தொடர்கள்
அரசியல்
பைடனா? ட்ரம்ப்பா? களம் யாருக்கு சாதகம்? -தில்லைக்கரசிசம்பத்

20240319173259407.jpg


அமெரிக்காவில் 2024 நவம்பர் 5 அன்றுதேர்தல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் நிலைமையில் தேர்தல் பிரசுரங்கள் இங்கே சூடு பிடித்துள்ளன.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதிக்கான பிரதம போட்டியாளர்களாக தற்போதைய அதிபரும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான அதிபர் ஜோ பைடனும் , குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ட்ரம்ப்பும் போட்டியிடுகிறார்கள்.

இந்த தேர்தலில் பைடனுக்கு சாதகமாக உள்ள விஷயங்களாக கொரோனா காலத்திற்கு பின் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி, குறைந்த போன வேலையில்லாத திண்டாட்டம்,பங்குசந்தை வளர்ச்சி, வரி குறைப்பு போன்றவற்றை குறிப்பிட்டாலும், உயர்ந்து வரும் விலைவாசி அமெரிக்கர்களை வாட்டி வருகிறது.

30 வருடங்களாக இல்லாது வீடுகள் விற்பனை சரிந்திருக்கிறது.

சில வருடங்களாகவே அதிகரித்து வந்த பணவீக்கம் இதற்கு காரணமாக சொல்கிறார்கள். ஆனால் தற்போது ஆறுதலாக உச்சத்தில் இருந்த பணவீக்கமும் , பெட்ரோல் எரிவாயு விலைகளும் குறைந்துள்ளன.
பிடன் மற்றும் ட்ரம்ப்பின் கொள்கைகள் மற்றும் அதன் சாதகபாதகங்களை பார்ப்போம்.
பிடனின் அமெரிக்க குடியுரிமை சட்டம், குடியேறிகளின் பிரச்சனைகளை சிறிது மனிதாபிமானத்துடன் அணுகுவதால் ட்ரம்ப் காலத்திய சில குடியுரிமை சட்டங்களை செல்லாதென்று ஆக்கி, சில எல்லைப்பகுதி செயல்திட்டங்களை முடக்கினார். இருந்தாலும் சட்டவிரோத குடியேற்றங்கள் மிக அதிக அளவில் அதிகரித்த நிலையில் அமெரிக்க மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த பைடன் மீண்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்து எல்லைப்பகுதிகளை இழுத்து மூடிக்கொண்டிருக்கிறார்.

ரஷ்ய-உக்ரைன் போரில் அமெரிக்கா உக்ரேனுக்கு நிறுத்தாமல் உதவ வேண்டும் என்பதில் பைடன் உறுதியாக உள்ள நிலையில் “அடேய் ரஷ்யா.. நீ உக்ரைனை அடிச்சாலும் சரி.. இல்லை மொத்த ஐரோப்பிய நாடுகளிலும் குண்டு போட்டு அழிஞ்சாலும் சரி .. எங்களுக்கு என்ன?! முதலில் இந்த இழவெடுத்த நேட்டோ படையிலிருந்து வெளியே வந்துருனுமடா சாமி” என்று ட்ரம்ப் முறுக்கிக்கொண்டு நிற்கிறார்.

அமெரிக்காவின் அடுத்த தலைவலி இஸ்ரேல். அமெரிக்காவிடமிருந்து பில்லியன் டாலர்களில் நிதி உதவி மற்றும் ஆயுதங்களை வாங்குவதோடு அல்லாமல் தன்னை நியாயவாதி என உலகுக்கு சொல்லு என்று தலையில் ஏறி அமெரிக்க குடுமியை ஆட்டுகிறது .

இஸ்ரேல். பிடன் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்தாலும் இளம் அமெரிக்கர்களும் அமெரிக்க அரேபியர்களும் இஸ்ரேலுக்கு எதிரான கருத்துகளை கொண்டிருக்கிறார்கள்.

