தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 78 - பரணீதரன்

20240613231749402.jpg

நக்கீரதேவ நாயனாரின் (நக்கீரன்) - பதினொன்றாம் திருமுறையில் இருக்கும் சிவபெருமான் மீது பாடிய திருவெழுக்கூற்றிருக்கை கவியை பற்றி சென்ற வாரம் கூற ஆரம்பித்த பரணீதரன் மீதி வரிகளைப் பற்றித் தொடர்கிரார்.

நான்முகனாகிய பிரம்மதேவனின் (பிரம்மதேவனுக்கு முதலில் ஐந்து முகம் இருந்தது. அதில் ஒரு முகத்தை சிவபெருமான் கொய்ததால் நான்முகன் என்று அழைக்கப்படுகிறார்) மேல் திசையை நோக்கி இருந்த தலையை கொய்து அந்தக் கபாலத்தை ஏந்தினாய். மார்பிலே நூலினால் ஆன முப்பரி நூல் (மூன்று பிரிவை உடைய நூல் / மூன்று செயல்களை புரிய வேண்டும் என்று தினமும் தெரியப்படுத்தும் ஒரு கருவி / மனது, வாக்கு, செய்கை என்ற மூன்றிலும் தூய்மை வேண்டும் என்று தினமும் ஞாபகப்படுத்தும் ஒரு கருவி) என்று அழைக்கப்படுகின்ற பூநூலை அணிந்திருக்கிறாய். பிரம்மதேவர் மற்றும் திருமால் ஆகிய இருவருடனும் நீயும் ஒன்றாக சேர்ந்து ஏகபாத மூர்த்தியாக இருக்கிறாய். (4 3 2 1) (1)

உன்னுடைய ஆதியை காணாத பிரம்மதேவன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் மூவுலகங்களிலும் சுற்றி நான்கு திசைகளிலும் அலைந்து திரிந்த பொழுது ஐந்து பெரும் குன்றங்களை உடைய நெருப்பு பிழம்பாக நீ தோன்றினாய். உன்னுடைய சடையில் கங்கை ஆறு உள்ளது. உனக்கு ஐந்து விதமான முகங்கள் (சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம்) உள்ளது. நான்கு வேதங்களும் உன்னுடைய வாய்மொழியாக வெளிப்பட்டது. உனக்கு மூன்று கண்கள் உள்ளது. உனது செவியில் இரண்டு குழைகள் (தோடு) உள்ளன. நீ ஏறுகின்ற வாகனமான நந்தி ஒன்றே. (2 3 4 5 6) ( 5 4 3 2 1)

உன்னுடைய தனிக் காட்சியைக் (ஆதி அந்தம் இல்லாத பெருஞ்சோதி) கண்டு பார்வதி தேவியானவள் நடுங்க, யானையின் தோலை கிழித்து உனக்கு ஆடையாக பொருத்திக் கொண்டாய். மூன்று வகையான தீக்களை (ஆகவனீயம் , தட்சிணாக்கினி , காருகபத்தியம்) வளர்த்து, நான்கு வேதங்களை ஓதி, ஐம்புலன்களை அடக்கி, ஆறு வகையான தொழில்களை (ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்) செய்யும் அந்தணர்க்கு உறுதியான நன்மைகளை செய்கிறாய் (1 2 3 4 5 6)

ஏழு நரம்புகளை கொண்ட ருத்ர வீணை என்ற இசை கருவியை இசைத்தாய். கடலில் அமுதத்தை கொடுத்தாய். ஐந்து சபைகளிலும் (ரத்ன சபை - திருவாலங்காடு, கனக சபை - சிதம்பரம், ரஜத சபை - வெள்ளி - மதுரை, தாமிர சபை - திருநெல்வேலி, சித்திர சபை - குற்றாலம்) ஐந்து விரல்களுக்குள் விரலியர்கள் என்று அழைக்கப்படும் நடன மங்கைகள் இசைக்கும் உடுக்கையை வைத்துள்ளாய். முன்னோரு காலத்தில் கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்கள் நால்வரும் அறங்கள் எவை என்று கேட்க அதற்கு மௌனத்தாலேயே பதிலை கூறினாய். (7) (6 5 4)

நன்றி என்பது சிறிதும் இல்லாத கடலின் நடுவே ஆட்சி செய்து கொண்டிருந்த சூர பத்மனையும் அவனுடைய தம்பிகளான தாரகன் மற்றும் சிங்கமுகனையும் வேலெறிந்து கொன்ற ஒருவனான முருகப்பெருமானின் தந்தையே. இதில் இரண்டு என்று சொல்லிற்கு சூரன், பதுமன் என்ற இருவர் சேர்ந்த ஒரு உருவமாக இருந்த சூரபத்மனையும் குறிக்கும். அதனால்தான் சூரபத்மன் பின்னால் மயிலாகவும் சேவலாகவும் மாறினான். (3 2 1)

