தொடர்கள்
பொது
துளியில் திரளும் உலகம்? -ராகவன் ஸாம்யெல்

20240424204402885.jpeg

அழகாய் தானே இருக்கிறது
எல்லாமும்

கைகுவிக்கத் தேங்கிய மழை
எனக்காக பெய்தது தானே

பனித்துளி தெறிக்க தாவும்
வெட்டுக்கிளிகளின்
விசிறிப் பிசிறல்கள்
உடைந்த வானவில்
கண்ணாடி வளையல்கள்
என வரித்துக் கொண்ட
நிழற்சட்டை உதிர்ந்தது
பொலிவேற்றம் என்பதில்
யவ்வனம் ஒரு
ஜிகினா பொன்மினுக்கு

மஞ்சள் வெயிலில் உலரும்
வெண் பருத்தித் துணிகள்
வலசைப்பறவைகளாய்
இளைப்பாறும் கொடியில்
கண்ணத்தை இழைத்தபடி
வாசிப்பது இசையா பேச்சா
என்ற குழப்பம் இயல்பானது தானே

அப்போதிருந்தாய் நீ
என்பதும் எப்போது இல்லாதிருந்தாய்
என்பதும் ஒன்று தானே?

விரல் தவறவிட்ட வெறும்பொழுதின்
அடர்த்தி
உறங்கவொட்டாமல் விரட்டும்
சாமக்கோடாங்கியின்
சாம்பல் புழுதியென
புலர்வெளிச்சம்
மார்கழிக் கால்கள் வரைந்த
சித்திரங்கள்
பூசனிப்பூவின்றி இன்னும்
கிடக்கின்றதே அசங்காமல்
ஒரு நீலவெல்வெட்டில் பொதிந்த
பொக்கிஷமாய்

இங்கே தானே கிடக்கிறது
அந்த வாழ்க்கை
சப்பரத்தட்டில்
உறங்கிக்கொண்டிருக்கும்
மணி போல
வடம் பற்ற கினுங்காதா?

புளியமுத்துகளையும்,
முனை மழுங்கிய தட்டாங்கற்களையும்
மாடக்குழியின்
விளக்கின் பின்னால்
மறைத்து வைத்திருக்கும் சிறுமி
போல
நிறை வெளிச்சத்தில் மறையும்
நம் சேகரங்களை
கண்டடைந்தது போல
பொழுதுகளை வாய்க்கச்
செய்கிறது தானே வாழ்க்கை?

எனக்கென்ன அலுப்பு
இருந்து விடப் போகிறது?
எனக்கானதையும்
உனக்கானதையும்
வாழ்க்கை
சரியாகவே
பிரித்துக் கொடுத்திருக்கும்போது
ஒன்றிரண்டு புளியமுத்துகள்
உனக்கு அதிகம்
வரும் பட்சத்தில்
நான் மறைத்து வைத்திருந்த
பொரிவிளங்காய் உருண்டையின்
இனிப்பை
மனசெங்கும் தடவி
மருந்தாக்க இயல்கிறதே
இந்த வாழ்க்கையின் உதவியினால்?
என் கதவுகளை
பிறாண்டும்
எதிர் வீட்டு ஜிம்மியும்
விடாமல்
உன்னை துரத்தும்
’மோதி’யும்
தனக்குத் தெரிந்ததையே
செய்தன
தத்தமது வாழ்க்கைகளைப் போல