கணிசமான ஓட்டுகள் இவர்களிடம் இருப்பதால் பிடனுக்கு சிறிது பிரச்சனையே. ட்ரம்ப்பும் இஸ்ரேலுக்கு ஆதரவளித்தாலும் இஸ்ரேலிடம் “காசாவில் ஒவ்வொரு கட்டிடங்கள் மீது குண்டுப்போட்டு அது சரிவதை எல்லாம் வீடியோ எடுத்து எதுக்கு வெளியில் விடுறீங்க.. ? ஹமாஸ் தீவிரவாதிகளை விட்டுட்டு பாலஸ்தீன மக்களை எல்லாம் கொன்னு போடுறானே இந்த இஸ்ரேல் பாவி, இது மக்கள் விரோத போர்ன்னு இப்பவே உலகம் முழுக்க பேசுறாங்க..!

ஆரம்பிச்ச போரை சட்டுப்புட்டுன்னு முடிவுக்கு கொண்டு வாங்கப்பா.. உங்க தொல்லை தாங்க முடியல.! “ என்று கடுப்படிப்பது இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்கர்களின் கடைக்கண் பார்வை ட்ரம்ப் மீது விழ வாய்ப்புள்ளது.

முதியோர்களுக்கான மருந்துகளின் விலை குறைப்பு ஏற்கனவே ஒபாமா காலத்திலேயே “ஒபாமாகேர்” திட்டத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்து தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மருத்துவக்காப்பீட்டை இன்னும் விரிவுப்படுத்துவது, குறைந்த மருத்துவ செலவு போன்றவற்றை பைடன் அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் ட்ரம்ப் கட்சியும் நாங்களும் ஏதாவது செய்வோம் என்று சொன்னாலும் தெளிவான திட்டங்கள் எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் ட்ரம்ப் மற்றும் குடியரசு கட்சிக்கு எதிராக “ ட்ரம்ப் வந்தால் ஏற்கனவே முதியோர்களுக்கு உள்ள அரசின் சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ காப்பீடு பாதுகாப்பு திட்டங்களை குறைத்து விடுவார்கள். இந்த டுபாக்கூர்களை நம்பாதீர்கள் “ என்று ஜனநாயக கட்சி தொடர்ந்து சுமத்தும் குற்றச்சாட்டை “ நாங்கள் அப்படி இல்லை” என ட்ரம்ப் இடது கையால் புறந்தள்ளுகிறார்.

பைடன் ஆட்சியில் தற்போது குற்றச்செயல்களின் எண்ணிக்கை கூடி உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நியூயார்க்கில் தற்போது சிட்டிசப்வேயில் தேசிய பாதுகாப்பு படை காவலை நியமித்திருப்பது இதற்கு சாட்சி.
“அதுக்குதான் மெக்சிக்கோ எல்லையில் சுவர் கட்ட சொன்னேன். சட்டவிரோத குடியேறிகளை உள்ள விடாதீங்கனா கேட்டா தானே” என்று மன்சூர்அலிகான் போல் ட்ரம்ப் உறுமுகிறார்.

போதைமருந்து கடத்துபவர்களுக்கு மரணதண்டனை கொடுத்தால் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் அபிப்ராயம் கொண்டிருக்கிறார். 2022 ல் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் கிட்டத்தட்ட 5 கோடி அமெரிக்கர்கள் (12 வயதிலிருந்து ) போதை மருந்து உபயோகிக்கிறார்கள் என்பது ஒரு கொசுறு செய்தி.

2023 ஆம் ஆண்டில் மட்டுமே துப்பாக்கிச்சூட்டில் 40,112 அமெரிக்கர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

பைடனும் இந்த மோசமான துப்பாக்கிக்கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார் .

கிட்டதட்ட 40 கோடி துப்பாக்கிகள் அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ளனவாம். அமெரிக்காவின் மக்கள் தொகையே 34 கோடி தான்.

வாங்குபவர்களின் பின்னணி மற்றும் பாதுகாப்பு விஷயங்களை கருத்தில் கொண்டு துப்பாக்கிகளை விற்க பாதுகாப்பு சட்டம் ஒன்றை பைடன் நிறைவேற்றியுள்ளார்.

இந்த நாட்டுத்துப்பாக்கிகளுக்கு தடை கொண்டு வந்ததும் பைடன் தான். ட்ரம்ப் ஆட்சியின் போது செமி தானியங்கி துப்பாக்கி சடுதியில் சுடுவதற்கான மூலப்பொருட்கள் உற்பத்தியை தடை செய்தார் . அதற்கு மேல் இருவராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை என்பது வருந்ததக்கது.

