தொடர்கள்
அரசியல்
காங்கிரஸுக்கே  ஸ்டாலின்  நிதி உதவி !!-விகடகவியார்

20240312181545986.jpeg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் நன்னாரி லெமன் சர்பத் கொண்டு வந்து வைத்த ஆபீஸ் பையன் " எங்க தொகுதில காங்கிரஸ் பண பட்டுவாடா எப்போ அது தெரியுமா ? " என்று விகடகவியாரை பார்த்து கேட்க நாம் ஆபீஸ் பையனை பார்த்து முறைக்க அவர் எஸ்கேப்.

அப்போது விகடகவியார் "காங்கிரஸ் கட்சியில் நிதி வசதி இல்லை. அவர்களுக்கான நிதி வழங்கும் வாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன. வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கிவிட்டது.

பொதுவாக தேர்தல் பிரச்சாரத்திற்கு சோனியா காந்தி,பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி தனி விமானத்தில் பயணம் செய்வார்கள். இப்போது அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்று ஆகிவிட்டது.

அப்படி இப்படி கொஞ்சம் பணம் திரட்டி அவர்களுக்கு விமான டிக்கெட் எடுப்பதற்குள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. எனவே திமுக தலைவர் ஸ்டாலினை ராகுல் காந்தி தொடர்பு கொண்டு கட்சியின் நிதி நிலவரம் பற்றி பேசியிருக்கிறார். தவிர இது பற்றி விவரமாக உங்களிடம் பா.சிதம்பரம் பேசுவார் என்று சொல்லி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பா.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க தொடர்பு கொண்டபோது நானே வருகிறேன் என்று சொல்லி பா.சிதம்பரத்தை ஸ்டாலின் சந்தித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் நிதி நெருக்கடியை விலாவாரியாக பா.சிதம்பரம் எடுத்துச் சொல்ல தவிர இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதால் நிதி உதவியில் தாராளம் காட்ட வேண்டும் என்றும் பா.சிதம்பரம் கோரிக்கை வைக்க அதன் பிறகு 300 கோடி ரூபாய் காங்கிரஸ் கட்சிக்கு போய் சேர ஏற்பாடு செய்தார் முதல்வர் ஸ்டாலின். இப்போதைக்கு காங்கிரஸ் நிதி நிலவரம் கொஞ்சம் பரவாயில்லை "என்று விகடகவியார் சொன்னதும் 'நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது பார்த்தீர்களா '!என்று நாம் சொன்னதும் இதெல்லாம் அரசியலில் அப்படிதான் என்றார் விகடகவியார்.

கிளி- கிலி.

20240312181658719.jpeg

விகடகவியார் "நீங்கள் கிளி ஜோசியம் பார்த்து இருக்கிறீர்களா "என்று நம்மைப் பார்த்து திடீரென்று கேட்டார். நாம் 'எப்போதோ பார்த்து இருக்கிறோம் நினைவில்லை 'என்று சொன்னோம். "கடலூர் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் இயக்குனர் தங்கர் பச்சன் தேர்தல் பரப்புரையின் போது தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் இந்த கிளி ஜோசியம் பார்த்தார் தங்கர் பச்சன் .அப்போது அங்கிருந்த ஜோசியர் உங்களுக்கு கிளி அய்யனார் படத்தை எடுத்து தந்தால் நீங்கள் தான் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று சொன்னார். கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் கரெக்டாக அய்யனார் படம் இருந்தது. அப்போது அந்த ஜோசியர் நீங்கள் தான் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று சொன்னார்.

தங்கர் பச்சனும் சந்தோஷமாக தனது தேர்தல் பரப்புரையை தொடர்ந்தார். வேட்பாளர் கிளி ஜோசியம் பார்த்த இந்த வீடியோ வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்து வனவிலங்கு பாதுகாப்பு திருத்த சட்டத்தின் கீழ் கிளிகளை கூண்டில் அடைத்து வளர்ப்பது குற்றம் என்று சொல்லி வனத்துறையினர் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு ஜோதிடம் பார்த்த இரண்டு ஜோசியர்களை கைது செய்தனர். நான்கு கிளிகளையும் பறிமுதல் செய்தனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான கிளி ஜோதிடர்கள் கிளிகளை வைத்து தான் ஜோதிடம் பார்க்கிறார்கள். வனத்துறையினர் கைது செய்த ஜோதிடர்கள் அங்கு பல ஆண்டுகளாக கிளி ஜோதிடம் பார்க்கிறார்கள் அப்போதெல்லாம் அவர்கள் கைது செய்யப்படவில்லை. தங்கர் பச்சனுக்கு ஜோதிடம் பார்த்த பிறகு அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் எனவே அதற்கான காரணம் என்ன என்பதை நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டார். இந்த விஷயம் சர்ச்சை ஆனதும் தற்சமயம் வனத்துறையினர் அந்த இருவரையும் விடுவித்து விட்டனர். ஆனால் நீங்கள் அபராதம் கட்ட வேண்டும் என்று அவர்களின் வற்புறுத்தி வருகிறார்கள் "என்றார் விகடகவியார்.