மிடறினால் (தொண்டை) இரு வேறு நிறங்களை கொண்டாய். கழுத்து நீல நிறம். அதனால் நீலகண்டன் என்ற பெயர். உடல் செந்நிறம். அதனால் சிவன் என்ற பெயர். இதற்கு மற்றொரு விளக்கமும் உண்டு. உருவமாக ருத்திரனாகவும், அருவமாக லிங்க வடிவத்திலும் இரண்டு வடிவில் இருக்கிறாய் என்று நக்கீரர் கூறுகிறார். தர்மம் மூன்று வகைப்படும் (உலக தர்மம் - லௌகீக தர்மம், வேத தர்மம் - வைதீக தர்மம், தேவ தர்மம் - சிவதர்மம்) என்பதை உலகத்திற்கு உணர்த்தினாய். நான்கு வகையான இலக்கண ( எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம் யாப்பிலக்கணம்) இலக்கியங்களை (வேதங்கள், ஸ்மிருதிகள், காவியங்கள், புராணங்கள்) வகைப்படுத்தி சொல்லி கொடுத்தாய். ஐந்து வகையான அம்புகளை (தாமரை மலர் , அசோக மலர் , குவளை மலர் , மாம்பூ , முல்லை மலர்) கொண்ட மன்மதனையும் காலன் என்று அழைக்கப்படுகின்ற எமனையும் அழித்தாய். அறுவகை சைவ சமயங்களை (சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம்) நெறிப்படுத்தி வகைப்படுத்தி கொடுத்தாய். ஏழு ஸ்வரங்களை வைத்து ராவணன் சாம கானம் பாட மகிழ்ந்து அவன் செய்த தவறை பொறுத்தருளினாய். (1 2 3 4 5 6 7)

எனக்குள் தெளிவான சிந்தனையை கொடுத்து, ஐந்து வகையான நடையை உடைய (மல்லகதி - வேகநடை, மயூரகதி - மயில் நடை, வானரகதி - குரங்கு நடை, சசகதி - முயல்நடை, சரகதி - அம்பு நடை) குதிரையை போன்ற எனது மனத் தேரினை விடுத்தாய். அழகான நான்கு தோள்களை கொண்டவனாக இருக்கிறாய். நந்தியம்பெருமான், பிரிங்கி முனிவர் மற்றும் கீர்த்தி முகம் போன்ற பூதங்கள் ஆகிய மூவரும் போற்ற இரண்டு கண்களை உடைய பெரிய கட்பறை (தபேலா போன்ற வாத்தியம்) ஒலிக்க தேன் சொட்டுகின்ற மலர் மாலைகளை உடைய மலைமகளான பார்வதி தேவி பார்க்க நடனம் ஆடிய நடராஜ தெய்வமே. (6 5 4 3 2 1)

அதனால், சிறியவனாகிய அடியேன் கூறிய அறிவில்லாத வாசகங்களை, சிறிது என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. மிகுந்த வாசனை உடைய கொன்றை பூவையும், வெண்ணிலவையும் அணிந்து கொண்டு கவிதையை (கொங்குதேர் வாழ்க்கை) பாடிய சிவபெருமானே, உங்களது குளிர்ந்த பாதத்தில் பணிந்து தொழுகிறேன்.

அடியேன் உங்களது பாதங்களில் பணிந்தேன், பரமேட்டியே ( பரமேஸ்வரரே) பால் போன்ற வெண்மையான திருநீரை அணிந்து, திரு ஆலவாய் என்று அழைக்கப்படும் மதுரையில் அமர்ந்துள்ளாய். கோபம் தணிந்து என் உடம்பில் உள்ள எரிச்சல் தீர தாங்கள் அருள் புரிய வேண்டும் வேதங்களை உருவாக்கிய வேதியரே. சந்தேகம் ஏதும் இல்லாமல் அடியேன் புரிந்து கொண்டேன் (பெண்களின் கூந்தலுக்கு இயற்கையான மணம் உள்ளது என்பதை).

பத்மினி ஜாதி பெண்களுக்கும் (சம்யுக்தை, பாண்டியன் மனைவி போன்றவர்கள்), தேவ மங்கையருக்கும், கற்புக்கரசிகளுக்கும், கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகியவர்களுக்கும் கூந்தலில் இயற்கையில் மணம் உண்டு என்பதை சிவபெருமான் “தருமிக்கு பொற்கிழி கொடுத்த திருவிளையாடல்” மற்றும் “கீரனை கரையேற்றிய திருவிளையாடல்” ஆகிய இந்த இரண்டு சம்பவங்களில் நக்கீரருக்கு தெரியப்படுத்துகிறார். நக்கீரரின் தலைக்கணத்தையும் அழித்து அவரை ஆட்கொள்கிறார்.

இத்துடன் திருவெழுக்கூற்றிருக்கை முடிந்தது எனக்கூறிய பரணீதரன் அடுத்த வாரம் வேறு பந்தங்களை பார்க்கலாம் என்றவாறே விடை பெறுகிறார்.