தொடர்கள்
கவர் ஸ்டோரி
திமுகவுக்கு ராமர் ஜுரம்  ! ! -விகடகவியார்

20240026171420135.jpeg

இன்னும் சில வருடங்களில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டி விடுவார்கள். அப்படி கட்டினால் ஒட்டுமொத்த இந்துக்களும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள், நாம் அதை எப்படி எதிர் கொள்ளப்போகிறோம் என்று2020-ல் ராமர் கோயில் கட்டுவதற்காக அயோத்தியில் பூமி பூஜை போடப்பட்ட போது பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசினார்.

ராமர் கோயில் ஆன்மீகமா அல்லது ஓட்டு வங்கியா என்ற சர்ச்சை எதிர்க்கட்சிகளால் இப்போதும் பேசப்படுகிறது.

20240026171445940.jpeg

ராமர் கோயில் கும்பாபிஷேகம் பிரதமர் மோடி நடத்தி வைத்தார் அத்துடன் இந்த கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் அமித்ஷா தேசியத் தலைவர் நட்டா, ராஜ்நாத் சிங் போன்றவர்கள் வரக்கூடாது எனவும் இவர்கள் அனைவரும் மார்ச் மாதம் பிறகு அயோத்தியா வந்து தரிசனம் செய்யலாம் என்று பிரதமர் உத்திரவிட்டார்.

பிஜேபி அமைச்சர்கள் அவர்கள் விருப்பப்படும் கோயில் பொது இடத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேக நேரலை நிகழ்ச்சியை மக்களோடு மக்களாக சேர்ந்து பார்க்க வேண்டும் என்பதை கிட்டத்தட்ட உத்தரவாகவே போட்டு இருந்தார் பிரதமர் மோடி.

தமிழ்நாட்டில் அன்றைய தினம் பாரதிய ஜனதா பல கோயில்களில் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி சிறப்பு பூஜைக்கு கோயில் நிர்வாகத்தை அணுகிய போது . பதினைந்து நாள் முன்னதாக அனுமதி பெறவில்லை என்று வாய்மொழியாக சொல்லியும், அயோத்தி கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாக டிவிக்கள் வைத்து பார்க்க கோயில்களில் பக்தர்களுடன் உட்கார்ந்து பாஜகவினர் பார்ப்பதற்கும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்து விட்டார்கள் .

பாரதிய ஜனதா இதற்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் என வழக்கு தொடர்ந்தது.

20240026171527542.jpeg

உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள் எழுத்துப்பூர்வமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை வாய்மொழியாக அனுமதி மறுத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்கள். தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. ராமர் கோயில் திறப்பு விழா தொடர்பான நேரலை செய்ய அனுமதி வழங்கக் கூடாது என எந்த ஒரு தடை உத்தரவையும் தமிழக அரசு பிறப்பிக்க வில்லை என்றார். இது தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராமர் கோயில் திறப்பு விழா தொடர்பான நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யவோ அல்லது அது தொடர்பாக பூஜைகள் பஜனைகள் மேற்கொள்ள தமிழகத்தில் யாரும் முறைப்படி கேட்டால் அதிகாரிகள் அதை சட்டத்துக்கு உட்பட்டு முன்மாதிரி தீர்ப்புகளை மனதில் கொண்டும் பரிசீலித்து அனுமதி அளிக்க வேண்டும். அதை விடுத்து வாய்மொழி உத்தரவுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை. இந்த உத்தரவை அதிகாரிகள் முழுமையாக கடைப்பிடிப்பார்கள் என்று நம்புகிறோம். எத்தனை விண்ணப்பங்கள் அனுமதி அளிக்கப்பட்டது எத்தனை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது என்பது தொடர்பான விவரப் பதிவேடுகளையும் முறையாக கையாள வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் விசாரணையை 29-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள்.

உயர் நீதிமன்றம் இது பற்றி இது சம்பந்தப்பட்ட வழக்கில் தனியார் கோயில்கள், திருமண மண்டபங்களில் நேரலை செய்ய போலீஸ் அனுமதி தேவையில்லை. அதேசமயம் அறநிலைத்துறை கோயில்களில் நேரலை அல்லது பூஜை மேற்கொள்ள கோயில் செயல் அலுவலரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து அதன் பிறகு மேற்கொள்ளலாம் செயல் அலுவலர் உரிய கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ அன்னதானம் வழங்கவோ பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு அறநிலையத்துறை எந்தத் தடையும் விதிக்கவில்லை முற்றிலும் உண்மைக்கு புறம்பான உள்நோக்கம் கொண்ட செய்தியை உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரப்புவது வருதத்துக்குறியது என்று குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் சேகர்பாபு.

