தொடர்கள்
இசை
தப்பு கண்டு பிடிப்பதை விட நல்ல பாயிண்டுகள்  கவனிப்பதும் நல்லது தானே? – டாக்டர் கர்னல் கே. எம். ஹரிகிருஷ்ணன்

20240228142115120.jpg


சிக்கனை பாலு........

தியாகராஜ சுவாமி சொல்கிறார்: "ஓ மனசே! உனக்கு ராஜ மார்க்கங்களில் போகவழி இருக்கும் போது ஏன் நீ குறுகலான சந்துகளில் நுழைகிறாய்? குடிக்க நல்ல பால் இருக்கும்போது ஏன் இந்த சாராயத்தில் ஆசை?

சந்தீப் நாராயண் 24 -3 -2024 அன்று பெங்களூர் காயன சமாஜத்தில் செய்த கச்சேரியில், கடைசியாக பாடிய பாட்டின் சாராம்சம் எனக்கு மேற்குறிக்கப்பட்ட பாட்டைத் தான் நினைவு படுத்தியது.

இது என்ன சிலர் கச்சேரியின் துவக்கத்தில் மங்களம் பாடுவது மாதிரி இருக்கே உங்கள் ரிவியூ என்று நீங்கள் கேட்கலாம். கேட்கணும் தப்பில்லை. ஆனா, அதற்கு கரணம் இருக்கே?

சந்தீப் பாடிய கடைசி பாட்டு பாபநாசம் சிவன் அவர்களின் மிக அழகான தமிழ் பாட்டு - "ராமனை பூஜித்தால் நோய்வினை தீரும், வீண் (மன) சஞ்சலம் அகன்றிடுமே" என்று தொடங்கும் மகா மந்திரம். அதை சந்தீப் மனம் உருக பாடிக்கேட்ட போது நிரம்பி வழிந்திருந்த ஹாலில் ஒரு நிசப்தம். அங்கிருந்த எல்லோரும் ஒரு ஆனந்த மய(க்க) நிலையில் சென்று விட்டோம்.

மயக்கம் தெளிந்தபின் எனக்கு தோன்றியது இது தான்.

அதெப்படி சில பேர்களால் நம்முடைய ஆன்மிகம் நிறைந்த இசையை நிந்திக்கத் தோன்றுகிறது? எம்மாதிரியான மன உளைச்சல் ஒரு பாடகரை இம்மாதிரி தன சுயநிலத்திற்க்காக நாஸ்திக வழிமுறைகளை பின்பற்ற வைக்கிறது? எங்கிருந்து வந்தது இந்த அகம்பாவம்?

மேலே இருக்கும் காலி இடம் ஒரு மாபெரும் பெருமூச்சிற்காக.

வாருங்கள் கச்சேரியில் சந்தீப் என்னென்ன கொடுத்தார் என்று அனுபவிப்போமே.

அன்றைய கச்சேரி அபரிமிதமாக இருந்ததற்கு பல காரணங்கள் உண்டு.

நல்ல, அழுத்தமான, கணீரென்ற குரல்; நல்ல பாடாந்தரம் (சந்தீப் கல்கத்தா க்ருஷ்ணமுர்த்தி, மற்றும் சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமணியத்தின் சிஷ்யர்); நல்ல லய ஞானம்; பாவார்த்தமான பாடல்.

போதாதா?

போதும். இது மட்டுமா? ஒரு மகத்தான போனஸும் கூட இருந்தது. நான் மேலே குறிப்பிடாத, சந்தீப்பின் முதல் குரு - அவரது தாயார் - அன்று சபையில் இருந்தார். அதைவிட ஒரு பாடகருக்கு மோட்டிவேஷன் வேறு என்ன வேண்டும்?

கரெக்ட் தான். நம்ம சத்குருவோட மாப்பிள்ளை தான்.

