மலை மீது வீற்றிருக்கும் முருகன் என்றாலே ஒரு தனிச்சிறப்பு உண்டு. தமிழ் நாட்டில்,தேனி மாவட்டத்தில் பொதிகை மலையும் சதுரகிரி மலையும் இணைந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பிரிவுகளில் கம்பம் அருகே 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சுருளி மலை முருகன் கோயில். இதனை நெடுவேள்குன்றம் என்றும் அழைக்கின்றனர். முருகன் இத்தலத்தில் குகைக்கோயிலில் எழுந்து அருள்பாலிக்கிறார். இங்கு முருகப்பெருமான் சுருளிவேலப்பர், சுருளி ஆண்டவர் என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார். இந்த இடத்தில் அருவியானது இனிய சுருதியுடன் கொட்டுவதால் சுருதி எனப்பட்ட தீர்த்தம் சுருளி என மருவியது. இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் என்பதால் சுருளி அருவி மிகவும் பிரசித்தி பெற்றது. பௌர்ணமி நாட்களில் இக் கோயிலுக்கு தேவர்களும், சித்தர்களும், மகான்களும் இன்றும் வருகை தருகின்றனர் என்பது சிறப்பு.
ஸ்தல புராணம்:
புராண கதையின்படி, சிவபெருமான், பார்வதி தேவியின் தெய்வீக திருமணத்தைக் காண ஏராளமான ரிஷிகளும் தேவர்களும் கயிலாய மலையை அடைந்தபோது, வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. சிவபெருமான் அகஸ்திய முனிவரைப் பூமியின் அளவை சமன் செய்ய தெற்கு நோக்கி அனுப்பினார். இதனால் அகத்தியரால் சிவன் - பார்வதி திருமணக்கோலத்தைக் காண முடியவில்லை என்று வருத்தப்பட்ட போது, இங்குள்ள குகையிலே அகத்தியருக்கு மணக்கோலத்தில் ஈசன் காட்சி தந்தார். இதனால்தான் கைலாச குகை எனப் பெயர் பெற்றது.
மகாவிஷ்ணுவின் மகளான வள்ளியை மலை அரசனான நம்பிராஜன் வளர்த்து, முருகப்பெருமானுக்கு மணம் முடித்து வைத்தார். திருமண சீராக நம்பிராஜன் தனது ஆட்சிக்குட்பட்ட மலைப் பிரதேசங்களில் இந்த மலையும் ஒன்று. எனவே இம்மலையில் முருகப்பெருமான் குடிகொண்டு அருளினார்.
ஒருசமயம், சனி பகவான், தனது நியமனப்படி,தேவர்களை ஆட்கொள்ளவேண்டி வந்தது. தேவர்கள் அனைவரும் தங்களைக் காத்தருளும்படி இங்குள்ள முருகனைச் சரணடைந்து, வழிபட, சனியின் பிடி அகன்றது.
சிவபெருமானிடம் இலங்கையை ஆண்ட இராவணன் தனது தவ வலிமையினால் அண்டச் சராசரங்களையும் ஆளும்படி வரம் பெற்று தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். தேவர்கள் அனைவரும் இங்குள்ள கைலாசநாதர் குகையில் அருள்புரியும் மகாவிஷ்ணுவிடம் சரணடைந்து காத்து அருள வேண்டினர். இதற்குள் இராவணன் தனது அரக்கர் படையுடன் இங்கு வந்தான். தேவர்களைக் காக்க மகாவிஷ்ணு பூத சொரூபத்துடன் பஞ்ச பூதங்களாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். இதைக்கண்டு நடுங்கி இராவணன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். இத்தகைய பெருமை வாய்ந்த கைலாசநாதர் குகையின் மேற்பகுதியில் சுருளிவேலப்பர் அருள் புரிகிறார்.
ஸ்தல அமைப்பு:
இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது . இந்த சுருளி மலைப் பகுதில் பல தேவர்களும் ரிஷிகளும் சித்தர்களும் தவம் புரிந்துள்ளனர்.
இக்கோயிலின் சுருளிவேலப்பர் கருவறையில் சிவன், விஷ்ணு, விநாயகர் அனைவரும் காட்சி தருவது சிறப்பான அம்சமாகும்.
இங்குள்ள முருகப்பெருமானும் பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டிக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இத்தல எம்பெருமான் சுருளியாண்டி என்று அழைக்கப்படுகிறார்.
இம்மலையில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி சிலைகள் உள்ளன. அத்தெய்வங்கள் இன்றும் அங்கு வசித்து வருவதாக ஐதீகம்.
இங்குப் பூத நாராயண பெருமாள் சந்நிதிக்குள் சிவலிங்கமும் இருக்கிறது. இது ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. இங்கு விபூதி, குங்கும பிரசாதத்துடன், சடாரி ஆசீர்வாதமும் செய்கின்றனர். உச்சிக்கால பூஜையின்போது துளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது. இக்கோயில் பெருமாளுக்குப் பரிவார மூர்த்தியாக நரசிம்மரும், சிவனுக்கு தட்சிணாமூர்த்தியும் இருக்கின்றனர். இவர், இடது கையில் சின்முத்திரையுடன் காட்சியளிக்கிறார்.
