தொடர்கள்
ஆன்மீகம்
90 கோடி செக் ! முனியப்பன் கோவில் உண்டியல் - மாலா ஶ்ரீ

20240606074054819.jpeg

தர்மபுரி மாவட்டம், பெண்ணாகரம் அருகே பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் மதிய வேளைகளில் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக, முனியப்பன் கோயிலின் முன்புறத்தில் ஒரு உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த உண்டியலை மாதமொரு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திறந்து, அதன்மூலம் கிடைக்கும் காணிக்கை பணத்தில் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் முனியப்பன் கோயிலில் அன்னதான உண்டியலைத் திறந்து, வழக்கம் போல் அறநிலையத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது, காணிக்கை பணத்துக்கு இடையே ஒரு ‘செக்’ இருந்துள்ளது. அந்த செக்கை பிரித்து பார்த்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில், அந்த செக்கில் ₹90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 என்ற தொகையுடன் நிரப்பப்பட்டு இருந்தது!

அந்த காசோலைக்கான வங்கி கணக்கு எண், தர்மபுரியில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் உள்ளதா என்பதை அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்தனர்.

முனியப்பன் கோயில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகைக்கான செக் போடப்பட்டிருப்பது பற்றி கிராம மக்களிடையே பேசுபொருளாக மாறிவிட்டது.

அதிகாரிகள் கூறுகையில், ‘‘முனியப்பன் கோயிலின் அன்னதான உண்டியலில் காணிக்கையாக ₹90.42 கோடிக்கான செக் போட்ட நபர் யார் என்பது குறித்து விசாரிக்கிறோம். மேலும், அந்த செக்குடன் வங்கியில் விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் பணம் எதுவும் இல்லை எனத் தெரியவந்தது.

முனியப்பன் அருளால் அந்த மனிதருக்கு 100 கோடிவரட்டும். செக் உண்மையாகட்டும் !!