ஒரு வேளை அதனால்தான் "வந்தாலும் வரட்டும் ஜனனம் தந்தாலும் தரட்டும்" என்று துவங்கும் கோபால கிருஷ்ண பாரதியின் பாட்டோடு (பாலஹம்சா ராகம்) கச்சேரி ஆரம்பம் ஆயிற்றோ! பாலஹம்சா ராகம் பண்டை காலத்தில்தான் பிரபலமாக இருந்து, பின்னர் கிட்டத்தட்ட மறைந்து போய் இப்போது சில காலமாக ஜனனம் எடுத்த ஒரு அழகான ராகம். ஹரிகாம்போஜி மேளத்தில் ஜன்யம்.

அடுத்து ஹிந்தோளத்தில் கைவர நாராயணா என்ற மஹான் பாட்டு கன்னடத்தில். பிறகு துல்லியமாக நளினகாந்தி ராக ஆலாபனை. பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் பாலா "நதஜன பாலினி" என்றார் தீர்க்கதரிசி போல். கரெக்ட்! தஞ்சாவூர் சங்கர ஐயரின் அந்த பாட்டை ஆனந்தமாக கேட்டு திகழ்ந்தோம்.

எனக்கு இருந்தாலும் ஒரு குறை. இவ்வளவு அழாகான ராகத்தில், இவ்வளவு அழகாக பாடிவிட்டு, சந்தீப் ஸ்வரம் போடாமல் விட்டு விட்டாரே என்று. ஆசைக்கு அளவில்லை என்கிறீர்களா? கரெக்ட்!

பூர்வி கல்யாணிக்கும் பந்துவரளிக்கும் வித்தியாசம் சொல்வது கஷ்டம். சந்தீப் ரசிகர்களை அந்த கவலையே வேண்டாம் என்று சொல்வதுபோல், கன கச்சிதமாக பூர்வி கல்யாணி ஆலாபனை செய்தார். மூன்று சீட் தள்ளி அமர்ந்திருந்த மற்றோரு நண்பர் ரவி சர்டிபிகேட் கொடுத்தார்."என்னமா துளி கூட கன்பியூஷன் இல்லாம கொண்டு போறார் பார்த்தேளா" என்றார். பூர்வி கல்யாணி சுய ரூபத்தில் வந்தால் கூட இவ்வளவு அருமையாக இருந்திருக்காது என்று நினைக்கிறேன். சந்தீப் ராகத்தை பிழிந்து எடுத்துவிட்டார். ஹி சிங்ஸ் லைக் எ மேன் பொஸ்ஸெஸ்ட் என்று நானும் மனைவியும் சொல்லிக்கொண்டோம். இதல்லவோ கர்நாடக சங்கீதம்?

பாதி ஆலாபனையில் நிறுத்தி, ம்ருதங்கத்தை வாசிக்க சொல்வது மியூசிக் அகாடமி விருதுக்குழுவிற்கு பிடிக்கலாம். உண்மையான ரசிகர்களுக்கு பிடிக்காது. எந்த வர்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. இது சத்தியம்.

முத்துஸ்வாமி தீக்ஷிதரின் மீனாட்சி மேமுதம் தேஹி என்ற காலத்தால் அழிக்கவே முடியாத பாட்டு - தான் இசைத்த இந்த பாட்டை தனது தம்பி மற்றும் சீடர்களை பாடச்சொல்லி கி பி 1835ல் தீபாவளி அன்று தீக்ஷிதர் சுவர்க்கம் அடைந்த பாட்டு. அத்தகைய மன அமைதி கிட்டியது சந்தீப்பின் பாடலில். பக்க வாத்தியம் வாசித்த மதூர் ஸ்ரீநிதி (வயலின்), தும்கூர் ரவிசங்கர் (ம்ருதங்கம்), குருப்ரஸன்னா (கஞ்சீரா), ராஜசேகர் (மோர்சிங்) - இந்த மிக அழகான பாடலை, பல மடங்கு மெருகேற்றினார்கள். இப்படி தெய்வீக அனுபவம் கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும். இந்த மாதிரி நாலு சந்தீப் இருந்தால் போதும். மியூசிக் அகாடெமியா? வேண்டாம்யா - நடுத்தெருவில் கூட கடவுளை ப்ரத்யக்ஷமாக காணலாம். மனது சுத்தமாக இருந்தால்.

