காலைப் பொழுது காப்பியோடு
நாளைத் துவக்க கூட நாளேடு...!
கண்ணில் பட்ட செய்திகளில்
அஞ்சலி சொல்லும் ஒருபக்கம்...!
மறைந்த சிலருக்கு இரங்கல்...
மலர் வளையத்தில் முகங்கள்...!
மரணம் மறுக்கப் படுவதில்லை...!
மறந்தும் யாரையும் விடுவதில்லை...!
எண்பத்து இரண்டில் ஓர் மரணம்...
காமாட்சி அம்மாளின் படம்...!
தோற்றம் மறைவு எனும் விவரம்...!
கரீம் பாய் படத்தின் செய்தி...!
அறுபத்து நான்கு வயதில் முக்தி,
அடைந்தார் எனச் சொல்லும் பத்தி...!
இரண்டிற்கும் இடையே சிறிதாய்,
இளமைத் துடிப்பில் ஓர் முகம்...!
கிருஷ்ணசாமி என்றது அப்படம்...!
பணம் படைத்தவரின் படமோ- ஓர்
பக்கம் முழுவதும் தெரியும்...!
பணம் பார்த்தவரின் படமோ- ஓர்
பக்கத்தின் ஓரத்தில் வரும்...!
சின்னதாய் அவன் படம் போட்டு,
தோற்றம் மறைவு தேதி யோடு,
தம்மால் முடிந்தது இதுதானென,
நிறுத்திக் கொண்டன உறவுகள்...!
கிருஷ்ணசாமி..!யார் என்றது மனம்.?
இறந்துவிட்ட அவனை, நிறைய
இந்தியர்கள் நினைக்க வில்லை...!
துறுதுறுப்பாய் இருந்த முகம்,
கருகருப்பாய் முறுக்கு மீசை,
வீரமாய் பாய்கின்ற கண்கள்...!
காந்தமாய் இழுத்தது என்னை...!
மூப்படைந்து மற்றவர் போல்
நோய்பட்டு அவன் இறக்கவில்லை...!
மூக்கில் வாயில் குழாய்கள் இட்டு
மருத்துவ மனையில் அவனில்லை...!
பனியும் மழையும் பொழியும்,
பள்ளம் மலையின் நடுவே,
இரவும் பகலும் நாட்டின்,
எல்லை காக்கும் வீரனவன்...!
துச்சமென தன்னுயிர் வைத்து,
துவம்சம் செய்து எதிரிகளை
அச்சமின்றி அழித்தவனின்,
நெஞ்சம் குண்டு ஏந்தியதால்
வீரமரணம் எய்தவன் அவன்...!
எங்கோ தெற்கே ஓர் கிராமம்...
இளம் மனவி இரு குழந்தைகள்,
எப்போ வருவார் அப்பாவென...?
காத்திருக்க,அவன் போகவில்லை...?
போனதோ அவனின் பூத உடல்...!
விண்ணுலகில் கிருஷ்ணசாமி...!
"வா கிச்சா வா", மண்ணுலகை
காக்கும் கிருஷ்ணன் அழைக்கிறார்..
இன்றுதான் எனை நினைத்தாயோ?
உனை நினைக்க நேரமில்லை...!
உன் கோவில் செல்ல பொழுதில்லை,
பக்தி பஜனை அறிந்ததில்லை...!
என்றோ விடுமுறையில் ஊர் வந்தால்
அய்யனார் கோவில் செல்வேன்...!
நாட்டைக் காப்பதே வேலை... !
வேலையில் கவனம் தேவை...!
பேச்சைக் குறைத்து விட்டேன்...!
சிரிப்பை மறந்தே விட்டேன்...!
அதிகாரிகள் கோபம் கண்டேன்..!
பண்டிகை கிழமை தெரிந்த தில்லை..
ருசி பார்க்கும் சாப்பாடு இல்லை...!
காசு சொந்தமாய் சேர்த்த தில்லை...!
குடும்பம் கஷ்டமென காசு கேட்டால்,
கொடுக்க வழியின்றி அழுதிடுவேன்..
அப்பாவின் கண் சிகிச்சைக்கு,
கண்ணாடி யுடன் தருவதற்கு
காசு சேமிக்க திட்டமிட்டேன்...?
ஏழுமலை ஏறிவர நினைத்தேன்...?
அதற்குள் இங்கு வந்தேன் சாமி...!
புண்ணியம் செய்தோர் பலர்
வைகுண்டம் இருப்பார் என்பர்...!
இங்கு நான் எதற்கு சாமி...?
நரகம் செல்லாது இப்பாவி
வழிதவறி வந்தேனோ இங்கு...?
வியப்போடு கேட்டான் கிருஷ்ணன்:
விடாமல் பேசி விட்டாய் கிச்சா... !
நரகத்தை அனுபவித்து விட்டாய்...!
ஸ்வர்கபூமி இது,ஆனந்தமாய் இரு...!
சுற்றித் திரி ,சுதந்திரமாய் இனி...!
வா கிருஷ்ணசாமி,வலதுகாலை வை
இங்கே லெப்ட் ரைட் வேண்டாம்...!
இனி என்றும் நிம்மதி உன்னுடையது,
உன் திட்டம் எல்லாம் என்னுடையது...!
நிறைவேற்றுவது என் பணியானது...!
நான் மட்டுமா காக்கும் கடவுள்..?
நீயும் தான் கிருஷ்ணசாமி...
நாட்டை காக்கும் கடவுள் நீ..!
பாலா
கோவை
Leave a comment
Upload