தொடர்கள்
அனுபவம்
மயக்கப்பெருவெளி! - ராகவன் ஸாம்யெல்

20240228220606304.jpeg



வாழும் கலை பற்றிய
தியானமுறைகளை கற்றுக்கொள்ள
சென்றிருந்தேன்
சலனங்களின் மத்தியில்
நட்டுவைத்திருந்த அநித்யப்புள்ளிகளின்
கூட்டுச்சேர்க்கையாய் இருந்தது மையம்.
முற்றிலும் மரங்கள் அடர்ந்த
கானகத்தின் மிச்சத்தில் அமைந்திருந்தது.
நிராசைகளின் கொசுவிரட்டி போன்ற
சுழற்படிக்கட்டுகள் அமைந்த அந்த கட்டிடம்
விண்ணேகுமோ?

தனித்துவிடப்பட்டேன்.
சுவர் நெருக்கும் அறையின்
ஓட்டுக்கூரையில் பதிக்கப்பட்ட
ஆகாய ஒளிக்கண்ணாடிகள்
பகலின் சூரியத் துணுக்குகள்

சொற்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டு
பெட்டியில் வைத்து பூட்டிக்கொண்டார்கள்.
தியானங்கள் மேலும் தியானங்கள்!
வெளி வெளியாய் அலையும் சுடர்
சூட்டில் குறுகும் நதிகள்

வார்த்தைகள் தீர்ந்து
மல்லாந்து கிடக்கும் இரவுகளின்
நிழல் ஓவியங்களென
மரங்கள் உதிர்க்கும் சருகுகள்
ஆகாய ஒளிக்கண்ணாடிகள்
இரவுகளின் நிறப்பிரிகைக்குழல் அடுக்குகள்!
ஒரு மாறிலி!

எத்தனை மரங்கள் எத்தனை வகைகள்
சுழன்று இறங்கும் இலைகள்
புரண்டு புரண்டு உதிரும் இலைகள்
பிரமிளின் இறகென மிதந்து இறங்கும் சில
காம்பின் கனம் இழுக்க தாழும் இன்னும் சில
உதிர்தல் அழகு
உதிர்தல் இயல்பு
உதிர்தல் உன்னதம்
உதிர்தல் வாழும் கலையின் மயக்கவெளி