தொடர்கள்
ஆன்மீகம்
மும்பை டு சபரிமலை பாதயாத்ரி - ராத்தோட்

20221122232800771.jpg

சமீபத்தில் ஒரு 99 வயதே நிரம்பிய கேரள தேசத்து பெண்மணி ஒருவர் தனது 50 ஆம் வயதில் சபரிமலைக்கு சென்று வர ஆரம்பிதிருக்கின்றார். இந்த வருடம் ஒரு தடையும் இன்றி 49 வருடங்களாக மலையேறி வந்திருக்கிறார் என்ற செய்தியும் வீடியோவும் வரலாகி வருகிறது.

அட நம்ம பக்கத்திலேயே இருக்கும் சந்த்ரசேகர் ராத்தோட் ஐய்யப்பன் இது மாதிரியான முயற்சிகள் செய்தவர் தானே என்று பட்டது. சபரிமலைக்கு விரதமிருந்து இருமுடி கட்டி சென்று வரும் பக்தர்களை ஐய்யப்பன் என்றே அழைப்பது எங்கும் மரபு.

2001 ல் ஒரு மூவர் அடங்கிய குழுவோடு நடக்க ஆரம்பித்தார். அடுத்த வருடம் பத்து பேர் கொண்ட குழுவோடு சேர்ந்து நடந்து சென்று வந்தார். மூன்றாம் முறை அவரை ஏமாற்றி வருகிறது. அட் லீஸ்ட் மூணு வாட்டி போனாலாவது நல்லா இருக்கும் என்று தனக்கு ஆசை என்று அங்கலாய்க்கிறார்.

அப்படி என்ன பண்ணிட்டாரு? என்றா கேட்கின்றீர்கள்?

ஒண்ணுமில்ல, மும்பையிலிருந்து சபரிமலை வரை தான் நடந்து சென்றதை தான் சொன்னேன். ஆமாம் இதுவரை இரண்டு முறை இந்த மாதிரியான பயணம் மேற்கொண்டிருக்கிறார். மூன்றாம் முறைக்காக கூட்டாளி தேடிக் கொண்டிருக்கிறாராம் என்று என்னை கூர்ந்து பார்த்தார்.

விலகி விட்டேன் நான் மாட்டேன் என்று. ஏனெனில், அவரோடு கொஞ்ச நேரம் பேசி கொண்டிருந்தால் நமக்கு அந்த ஆசையை அனாயசயமாக ஊட்டி விட்டுவிடுவார் என்பதில் ஐயமே இல்லை.

பாருங்களேன், இப்ப கூட மாசம் ஒரு முறையாவது அந்தேரியிலிருந்து ப்ரபாதேவி சித்திவினாயக் மந்திர் வரை நடக்க வைத்துவிடுகிறார்.

நிச்சயம் இந்த பழக்கம் இருப்பதால் சபரி மலை போன்ற மலைகளுக்கு செல்வதில் சிரமம் தெரியாது தைரியத்துடன் சென்று வர முடிகிறது என்னால்.

மும்பை டு சபரிமலை தூரம் தோராயமாக 1600 கி.மீ ஆகும். இவர் தவறாது ஒவ்வொரு ஆண்டு மகர ஜோதி அன்று அங்கு இருக்கும் முகமாக தனது யாத்திரயை அமைத்துக்கொள்வார்.

மும்பையில் செம்பூரில் இயங்கி வரும் ஹரிஹரபுத்ர பஜன் சமாஜ் கடந்த வாரம் தனது 55வது மண்டல/மகர பூஜையை நடத்தியது. அந்த சமாஜத்தின் மகரம் குழுவோடு தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார்.

