தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்


இப்படி செய்யலாமா..!

20230006200151604.jpg

தமிழகத்தில் குறிப்பாக அரசியல் சினிமா கல்வி என்று எல்லாத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. எம்ஜிஆர் தாய்க்குலமே என்று பெண்களைக் கொண்டாடினார். அதனால் தான் கணவர் பேச்சைக் கூட கேட்காத பெண்கள் நான் சொன்னால் கேட்பார்கள் என்று உரிமையோடு சொன்னார். அது அவரது நம்பிக்கையின் வெளிப்பாடு அவரது ஆட்சி தாய்மார்களுக்கான ஆட்சியாக இருந்தது. ஜெயலலிதாவை அம்மா என்று கட்சிக்காரர்கள் அழைக்க தொடங்க நாளடைவில் பொதுமக்களும் ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்க ஆரம்பித்தார்கள். ஒரு பொது மேடையில் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்ட ஜெயலலிதா எனக்கு என் பெயரே இப்போது நினைவில்லை என் பெயர் அம்மா என்று தான் நானே நினைத்துக் கொண்டிருக்கிறேன் அந்த அளவுக்கு என்னை நீங்கள் கொண்டாடுகிறீர்கள் என்றார். ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் தமிழகத்தின் பெண்களின் பாதுகாப்புக்கான நம்பிக்கை கேள்விக்குறியாகுமோ என்று ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. ஆளுங்கட்சியின் இரண்டு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலர் ஒருவருக்கு பொதுவெளியில் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள் இரண்டு திமுக உறுப்பினர்கள். சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அந்தக் காவலர் இந்த கேவலத்தை செய்வது ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் எதுவும் செய்ய முடியாமல் அழுது இருக்கிறார். இந்த செய்தியை கேள்விப்பட்டதும் காவல்துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் அவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை.பெண்களின் உரிமை சமூக நீதிப் பற்றி பேசும் கட்சித் தலைவர் அவர்கள் இருவரையும் கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எதிர்க்கட்சிகள் இதை ஒரு முக்கிய பிரச்சனை ஆக்கி கண்டன குரல் எழுப்பிய பிறகு தான் முதல்வர் கைது நடவடிக்கை எடுத்தார். கட்சித் தலைவர் கட்சியை விட்டு அந்த இருவரையும் தற்காலிக நீக்கம் செய்தார். காவல்துறைக்கு ஆளுங்கட்சியில் பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான விஷயம் என்பதை இந்த ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளாமல் போனது சோகம்