‘நீ முன்னாலே போனா
நா பின்னாலே வாறேன்’னு
பாயோஸ்கோப்பு பாட்டடியோ!
இப்பவுந் தானே பின்னாலே வாறேன்டி.
எப்பவுந் தானே பின்னாலே வந்தேன்டி!
வெண்டை நெறஞ்சக் கூடையேந்தி
தண்டைச் செலம்பசைஞ்சு தாளம் போட
கெண்டைக்கால் மினுக்கச் சேலை கட்டி
வண்டு விழியுருட்டி வரப்போரம் நடந்தவளே!
பாத்த நாள்தொட்டே பின்னோடே வாரேன்டி!
கழுத்துவெட்டி வாய்பழிச்சு கண்மொறைக்கப் பாத்தவளே!
கருப்பழகி! கண்ணாட்டி! என்னியக் கண்ணாலம் கட்டிக்கிட்டே!
வெட்டியாளா திரிஞ்சயென்னை மனுசனாக்கி நிமிர்ந்தவளே!
பயிர்வச்ச வயலெல்லாம் அம்பாரம் வெளைஞ்சாலும்
வருசமெல்லாம் கடந்தாலும் வமிச விருத்தியில்லே!
ஒனக்கே நான் பிள்ளே! எனக்கே நீ பொண்ணு!
சலிப்பேதும் காட்டாமல் கிழவியானே தங்கமே!
முன்னநின்னே நடத்துனியே ! கம்பூனும் காலமாச்சு!
முன்னபின்னே ஒருமட்டா போனாலும் கவலையில்லே!
கொஞ்சுனதும் கூடுனதும்
கொள்ளைக் குதுகுலமேயானாலும்
மிஞ்சுனது நெனப்புகளும் சேர்ந்தளைஞ்ச மண்ணுமடி!
காசுப்பணம் வேணாம் வண்டிமோட்டாரு வேணாம்!
வேசங்கட்டி வாழும் விருதாப் படிப்பும் வேணாம் !
சாமிபூதம் வேணாம் பூமிபொன்னுன்னே பொக்கிசமும் வேணாம்!
எனக்குன்னு நீ பதற உனக்குன்னு நான் உருக வேறென்ன வேணுமடி!
Leave a comment
Upload