(இவங்களோ!!!)
(இவங்களோ!!!)
(இவங்களாய் இருக்கலாம்)
"டைட்ஸு போட்டுகிட்டு ட்ரில்கிளாஸ் மூவ்மெண்ட்ஸ் போல ஒரு டான்ஸு..."
ஏதோ புதுப்படத்தைப் பார்த்து விட்டு, அப்போது வளர்ந்து வந்து கொண்டிருந்த ஒரு நடிகையைப் பற்றி ரவிசுப்ரமணியன் விவரித்துக் கொண்டிருந்தான்.
இன்னொரு நண்பன் அந்த விவரிப்பை வேறு பரிமாணத்துக்குக் கொண்டு போனான்.
அடுத்து, வகுப்பெடுக்க பேராசிரியர் வருவதற்கான இடைவெளி நேரம்.
கல்லூரி வகுப்பறையில் ஐந்தாறு மாணவத் தோழமைகளின் வம்பளப்பு நடந்து கொண்டிருந்தது. அவர்கள் பேச்சைக் கேட்கும் தூரத்தில், மேஜையில் கையூன்றியபடி ஏதோ யோசித்துக் கொண்டிருந்தேன். பார்வை மட்டும் அந்த வம்பு ஜமா மேல்.
"மோகன் ஏண்டா உம்முன்னு ஒதுங்கியிருக்கான்?" இது நட்டு.
லக்ஷ்மி என்னும் லக்ஷ்மி நரசிம்மன் ஊடே புகுந்தான்.
" பின்னே என்னடா?
நடிகை ‘......’வை பத்தி அவனை வச்சுகிட்டே காமெண்ட் அடிக்கிறீங்க?!
'.......' நம்ம மோகனோட சொந்த மாமா பொண்ணுடா!"
(நடிகையின் பெயரை, என்னை அடித்துக் கேட்டாலும் இங்கு சொல்லப்பட மாட்டாது!)
லக்ஷ்மியின் புதுகுண்டு அந்த இடத்தையே மௌனவெளி ஆக்கி விட்டது.
'அப்படியாடா?' என்பதுபோல் ஒரு க்ஷணநேரம் லக்ஷ்மியை ஏறெடுத்துப் பார்த்தேன். 'இன்னைக்கு அப்படித்தான்!' என்பதுபோல் அவனின் அரைக்கண்ணடிப்பு.
அவன் திரித்த சரடை நானும் பிடித்துக் கொண்டேன். என் முகத்தில் வருத்த ரேகைகளை மேலும் படர விட்டேன்.
ஒரு பக்கத் தலைசாய்ப்பில், என் கண்கள் ரவிசுப்ரமணியனை வெற்றுப்பார்வை பார்த்தன.
"ஸாரிடா மோனிகா! அசடு மாதிரி சொல்லிட்டேன்" என்று அவன் சமாதானமாக ஏதோ சொல்லவும், எகனாமிக்ஸ் பேராசிரியர் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மனித அலையாக கரங்கள் எழுந்து அடங்குவதுபோல், வகுப்புக்குள் தலைகள் அக்கம்பக்கமாக அசைந்து செய்திப் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
முன்பெஞ்சில் அமர்ந்திருந்த லக்ஷ்மி திரும்பினான். " மாப்ள! உன் கதைதான் சுத்தி ஓடிக்கிட்டிருக்கு!" என்று சிரித்தான்.
"ஏய் லக்ஷ்மி நரசிம்மன்! டூ யூ டேக் யுவர் ஃபுட் வித் எ பின்ச் ஆஃப் சால்ட்? ஸ்டாப் டாக்கிங்!" என்று புரொபசர் சங்கரன் வெடிக்க, பம்முவதாக நடித்தான்.
வகுப்பு முடிந்தது. '’மோகா! உனக்கு ‘……’ சொந்த மாமா பொண்ணா?சொல்லவேயில்ல?'’என்றான் ஒருவன்.
“தினம் முட்டை சாப்ட்டு உடம்பைத் தேத்து ஐய்யிரே ! ‘ ....’ மாமா பொண்ணுன்னா அவளைப் பிடிச்சு நீயும் சினிமால பூந்துடு. களையாத் தானே இருக்கே!" என்றான் இன்னொருவன்.
(உங்களுக்கெல்லாம் கோடிட்ட இடத்தை நிரப்பி அந்த நடிகை பெயரைச் சொல்ல மாட்டேனே!)
லக்ஷ்மி மூட்டிய அந்த அக்கினிக்குஞ்சு காட்டில் திகுதிகுவெனப் பரவத் தொடங்கியது. எங்கள் வகுப்பைத் தாண்டியும் பரவியது.
சீனியர் மாணவர்கள் நேரடியாக என்னைக் கேட்காமல், என்னைத் தாண்டிச் செல்லும்போது ‘.....’ஐ வர்ணித்துப் பேசி, ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தபடி கடப்பார்கள். என்னை வெறுப்பேத்துராங்களாமாம்!
அன்று மாலை நான் மணி கடையில் நின்றிருந்தபோது, எங்கள் அபிமான போராசிரியர் பி.என் என்ற பி.நடராஜன் அங்கு யதேச்சையாக வந்தார்.
"என்ன மோகா? வாட் இஸ் ஹேப்பனிங்?" என்று பேசத் தொடங்கினார். சிறிது நேரம் கழித்து விஷயத்துக்கு வந்தார்.
" மோகா! ‘......’ உன்னோட மாமா பொண்ணாமே? கேள்விப் பட்டேன்.. "
பிஎன் சார் கிளாஸ் எடுக்கும் நேரம்தவிர மற்ற நேரங்களில் மாணவர்களில் ஒருவராக தரையிறங்கிக் கலக்கும் தோழமையுள்ளவர்.
"அதெல்லாம் இல்லை சார். ஏதோ தமாஷுக்கு எங்களுக்குள்ள..." என்று நடந்ததைச் சொன்னேன்.
சிரித்தார். "நல்லா விளையாண்டீங்கடா! இது ‘.......’ஐத் தவிர எல்லாருக்கும் தெரியும் என நினைக்கிறேன் . சொன்னது தான் சொன்னே! ஹேமமாலினி, ஜீனத் அமன்னு சொல்லியிருக்க கூடாதோ?!"
"ஏதோ ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை சார்!" என்றேன். பலமாக என் முதுகில் அறைந்து விடைபெற்றார்.
இப்படியாகத் தானே நானும், என் மாமா பெண்ணாக '.....'ம் கொஞ்ச காலம் வலம் வந்தோம்.
அது ஆச்சு நாப்பத்தெட்டு வருஷம்.
'.....'வுக்கு மார்க்கெட் போய் ஒதுங்கிட்டாங்க. நானும் மார்க்கெட் போய் கவிதை எழுதிகிட்டிருக்கேன்.
இந்தக் கல்லூரிகால நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள அதே நண்பர்கள் தொடர்பில் இன்னமும் இருப்பது ஒரே ஆறுதல்.
'....' தான் என் மாமா பெண் என்று இன்னமும் சில நண்பர்கள் நம்பிக் கொண்டிருக்கலாம். நானும்கூட அப்படித்தான் பலகாலம் நம்பிக் கொண்டிருந்தேன் .
Leave a comment
Upload