தொடர்கள்
அனுபவம்
தாய்மையும் பெண்மையும் - உஷா பாஸ்கரன்

20240410144153428.jpg

இன்று அகில உலக அன்னையர் தினம்.


இது ஒரு நாள் மட்டும் கொண்டாடப் படும் விழா அல்ல.நாளும் அனுசரிக்கப்பட வேண்டிய நியமம். தாயின் கருவறையில் பிறந்த நாம் இயற்கையின் கருவறையில் உருவான இந்த உலகத்தில் தானே வாழ்கிறோம். மனித குலம் மட்டுமல்ல இந்த உலகித்திலுள்ள அனைத்து ஜீவ ராசிகளும் தாயின் மூலம் தான் ஜனிக்க வேண்டும் என்பது இறைவன் வகுத்த நியதி. முட்டையிலிருந்து வரும் பறவைகளாக இருந்தாலும் கூட தாயின் கருவரையிலிருந்து தானே முட்டை உருவாகிறது? "இந்த அண்டத்தில் இருப்பது பிண்டத்திலும் ,பிண்டத்தில் இருப்பது அண்டத் திலும்" என்று திருமூலர் போன்றோர் எடுத்துரைத்த உண்மை.


பெண்மை என்பது தாய்மைக்கு வழிவகுப்பதே தவிர தாய்மைக்கு உத்திரவாதம் அளிப்பதல்ல. 'பெற்றால் தான் பிள்ளையா? ' இந்த வாக்கியத்தை நாம் அனைவரும் கேட்டிருப்போம். குழந்தைகளை பெற்றெடுத்த அம்மா தன் பிள்ளைகளுக்காக தன் ஊண்,உடல்,உயிர் எல்லாவற்றையும் தியாகம் செய்யத் தயங்குவதில்லை. ஆனால் தான் பெற்றெடுக்காத குழந்தைகளுக்காகவும் யார் செய்கிறார்களோ அவர்களின் தாய்மை உணர்வு மிகவும் போற்றுதலுக்குக்குரியது.

அம்மா என்றால் நமக்கு ஞயாபகம் வருவது அன்பு. 'unconditional love' எதையும் எதிர்பார்க்காமல் வழங்கப் படும் அன்பு.

குழந்தையை தனது உதிரத்தில் சுமக்காத தெரசாவுக்கும் சாரதாவுக்கும் உலகம் கொடுத்த பட்டம் அன்னை.

அவர்கள் தக்களின் எல்லையற்ற அன்பினை ஒரு எல்லைக்குள் அடக்காமல் தன்னிடம் வருகின்ற எல்லோரிடமும் பாரபட்சமின்றி காட்டினர்.

அன்பு ஒன்றுதான் கொடுக்கக் கொடுக்கக் குறையாமல் பெருகும் குணமுடையது. பணமோ பொருளோ நாம் மற்றவர்களுக்கு கொடுத்தால் நம்மிடம் அது குறைந்து விடும் ஆனால் அன்பு ஒன்றே கொடுக்கக் கொடுக்கக் குறையாது. நமக்கும் அதிக வட்டியுடன் திரும்பவும் கிடைக்கும் ஒரே முதலீடு. இது புதிதாக சொல்லப்படும் கருத்து அல்ல. ஆயினும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டிய கருத்து.

தத்து எடுத்துக் கொள்வது என்பது அவரவர் முடிவு. ஆயினும் அன்பு செலுத்த காத்துக்கொண்டிருக்கும் உள்ளங்களும், அன்பை பெற காத்திருக்கும் உள்ளங்களும் இணையலாம். குழந்தையில்லாதவர்கள் அன்பிற்கு ஏங்கும் வேறொரு குழந்தையை தத்து எடுத்து பலன் எதிர்பார்க்காத அன்பை கொடுக்கலாமே. தாய்மை என்னும் சொல் அன்பை உள்ளடக்கியது. அன்பு எதையும் எதிர் பார்க்காதது. குழந்தைகளின் அன்பு உட்பட. அது நம்மிடம் திரும்பவும் அதே அளவு அன்பு கொடுக்குமா கொடுக்காதா என்று பயந்தே சிலர் தத்து எடுக்க தயங்குகிறார்கள். நாம் நமது தாய்மை உணர்வை அவர்களுடன் பகிர்ந்து கொள்வோம் அவ்வளவே. திரும்பக் கிடைத்தால் நன்று இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லை.


இந்த தாயன்பு நாம நினைப்பது போல பெண்களுக்கு மட்டும் உரியது அல்ல அந்த உணர்வுடன் தன் குழந்தைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் அப்பாக்களுக்கும் பொருந்தும். தாய்மையைக் கொண்டாடுவோம் தரணியை அன்பால் சீராட்டுவோம்.