லயத்தில் டீம் ஒர்க் என்றால் எப்படி என்பதை தனி ஆவர்த்தனத்தில் மிக நெளிவாக காண்பித்தார்கள் பக்க வாத்திய குழு. முத்தைய்யா பாகவதரின் வாஞ்சதோணுனா (கர்ண ரஞ்சனி ராகம்) பாடிவிட்டு, சந்தீப் காபி ராகத்தில் மிக அற்புதமாக ஒரு ராகம் தானம் பல்லவி பாடினார். அவர் எவ்வளவு புத்திசாலி என்பது பல்லவியில் தெரிந்தது. ஹோலி பண்டிகை கச்சேரி இது. போஜ்புரியில் துல்லியமாக "ஹோரி கேலத ஷியாம் பிஹாரி" என்று பாடி ரசிகர்களின் மனத்தை கவர்ந்துவிட்டார். ஹிந்துஸ்தானி , கர்நாடக ரீதி இரண்டிலும் ஸ்வரங்கள் போட்டு - அமர்க்களம் போங்கள்!

அடுத்த செக்ஷன் துக்கடாஸ்.

சந்தீப் அறிவித்தார் : "பெங்களூரில் எல்லோரும் நிறைய பாட்டுகள் பாட விண்ணப்பம் கொடுக்கிறீர்கள். முடிந்த வரையில் ட்ரை பண்ணுகிறேன். எனக்கும் உங்கள் முன்னால் சில புதிய பாட்டுகள், ராகங்கள் பாட வேண்டும் என்று ஆசை." ஆஹா! இதல்லவோ ஒரு உண்மையான கலை உபாசகரின் குணம்? இதல்லவோ பணிவு? (என் மனத்தில் கடந்த சில நாட்களாக உருத்திக்கொண்டிருக்கும் புண் அடிக்கடி என் ரிப்போர்ட்டில் வெளிப்படுகிறது அல்லவா? எழுதும்போது தான். சபாவில் ஆனந்தமும் திருப்தியும் மட்டுமே).

இரண்டு பாட்டு பாடுகிறேன் என்றவர், ரசிகர்கள் ஆர்வத்தை கண்டு நாலு பாடிவிட்டார்! மங்களத்துக்கு முன்பு அவர் பாடியதை முதலிலேயே சொல்லிவிட்டேன்.

நின்று, சந்தீப்பையும் அவர் தாயாரையும் கண்டு நமஸ்காரம் சொல்லி விட்டு மிகுந்த மன நிறைவுடன் கிளம்பினோம்.

20240228142236134.jpg

நேற்று ஒரு நண்பர் கூறினார் - சார், நீங்க சுப்புடு மாதிரி எழுதறீங்க - ஆனால் ஒரு வித்தியாசம் - என்று தயங்கினார். அவர் ஒவ்வொரு கச்சேரியில் ஒரு பிழையாவது பிடித்து விடுவார். உங்களால் முடிவதில்லையே என்றார். நான் சொன்னேன்: "என்ன செய்வது? நிகழ்கால இளைஞர்கள் கால் இஞ்சு கூட விட்டு கொடுக்க மாட்டேன்கிறார்களே" என்று அசத்திக்கொண்டேன். சுப்புடு மாமாவின் நிழலில் தான் டில்லியில் வளர்ந்தவன் நான். அவர் ஒரு மஹான். அவர் அளவுக்கு எனக்கு ஞானம் வர இன்னும் சில சகாப்தங்கள் எடுக்கும். தப்பு கண்டு பிடிப்பதை விட நல்ல பாயிண்டுகள் கவனிப்பதும் நல்லது தானே? தப்பு செய்பவர்கள் பாட்டை கேட்க போவதை பல வருடங்களாக நான் நிறுத்திவிட்டேனே!

தீம் தீம் தீம்.