நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர் ஒருவரை ரயிலில் சந்திக்க நேர்ந்தது. பரஸ்பரம் விசாரிப்புக்கு பிறகு, அவருக்கு எப்போது பணி ஓய்வு என்று நான் கேட்டபோது இந்த மாதம் தான் ஓய்வு பெற இருப்பதாக அவர் சொன்னார். அப்போது நான் ரிட்டயர்மென்ட் லைஃப்யை நன்றாக அனுபவி என்று சொன்னபோது எப்படி அனுபவிப்பது சாப்பிட பணம் வேண்டாமா நான் அரசாங்கம் வேலையா பார்க்கிறேன் பென்ஷன் வர, தனியார் நிறுவனத்தில் தானே வேலை பார்த்தேன் பணம் என்ன மரத்திலா காய்கிறது பறித்துக் கொள்ள என் கம்பெனியில் பணி தொடர வாய்ப்பில்லை வேறு வேலை தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார். இப்போதைய சூழ்நிலையில் பெரும்பான்மை பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகள் சார்ந்து வாழ விரும்பவில்லை என்பது நன்கு தெரிகிறது. ஒன்று அவர்களுக்கு அந்த சூழல் பிடிக்கவில்லை அல்லது அவரது வாரிசுகளின் கவனிப்பு நன்றாக இருக்காது என்று அவநம்பிக்கை தான் காரணமாக இருக்க வேண்டும் என்பது எனது அனுமானம். இப்போது நவீன வசதிகளுடன் உள்ள முதியோர் காப்பக விளம்பரங்களை பார்த்தாலே அது தெரிகிறது. வசதி உள்ள வயதானவர்கள் இந்த முதியோர் காப்பகங்களில் அடைக்கலம் ஆகி தங்கள் வாழ்க்கையை தொடர்வார்கள். ஆனால் மற்றவர்கள் நிலை என்ன என்று யோசித்தபோது கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது.கூட்டுக்குடும்பங்கள் உறவுகள் மேம்படுவதை விரும்பியது. தனி குடித்தனங்கள் உறவுகள் பற்றிய ஒரு புரிதல் இல்லாத ஒரு வாழ்க்கைக்கு அவர்கள் பழகிவிட்டார்கள். இது அவர்களின் சுயநலத்தின் வெளிப்பாடு ஒரு சின்ன வட்டத்தில் அந்த சூழலில் அவர்கள் வாழ விரும்புகிறார்கள் என்பதுதான் உண்மை போலும். ஆனால், வயதான பிறகு அவர்களும் இப்படி ஒதுக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டு பிரச்சினைகளை சந்திக்கும் போது தாங்கள் தவறு செய்ததை உணர்வார்கள். ஆனால், காலம் கடந்த யோசனை எந்தப் பயனும் இல்லை.
நான் இப்போது எல்லாம் பஸ் நிறுத்தம், ரயில் நிலைய நடைபாதை பஸ் ரயில்களில் இளைஞர்கள் ஜோடி ஜோடியாக இருப்பதை பார்க்கிறேன். அவர்கள் நடவடிக்கை பேச்சு எல்லாமே அவர்கள் காதல் வசப்பட்டு இருப்பதை வெளிப்படுத்துகிறது. இதில் சில பள்ளி மாணவ மாணவிகளும் அடங்கும். இந்த காதல் வசப்படல் எத்தனை பேரை திருமணம் வரை எடுத்துச் சென்றிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. இது எந்த மாதிரியான காதல் ஏதோ தெய்வீக காதல் என்று சொல்கிறார்களே இது அந்த வகை காதலா சினிமா சீரியல் காதலா என்றெல்லாம் எனக்குப் புரியவில்லை. ஆனால் அப்போது அவர்கள் அன்னோனியமாக இருக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. இதேபோல் வழக்கறிஞர் நண்பரை நான் சந்திக்க உயர் நீதிமன்றம் சென்ற போது குடும்ப நீதிமன்றத்தை கடந்து தான் நான் செல்ல வேண்டி இருந்தது. அங்கு விவாகரத்து கேட்டு நின்று கொண்டிருந்த கணவன் மனைவிகளை பார்த்தபோது அவர்கள் எல்லோரும் 20 –22 வயதுடைய இளைஞர்கள் இளைஞிகளாகத்தான் இருந்தார்கள். திருமணம் ஆன குறுகிய காலத்திலேயே இவர்களுக்கு திருமண வாழ்க்கை எப்படி அலுத்து போனது என்பது புரியவில்லை கைக்குழந்தையிடன் சிலர் இருந்ததையும் பார்த்தேன். அந்தக் குழந்தையின் எதிர்காலம் பற்றிய யோசனையும் என்னை பயமுறுத்துவது. திருமண வாழ்க்கை என்ற புரிதல் இல்லாமலே அது பற்றி தெரியாமலோ அதற்குள் இவர்கள் நுழைந்து விட்டார்களோ என்ற சந்தேகம் எனக்கு தோன்றியது. அவசர காதல் அவசரத் திருமணம் அவசர விவாகரத்து இதுதான் இன்றைய இளம் தலைமுறை.
Leave a comment
Upload