வயது என்று பார்த்தால் பிடனுக்கு 81 ட்ரம்ப் 77 என படு தாத்தாக்களாக ஜனாதிபதி போட்டிக்கு நிற்கிறார்கள்.

பிடன் ஏற்கனவே தட்டு தடுமாறி நிற்பது, நடப்பது, மறப்பது என வயோதிக பிரச்சனைகளில் தத்தளித்து கொண்டிருக்குறார்.

ட்ரம்ப் இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை என்றாலும் சில பல வழக்குகளில் மாட்டிக்கொண்டிருக்கிறார். மொத்தம் 91 வழக்குகள் பத்தாதென்று 4 கிரிமனல் குற்றவழக்குகள் வேறு . அதில் ஜனவரி 2021 அன்று தலைநகரத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய கலவரம் வேறு. தலையே முன்னின்று நடத்தியதாக கேள்வி. இதை இன்னும் அமெரிக்கர்கள் நெஞ்சில் பசும்மரத்தாணி போல் பதிந்திருப்பது ட்ரம்ப்புக்கு சங்கடம் தான்.

பெரும்பான்மை அமெரிக்கர்கள், இரு பெரிய கட்சிகளை பொறுத்தவரையில் அதிருப்தி மனநிலையில் தான் உள்ளார்கள். இவர்களைத் தவிர மூன்றாவது அணியினர் யாராவது தேர்தலில் இருக்கிறார்களா என்றால் ராபர்ட் கென்னடி ஜூனியர் நிற்கிறார்.

சார் யார் என்று பார்த்தால் தடுப்பூசிக்கு எதிரானவர் என்று பெயர் வாங்கியுள்ளார். அது உண்மையில்லை என்று ராபர்ட் கென்னடி மறுத்தாலும் அவரது தட்டம்மை,தாளம்மை, மணல்வாரி (measles, mumps and rubella (MMR) vaccine) தடுப்பூசிகளுக்கு எதிராக பிரசுரம் செய்த வீடியோ இன்னும் மக்களிடையே வலம் வந்து அவர் மானத்தை வாங்குகிறது.

இதுப்போல தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் பிராச்சாரத்தை பெரும்பான்மை அமெரிக்கர்கள் நம்பி தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருந்ததன் விளைவு அமெரிக்காவில் 2000 ஆண்டில் முழுமையாக ஒழிக்கப்பட்ட தட்டம்மை இப்போது திரும்ப வந்து அதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.

“யப்பா..டேய் உனக்கு இந்த ட்ரம்ப்பே தேவலை!” என்ற அளவில் ஜூனியர் கென்னடி சீனியர் கென்னடிகளின் பெயரை கெடுத்து கொண்டிருக்கிறார். மூன்றாம் அணி சார்பாக கார்னல் வெஸ்ட் என்பவரும் தேர்தலில் நிற்கிறார். மூன்றாவது அணியாக நிற்பவர்கள் சில பல ஓட்டுகளை பிரிக்கிறார்கள். இதனாலேயே 2000, மற்றும் 2016 தேர்தல்களில் தோற்றோம் என்று ட்ரம்ப்பின் குடியரசுக்கட்சியினர் இன்றும் மூன்றாவது அணியினரை கரித்து கொட்டுகிறார்கள்.

2020 தேர்தலில் மூன்றில் 2 பங்கு வாக்காளர்கள் மட்டும் தான் வாக்களித்தார்கள் என்பதால் பைடன் ட்ரம்ப்பை தோற்கடித்தார் என்கிறார்கள்.

தற்போதும் பிடன், ட்ரம்ப்பை விட வெறும் 1 சதவீத அளவில் மட்டுமே முன்னணியில் நிற்கிறார்.

நவம்பரில் காட்சிகள் எப்படி, யாருக்கு சாதகமாக மாறும் என்பதில் தெளிவில்லை. பாலியல் குற்றச்சாட்டையும் சேர்த்து ட்ரம்ப் மாட்டி இருக்கும் வழக்குகள் போகும் பாதைக்கு ஏற்ப இது பிடனுக்கு சாதகமாக மாறினாலும் மாறும். இப்போதைக்கு சரிக்கு சமமாகவே போட்டியாளர்கள் களத்தில் நிற்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.