தொடர்கள்
அனுபவம்
ஊழியருக்கு ₹1500 கோடியில் சொகுசு இல்லம்! முகேஷ் அம்பானி தாராளம் !! மாலா ஶ்ரீ

20230328154310789.jpg

இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களில் வழக்கமாக உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், ஒருசில அலுவலர்கள், ஊழியர்களுக்கு போனஸாக பெருந்தொகை மற்றும் கார்கள் நிறுவனத் தலைவர் பரிசாக வழங்கியதை நாம் கேள்விப்பட்டது உண்டு. இதை முறியடிக்கும் வகையில், தங்கள் நிறுவனத்தின் நீண்ட கால ஊழியருக்கு, ₹1500 கோடி மதிப்பிலான சொகுசு இல்லத்தை ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் குழுமங்களின் தலைவரான முகேஷ் அம்பானி வழங்கி, அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறார்!

முகேஷ் அம்பானிக்கு வலது கரம் என அன்புடன் அழைக்கப்படும் மனோஜ் மோடி. இவருக்கு மும்பையில் உள்ள நேபியன் சாலையில் 1.7 லட்சம் சதுர அடி பரப்பளவில், 22 மாடிகளுடன் சொகுசு வசதிகள் நிரம்பிய ஒரு இல்லத்தை தான் முகேஷ் அம்பானி வழங்கியுள்ளார். இதன் மதிப்பு ₹1500 கோடி என்று ஒரு பன்னாட்டு இணையதள வீடு,மனை விற்பனை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

'அதுசரி… நீண்ட கால ஊழியருக்கு ஏன் இத்தனை கரிசனம்?' என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முகேஷ் அம்பானியும் மனோஜ் மோடியும் கல்லூரிக் கால நண்பர்கள். இருவரும் மும்பை பல்கலைக்கழகத்தில் வேதியியல் தொழில்நுட்ப பிரிவில் ஒன்றாகப் படித்துள்ளனர். பின்னர் முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி, கடந்த 1980-ம் ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தியபோது, இதில் மனோஜ் மோடியும் ஊழியராகச் சேர்ந்துள்ளார்.

அதன்பிறகு முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவன பொறுப்பேற்றதும், அவருடனும் அவரது மனைவி நீடா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி, மகள் இஷா அம்பானியுடன் நல்ல நட்புறவில் மனோஜ் மோடி இருந்து வருகிறார். இதனால் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் நீண்ட கால ஊழியர் என்பதையும் தாண்டி, முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர் எனக் கருதப்படுகிறது.

மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பில்லியன் டாலர் மதிப்பிலான பல்வேறு ஒப்பந்தங்களுக்கு மனோஜ் மோடி மூளையாகச் செயல்பட்டு வந்துள்ளார். தற்போது ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநராகவும் மனோஜ் மோடி செயல்பட்டு வருகிறார். இதனால் அவருக்கு ₹1500 கோடி மதிப்பிலான சொகுசு இல்லத்தை முகேஷ் அம்பானி வழங்கியுள்ளார் என ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவித்தனர்.

அதுக்கெல்லாம் மச்சம் வேணும் மச்சம் வேணும் மச்சம் வேணுங்கோஓஓஓஓஓஓஒ