கி கொடு” “பால் வாங்கி கொடு” என்று கேட்டு அவற்றை உபயோகப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவார்கள். எனக்கு சச்சின் தெண்டுல்கர் தான் ரோல் மாடல் என்று கூறுவார்கள்.

சிறிது காலம் கழித்து அந்த எண்ணத்தில் மாற்றம் ஏற்படும் இப்படி அவர்கள் தன் சூழலுக்கு ஏற்ப ஆசையை வளர்த்துக் கொள்வது என்பது இலக்கை நோக்கி பயணிப்பது அல்ல என்று அந்த குழந்தைகளுக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும் அதற்காக தான் இந்த பயிற்சி.

இந்த 21 நாட்கள் கழித்து அவர்களுக்கு இலக்கை பற்றின சிந்தனையும் நேரம் காலம் பற்றிய பொறுப்பும் அதிகரிப்பதை உணர்வீர்கள்.

தொடர்ந்து பேசுவோம்……