பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. (குறள் -618)
விதிப்பயனால் விளைவதெல்லாம் பழி ஆகாது. அறிய வேண்டியவைகளை அறிந்து முயற்சி செய்யாமல் இருத்தலே பழியாகும்.
வள்ளுவ பெருமானின் இக்குறள் கூறும் பொருளை நாம் வேறொரு கோணத்தில் பார்க்கலாம்.
ஒரு லட்சியத்தை அடைய நினைப்பவன் இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி பயணிக்க வேண்டும் பிறகு திட்டமிடுவதில் கவனம் செலுத்தி அதை செய்து முடிக்க வேண்டும் இதுவே ஒரு மனிதன் வெற்றியாளன் என்ற பெயரை ஈட்டி தரும் என்று பொருள் கொள்ளலாம்
லட்சியம் + திட்டமிடல் + இலக்கு = வெற்றி
சென்ற கட்டுரையில் பயிற்சி முறை கேள்விகளை பார்த்தோம் .அவற்றிற்கு விடைகளை எழுதி பார்த்து பின் அவற்றை நாம் செய்கிறோமா என்று ஒரு தெளிவு பிறந்தபின் நமது இலக்கை எழுதி அதனை அடையும் வழிகளை பட்டியலிட வேண்டும்.
இந்த பயிற்சியை குழந்தைகள் முன் செய்ய வேண்டும் இதற்கான நேரம் எடுத்து அவர்களுடன் ஆலோசித்து செய்யும்போது அவர்களுக்கு திட்டமிடுதல், இலட்சியம் போன்ற விஷயங்களில் விளக்கமும், புரிதலும் ஏற்படும்.
ஒரு இலக்கை அடைவதற்கு நம்முள் கொழுந்து விட்டு எரியும் ஆசையிலிருந்து தான் வெற்றி பெறுவதற்கான தூண்டுதல் வருகின்றது. மாவீரன் நெப்போலியன் மனித மனம் எத்தனை வலிமை வாய்ந்தது என்று எழுதியுள்ளார். அதில் அவர் “ மனிதனின் மனம் எதை தொடர்ந்து சிந்தித்து நான் இதை செய்வேன் என்று நம்புகின்றதோ, அவற்றை உண்மையிலேயே செய்து சாதித்து காட்டும் வலிமை மனித மனத்திற்கு உண்டு என்று எழுதுகிறார்.
இவரைப்போலவே எம் எஸ் உதயமூர்த்தி அவர்களின் “எண்ணங்கள்” என்ற புத்தகத்திலும் மனித மனதின் வலிமை பற்றி எழுதி இருப்பார்.
முதலில் இலக்குகளை தீர்மானிக்க வேண்டும், பின் அதை எந்த அளவிற்கு நம்புகிறோம் என்பதையும்,அதன் மீது நாம் எத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதும், பின் நாம் அதை தேர்ந்தெடுத்தது சரியா என்ற தெளிவான பார்வையும் வேண்டும். இவை அனைத்தும் தெளிவாக திட்டமிட்ட பிறகு நம் வெற்றிபயணத்தை துடங்க வேண்டும்.
இந்த உண்மைக் கதையை உங்களிடம் பகிர விரும்புகிறேன்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த அருணிமா சின்ஹா என்ற 34 வயது, பெண் , அவள் கனவு எவரெஸ்ட் சிகரத்தைத் தொடுவதே .இவர் 2011 ஆம் ஆண்டில் ஒரு ரயில் பயணத்தின் போது கொள்ளையர்களால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளப்பட்டாள். அவள் அவர்களை எதிர்த்த போது அவளது இடது காலில் எலும்பு முறிந்தது. முதுகு தண்டிலும் பல முறிவுகள் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்கு மேல் சரியான சிகிச்சை கிடைக்காமல் ஒரு காலை முற்றிலுமாக இழந்தாள் தொடர் . சிகிச்சைக்கு பிறகு ஐந்து நாட்களுக்கு மேல் மயக்கத்தில் இருந்து கண் திறந்தாள்
எவரெஸ்ட் சிகரத்தை தொடும் லட்சியத் தீ அவளுக்குள் அணையாமல் இருந்ததை அவளின் தாய் மாமன் கண்டறிந்தார், மேலும் எவரெஸ்டில் இந்தியாவின் தேசிய கொடியை ஏற்றுவது என்று அவள் தன் இலக்கில் தெளிவாக இருந்தமையால், இந்த விபத்திற்குப் பிறகும் விடாமல் பயிற்சிகளை மேற் கொண்டாள் . நொறுங்கிப் போன இடதுக் காலில் செயற்கை கால் பொருத்தப்பட்டது . 2013 மே மாதம் உலகின் உயர்ந்த சிகரம் என்று சொல்லப்படும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தேசியக் கொடியை அங்கு பறக்க விட்டாள் அருணிமா சிம்ஹா.
தொடர்ந்து ஆப்ரிக்காவின் கிளிமஞ்சாரோ ,ஐரோப்பியாவின் எல்பராஸ், ஆஸ்திரிலேயாவின் கொஸ்கியஸ்கோ போன்ற மலைகளில் ஏறி சாதனைப் படைத்தார்
உடல் வலிமை என்பது மனதில் உள்ளது என்பதை உணர்த்தும் இத்தகைய உண்மைக் கதைகளை குழந்தைகளிடம் கூறி அவர்களை தங்கள் இலக்கை தீர்மானித்து தெளிவாக அதை நோக்கி பயணிக்க உதவுங்கள். இத்தகைய உண்மைக் கதைகள் நம் வாழ்க்கையில் பல நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
தொடர்ந்து பேசுவோம்…….
Leave a comment
Upload