எடப்பாடி எழுச்சி.

20240312181829452.jpeg

விகடகவியார் திடீரென நம்மிடம் "எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்பரை கூட்டத்திற்கு போகிறீர்களா ?" என்று நம்மிடம் கேட்க

நாம் 'தேர்தல் பரப்புரைகளை டிவியில் தான் பார்க்கிறோமே நேரலை செய்கிறார்களே 'என்று சொன்னதும் நம்மை முறைத்துப் பார்த்தவர் "எடப்பாடியின் பிரச்சாரம் எதார்த்தமாக இருக்கிறது அதேசமயம் ஹை டெக்காகவும் இருக்கிறது. திமுக அவரை கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகிறது ஸ்டாலின் பேசுவது உதயநிதி ஸ்டாலின் பேசுவது எல்லாவற்றையும் மேடையில் வைக்கப்பட்டிருக்கும் எல் இ டி திரையில் ஒளிபரப்பி எப்படி எல்லாம் பேசினார்கள். என்னை விமர்சனம் செய்து என்று சிரித்தபடியே குறிப்பிட்டு அதற்கு பதிலாக கடுமையாக விமர்சனம் செய்கிறார் எடப்பாடி. இந்தப் பாணி மக்களிடம் எளிதில் சென்று விடுகிறது. இந்த நிமிடம் வரை பிரதமர் அதிமுக பற்றி எதுவும் விமர்சனம் செய்வதில்லை அண்ணாமலை விமர்சனம் செய்கிறார்.

நேற்று திடீரென்று பொள்ளாச்சியில் பேசிய எடப்பாடி பிரதமர் மோடியின் ரோட் ஷோ அண்ணாமலையின் அடிக்கடி பேட்டி இவற்றையெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்து இதெல்லாம் போதாது மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டார். திமுக தொடர்ந்து பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்து இருக்கிறார் எடப்பாடி என்று சொல்வதால் இப்போது மோடியை விமர்சனம் செய்கிறார் என்கிறது அதிமுக தரப்பு.

எடப்பாடிக்கு பெரும் கூட்டம் கூடுகிறது. அது இயல்பாகக் கூடியதா கூட்டப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் பொது மக்களின் ஆதரவு மெல்ல எடப்பாடிக்கு வரத் தொடங்கி இருக்கிறது அது மட்டும் உண்மை என்றார் விகடகவியார்.

தாமரைக்கு திடீர் மவுசு ! ஸ்டாலின் பயம் !!

20240312181923451.jpeg

அப்போது" இன்னொரு நன்னாரி சர்பத் சாப்பிடுகிறீர்களா "என்று ஆபீஸ் பையன் கேட்க வேண்டாம் என்று அவசர அவசரமாக மறுத்த "திமுகவிற்கு தமிழ்நாட்டில் தாமரை மலருமோ என்ற பயம் வரத் தொடங்கி இருக்கிறது.

பிரதமரும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார் இது பாதிப்பை ஏற்படுத்துமா என்று விசாரிக்க சொல்லியிருக்கிறார். பாரதிய ஜனதாவை பொருத்தவரை அவர்கள் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாம் இடத்திற்கு வர வேண்டும். போட்டி திமுக பாஜக என்று இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்ற தகவலை சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் தனியாக ஒரு அமைப்பை வைத்து விவரங்களை சேகரிக்கிறார். அவரும் முக்கிய தொகுதிகளுக்கு சென்று கள நிலவரம் என்ன என்று விசாரித்து வருகிறார். அவரைப் பொறுத்தவரை திருநெல்வேலியில் இப்போதைக்கு நயினார் நாகேந்திரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இதற்கு காரணம் காங்கிரஸ் வேட்பாளர் கன்னியாகுமரி காரர் என்பது. திமுக அவருக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை.

திமுகவில் கோஷ்டி பூசல் நெல்லையில் கொஞ்சம் ஓவர் குறிப்பாக பேரவை தலைவர் அப்பாவு அரசியல் சரியில்லை என்பதுதான். உடனே பேரவை தலைவரை தொடர்பு கொண்டு வில்லங்கமான வேலைகளை பார்க்காதீர்கள். அப்புறம் அடுத்த சட்டசபை கூட்டத்திற்கு வேறு ஒரு பேரவை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எச்சரித்திருக்கிறார். அனிதா ராதாகிருஷ்ணனை அங்கு போய் தேர்தல் வேலை பாருங்கள் என்று அனுப்பி இருக்கிறார்.

தூத்துக்குடியில் கனிமொழி நிச்சியம் வெற்றி பெறப் போகிறார் உங்களுக்கு அங்க என்ன வேலை என்று சொல்லி அனுப்பி இருக்கிறார். நெல்லை பொறுப்பாளர் தங்கம் தென்னரசுவிடம் திருநெல்வேலியை கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார் என்று சொல்லிவிட்டு நல்லா தான் கவனிக்கிறீங்க அடிக்கிற வெயிலுக்கு "என்று ஆபீஸ் பையனை அழைத்து தேங்க்ஸ் சொல்லி புறப்பட்டார் விகடகவியார்.