தொடர்கள்
அழகு
மூன்று நூற்றாண்டு கடிதங்கள் - மாலா ஶ்ரீ

20231018094321412.jpg

கடந்த 18-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் பிரெஞ்சு நாட்டுக்கும் பிரிட்டனுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. இப்போரின்போது, கலேட்டே (Galatee) என்ற பிரெஞ்சு போர்க்கப்பலில் வேலைபார்த்த மாலுமிகளுக்கு, அவர்களின் மனைவி, பெற்றோர், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் ஏராளமான கடிதங்களை எழுதி அனுப்பியுள்ளனர். பின்னர் அந்த பிரெஞ்சு போர்க்கப்பலை, பிரிட்டனின் ராயல் கடற்படை சிறைப்பிடித்தது. மேலும், பிரெஞ்சு போர் கப்பலில் இருந்த மாலுமிகள், சிப்பந்திகளுக்கு, அவர்களின் குடும்பத்தினர் எழுதி அனுப்பிய கடிதங்களையும் டெலிவரி செய்யாமல் பிரிட்டன் கடற்படை பறிமுதல் செய்தது.

பின்னர் அக்கடிதங்கள் 1757-58ம் ஆண்டுவாக்கில் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு, லண்டனில் உள்ள பிரிட்டன் கடற்படை நிர்வாக துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்கடிதங்கள் கடற்படை அதிகாரிகள் ‘ஏதாவது ராணுவ தகவல்கள் பகிரப்படலாம்’ என்ற சந்தேகத்தின் பேரில் பிரித்து படித்துள்ளனர். எனினும், அக்கடிதங்களில் வெறும் குடும்ப விஷயங்கள் மட்டுமே இருந்துள்ளன. இதனால் அக்கடிதங்களை குடோனில் போட்டு பாதுகாத்து வந்தது பிரிட்டன் கடற்படை.

இவ்வாறு 3 நூற்றாண்டுகள் - 265 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது அக்கடிதங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கல்வியாளர்களின் கைக்கு கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் கியூ நகரில் உள்ள தேசிய ஆவண காப்பகத்தில் பிரெஞ்சு போர் கப்பல் மாலுமிகளுக்கு கடிதங்கள் அடங்கிய பெட்டியை பேராசிரியர் ரெனாட் மோரியக்ஸ் ஆர்வத்துடன் திறந்து பார்த்துள்ளார். அப்பெட்டிக்குள் கிட்டத்தட்ட 104 கடிதங்கள் இருந்துள்ளன.

இதுகுறித்து பேராசிரியர் ரெனாட் மோரியாக்ஸ் கூறுகையில், “இந்தத் தனிப்பட்ட கடிதங்களை எழுதிய பிறகு, படித்து பார்க்கும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். இக்கடிதங்களைப் படிக்கும்போது, கப்பல் மாலுமிகளின் குடும்பத்தினர் உணர்வுபூர்வமாக எழுதியிருந்ததை நினைத்து பார்க்க முடிந்தது. அந்த பிரெஞ்சு கப்பலில் வேலைபார்த்த சிப்பந்திகள் பலரின் மனைவிகள், பெற்றோர்கள் மிக உருக்கமாக எழுதியுள்ளனர்.

சிலரோ, ‘எங்கு இருக்கிறீர்கள், எப்படி இருக்கீறீர்கள் என்றுகூட எங்களுக்கு தெரியாது’ என மிக உருக்கமாக எழுதியிருக்கின்றனர்!

இன்றைய காலகட்டத்தில் ஜூம், வாட்ஸ்-அப் ஆகியவை நம்மிடம் உள்ளன. ஆனால், 18-ம் நூற்றாண்டில் வெறும் கடிதங்கள் மட்டுமே மக்களிடம் இருந்தன. ஆனால், அவர்கள் உணர்வுப்பூர்வமாக எழுதியிருந்தது பரிச்சயமான ஒன்றாகவே இருந்தது!"

யோசித்துப் பாருங்கள்.

முதுகுத் தண்டில் சிலீரென்று இருக்கிறது. நம் கடிதங்களோ அல்லது செய்திகளோ நம் குடும்பத்தினருக்கோ நண்பர்களுக்கோ சென்றடையாமலே எங்கோ போய் சேரும் நிலை.....

அந்தக் கடிதங்களில் எத்தனை காதல் இருந்திருக்கும், எத்தனை பிரிவு, எத்தனை துக்கம், எத்தனை சந்தோசம், சென்று சேராத செய்திகள், சென்று சேராத குழந்தை பிறப்பு, சென்று சேராத மனஸ்தாபங்கள், ஏக்கங்கள்......

இப்படி நினைத்துப் பார்த்தாலே தொண்டைக்குழி அடைத்துக் கொள்ளும் காலம் கொடூரமாக கற்றுத் தரும் செய்தி இதுதான்....

முடிந்தவரை நம் உணர்வுகளை வேண்டியவர்களுக்கு கடத்துவோம்.

முடிந்த வரையில் பரிமாறுவோம் அன்பை மட்டும்.....