சுருளியாண்டியவர் சந்நிதியின் கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள இமயகிரி சித்தர் குகை மிகவும் பிரபலமான பெயர் பெற்றது. இக்குகை தவிர இந்த ஸ்தலத்தில் தனித்தனிக் குகைகள், தீர்த்த குளங்களுடன் உள்ளன. விபூதிக்குகை, கன்னிமார் குகை, சர்ப்பக்குகை, கிருஷ்ணன் குகை, பாட்டையர் குகை எனப் பல குகைகள் உள்ளன.
இங்கிருக்கும் கன்னிமார் குகையில் நாகக் கன்னிகள் வாழ்வதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள நாகக் கன்னிகள் அனுமதித்தால் மட்டுமே கயிலாய குகைக்குப் பக்தர்கள் செல்ல முடியும் என்று நம்பப்படுகிறது.
இங்குள்ள மரம் ஒன்றின் மீது தொடர்ந்து நீர் விழுந்ததில் அது பாறையாக மாறி காட்சி அளிக்கிறது. கோயில் வளாகத்தில் விபூதி பாறை உள்ளது. இந்த பாறையில் தீர்த்தம் பட்டு ஈரமான மணல் துகள்கள் காய்ந்த பின் வெண்ணிறத்தில் விபூதியாக மாறுகிறது இந்த விபூதியைப் பிரசாதமாகத் தருகிறார்கள்.
இங்குள்ள முருகப்பெருமானுக்குச் சர்க்கரைப் பொங்கல் இனிப்பு நெய் பொங்கல் புனித பிரசாதமாக வழங்கப் படுகிறது. இக்கோயிலில் உள்ள தீர்த்தம், சுரபி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்தல சிறப்பு:
அகத்தியருக்குத் திருமணக் கோலத்தில் சிவபெருமான் காட்சியளித்த ஸ்தலம். இங்கிருக்கும் தண்ணீரில் இலை, தண்டு போன்றவை 48 நாட்கள் தொடர்ந்து இருந்தால் கல்லாக மாறும் என்று கூறுகிறார்கள். இங்கே இருக்கும் ஈர மண் அள்ள அள்ள விபூதியாக மாறும் என்று நம்பப்படுகிறது. இத்தலத்தின் மூலவரான சுருளிவேலப்பர் குழந்தையில்லாதவர்களுக்கு இறுதிக் கடன்களைச் செய்தார். அதனால் இறுதிக் காலத்தில் குழந்தை இல்லாதவர்கள் மூலவர் சுருளிவேலப்பரை தங்கள் குழந்தையாக எண்ணுகின்றனர்.
ஓம்கார’ வடிவில் உள்ள இம்மலையில் கன்னிமார்கள் நடனமாடிய ரேகைகளுடனான பாறை உள்ளது. இதில் தவம் செய்திடப் பாவங்கள் விலகி முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருவிழாக்கள்:
இக்கோயிலில் சித்திரை உத்ஸவம், ஆடி பதினெட்டு, தைப்பூசம், வைகுண்ட ஏகாதசி, ஆடிப்பூரம், வைகாசி விசாகம், சிவராத்திரி, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
நம் வாழ்வில் செய்த பாவங்களிலிருந்து விடுபட இத்தல முருகனை வேண்டி சுரபி நதியில் நீராடி பால்குடம் எடுத்து முடிக்காணிக்கை செலுத்தி, விசேஷ அபிஷேகங்கள் செய்வது நன்மை பயக்கும். மற்றும் வேண்டும் வரம் கிடைக்கும், தீராத நோய்கள் தீர்ந்து அனைத்து சுகங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை. இங்கு தைப்பூச திருநாளில் பால் குடம் ஏந்தி வழிபட்டால் நினைத்த காரியம் நிறை வேறுகிறது . அமாவாசை பௌர்ணமி நாட்களில் அன்னதானம் வழங்கி வழிபடுபவர்களுக்கு முருகனின் பரிபூரண அருள் கிடைப்பதோடு பித்ரு தோஷங்களும் விலகுகின்றன என்பது ஐதீகம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினசரி காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் மாறுதலுக்குப்பட்டது.
கோயிலுக்குச் செல்லும் வழி:
அருகிலுள்ள பேருந்து நிலையம் - சுருளி மலை
அருகிலுள்ள இரயில் நிலையம் - தேனி
அருகிலுள்ள விமான நிலையம் - மதுரை
இந்த கோயிலுக்குச் செல்ல மதுரை வந்து தேனிக்கு பஸ் மூலம் வந்த பின் கம்பம் அல்லது உத்தம பாளையம் செல்லவேண்டும்.
இந்த இரண்டு ஊர்களில் இருந்தும் சுருளி தீர்த்தம் செல்லும் பஸ் மூலம் சுருளிப்பட்டி வந்து இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தால்தான் இந்த ஸ்தலத்தை அடைய முடியும். நடைபாதை மற்றும் படிகளுக்கு இரண்டு புறமும் செடிகளும் அடர்ந்த புதருமாக இருந்தாலும் அது தரும் மூலிகை மணமும், சுகமான தென்றலும் மனதிற்கு புத்துணர்சியாக உள்ளது.
மேலும் சுற்றி உள்ள அருவிகளும் பசுமை நிறைந்த காடுகளும் இப்பயணத்தை இன்னும் மேன்மை அடையச் செய்கிறது.
சுகங்களை அள்ளி தரும் சுருளி மலை முருகப்பெருமானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
Leave a comment
Upload