அதே சமயம்,காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்ட எல். இ .டி திரையை கோயில் நிர்வாகம் அகற்றியது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்து இது வழிபாட்டு உரிமை பறிக்கும் செயல் என்று குறிப்பிட்டிருந்தார். உச்சநீதிமன்றம் ,உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மீண்டும் எல்.இ.டி திரை காமாட்சி அம்மன் கோயில் பொருத்தப்பட்டு மக்களிடம் உட்கார்ந்து அயோத்தி நேரலையை கண்டுகளித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

திமுகவை பொறுத்தவரை அயோத்தி ராமர் கோயில் திறப்பு தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவுக்கு வாக்கு வங்கியாக மாறும் என்ற அச்சம் இருந்தது என்பதுதான் உண்மை. அதனால்தான் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழக ஆன்மீக பக்தர்கள் அயோத்தி செல்ல கோரிக்கை வைத்தால் அதை நாங்கள் பரிசீலிப்போம் என்றார். இப்போது ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மீக பக்தர்களை இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

2024002617164473.jpeg

முதலமைச்சரும் கோயில் முழுமையாக கட்டி முடிக்காத போது அவசர அவசரமாக கும்பாபிஷேகம் நடத்துவது பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா இதை வாக்கு வங்கியாக மாற்றுகிறது என்று சொன்னார். ஆனால் அதைச் சொன்னதோடு அவர் விட்டுவிடவில்லை நாங்கள் பெருமாளையும் போற்றுவோம் பெரியாரை போற்றுவோம் என்று குறிப்பிட்டார். தமிழக மக்கள் பிற மதத்தினரை மதித்து நடப்பார்கள் என்று குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

திமுகவை பொருத்தவரை தேர்தல் காலத்தில் அவர்களுக்கு கடவுள் பக்தி கொஞ்சம் தூக்கலாகவே வரும்.

சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட கழக தலைவர் வீரமணியை தள்ளியே வைத்திருந்தார் ஸ்டாலின்.அவருக்கே மேடையில் முருகப்பெருமானின் வேல் பரிசளிக்கப்பட்டது. ஆர். எஸ். எஸ் தலைவர்கள் அயோத்தி கும்பாபிஷேக அழைப்பிதழை எல்லா முக்கிய தலைவர்களையும் தொடர்பு கொண்டு நேரில் சென்று தந்து கொண்டிருந்தார்கள். அதேபோல் முதல்வரை அவர்கள் தொடர்பு கொண்ட போது என் மனைவிக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் எனவே அவரிடம் அந்த அழைப்பிதழை தாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஆர். எஸ் .எஸ் தலைவர்கள் துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து அயோத்தி கும்பாபிஷேக அழைப்பிதழை தந்திருக்கிறார்கள். அப்போது துர்கா ஸ்டாலின் கும்பாபிஷேகத்தின் போது மிகவும் கூட்டமாக இருக்கும் வேறு ஒரு நாளில் நான் வருகிறேன் அப்போது அதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்யுங்கள் என்று அவர்களிடம் சொல்லி இருக்கிறார் திருமதி ஸ்டாலின்.

கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் ராமர் படம் வைத்து பிஜேபினர் வைத்திருந்த பிளக்ஸ் போர்டுகளை இரவோடு இரவாக தமிழக அரசு நீக்க வாய்மொழி உத்தரவு அதனை ஆங்காங்கே இருக்கும் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் போர்டுகளை கழட்டி வண்டியில் அள்ளி போட்டு சென்றனர் என்பது பிஜேபி எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் வரை சென்றனர் என்று தமிழக ஊடகத்துறையினர் தெரிவித்தனர்.

தமிழக அரசு உத்தரவால் எப்போதும் இல்லாத அளவிற்கு ,ராமர் கோயில் கும்பாபிஷேகம் அன்று கடும் போலீஸ் பாதுகாப்பு சாலைகளில் போடப்பட்டிருந்தது.ராமர்பிரதிஷ்டைநேரத்தில் தமிழகத்தில் இருக்கும் மாற்று கட்சியினர் யாரும் பட்டாசு வெடிக்க கூடாது என காவல்துறை அதனை பிடுங்கி சென்ற பல காட்சிகள் தமிழகம் எங்கும் நடந்தது என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இது எப்படி இருக்க, தமிழகம் எங்கும் தமிழக அரசின் கடும் எதிர்ப்பை பார்த்து அமைதியாக இருந்த குடும்பஸ்தர்கள் கூட அனைவரும் சிறப்பு வழிபாடு நடத்தி மாலையில் நெய் தீபம் ,அகல் விளக்கு தீபம் என தமிழகமே பொதுமக்களால் கோயில்களிலும் வீட்டு முன்பும் ஏற்றப்பட்டு ஜெகஜோதியாக இருந்தது என்பது தான் உண்மை.

திமுக தலைமைக்கு உண்மையில் ராமர் ஜுரம் வந்துவிட்டது இதில் கனிமொழி மற்றும் உதயநிதி ஏதேதோ பேசினாலும் ராமபிரான் பிரதிஷ்டை குறித்து இவர்கள் சொன்ன கருத்துக்கள் தமிழக மக்கள் முகம் சுளித்தனர் என்ற தகவல் ரகசிய காவல்துறையினர் முலம் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ராமர் ஜுரம் இப்படி பரவும் என்று திமுக நினைக்கவில்லை எதிர்மறை கருத்துக்களை தெரிவித்த திமுக கட்சியினருக்கு ராமர் ஜுரம் முழுவதும் குளிர் காய்ச்சலாக அடித்தது என்றே சொல்ல வேண்டும் இதில் முத்தாய்ப்பாக பல திமுக பிரமுகர்கள் குடும்பங்களுடன் ராமர் பிரதிஷ்டை தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்தனர் என்பது தான் தமிழகத்தின் ஹைலைட்

திமுகவைப் பொறுத்தவரை சிறுபான்மை ஓட்டும் வேண்டும்… இந்துக்கள் ஓட்டும் வேண்டும்.

ஜுரம் இருப்பது திமுகவினருக்கே தெரிந்துவிட்டது,ஆனால் அதற்கு சரியான மருந்து என்ன என்பது தான் திமுக தலைவர்கள் யாருக்கும் புரியவில்லை?!