20221122232924420.jpg

இந்த மும்பை டு சபரிமலை ப்ரயாணம் பற்றிக் கூறுகையில், “முதல் முறை மிகவும் கடுமையாக இருந்தது. கார்த்திகை முதல் நாள் துளசி மாலை அணிந்து கொண்டுவிட்டோம். நடக்க ஆரம்பித்தோம். எங்கள் குருசாமி படு ஸ்ட்ரிக்ட். மும்பை திசை நோக்கி நடக்கும்படி ஏற்பட்டால் கூட அதைத் தவிர்த்திடும்படி கறாராகச் சொல்லிவிட்டார். காலை மாலை இரு வேளையும் அந்த வேளையில் எங்கிருக்கின்றோமோ அங்கு குளித்துவிட்டு சரணங்கள் கூப்பிடவேண்டும். ஒரு வேளை தான் சாப்பாடு. அதில் நிச்சயம் பூண்டோ வெங்காயமோ இருந்துவிடக்கூடாது. அதற்காக, ஓட்டல்களில் அவரது இன்ஸ்பெக்ஷன் தவறாது நடைபெறுமாம். அவரின் ஓக்கே ஆனவுடன் தான் சாப்பிட வேண்டும். இடையில் பகலில் தூங்கவே முடியாதாம். இரவில் தூங்குவதோடு சரி. சராசரியாக ஒரு நாளைக்கு 25 டு 30 கி.மீ நடக்கணும். காடு மலை, ஆறு, ஓடை, தார் ரோடுன்னு மாறி மாறி வரும். நமது வேகம் தடைப்படும்தான். இருந்தாலும் இந்த T20ல ரெண்டாவது ஆடுற டீம்க்கு ஒவ்வொரு ஓவருக்குப் பின்னர் வேண்டிய ரன் ரேட் மாறிக்கிட்டே வருமே அந்த மாதிரி தான்.

முதல் பயணம் இப்படி இருந்தால் இரண்டாவது பயணம் மற்ற சக பாத சாரியோடு ஈடு கொடுத்து, வேகமாகவோ அல்லது அவரின் குறை நடை வேகத்துடன் நடந்து வரவேண்டியிருந்தது.

குருவாயூரில் இருமுடி கட்டுவோம் என்ற இவர் வருடா வருடம் ஜோதியன்று அதிகாலையில் பஸ்ம குளத்தில் முங்கி சொட்ட சொட்ட அதே ஈரத்துணியுடன் அய்யப்பன் சன்னிதியை அங்கப்ரதக்ஷிணம் வருவார் 18 சுற்று. அதோ அந்த புகைப்படம் அவரது முதுகில் அமைந்திட்ட புண்ணிய காயங்களைக் குறிக்கிறது. சென்ற இரு வருடங்களாக கொரோனா காரணமாக 18 ஆவது ஆண்டு அங்கப்பிரதக்ஷிணம் தடைப்பட்டுப் போனது பற்றி நொந்துகொள்கிறார். இந்த முறையாவது தடையிருக்கக்கூடாது என்று அய்யனை வேண்டிய வண்ணம் இருக்கிறார்.

20221122232655956.jpg

இதோடு விடுவதில்லை மனுஷன். 58ஏ வயதாகும் இவர் மகர ஜோதி கண்டு மும்பை வந்த கைய்யோடு அதே தினம் சுமார் 200லிருந்து 300 பேர் கொண்ட மும்பை டு ஷிர்டி சாய்பாபா பாத யாத்திரையை நடத்திக்கொண்டு செல்கிறார். இவரது தலைமையில் ஒரு நால்வர் குழு சாய்பாபா பல்லாக்கை சுமந்து செல்வர். தினமும் அந்த நால்வர் குழுவை செலக்ட் செய்வார். அந்த பல்லக்கை சுமப்பவர் சிகரெட்டோ புகையிலை சமாச்சாரம் பழக்கம் இல்லாதவாராக இருப்பதில் அவர் கறாராக இருக்கிறார். அந்த பல்லாக்கு சுமக்க போட்டியே நடக்கும். தேர்வு செய்து தான் சுமப்பவரைத் தயாராக்குகிறார். 270 கி மீ கொண்ட இந்த பாத யாத்திரை ஏழே நாளில் முடித்துவிடுகிறார்கள். வருடம் முழுதும் இந்த மும்பை டு ஷிர்டி பாத யாத்திரை சாரை சாரையாய் சென்று கொண்டே இருப்பர். அதிலும் நவம்பர் டு மார்ச் பாத சாரிகளின் எண்ணிக்கை லட்சங்களைத்தாண்டும். பலர் காலணியின்றி நடப்பதையும் காணலாம். ராம நவமி, தத்த ஜெயந்தி போன்ற நாட்களில் கோவிலில் தரிசனம் செய்யும் முகமாக இந்த பாத யாத்திரை லட்சக் கணக்கில் யாத்திரீகர்கள் நடந்து செல்வதைப் பார்க்கலாம். இதில் பெண்கள் மட்டும் என்ற குழுக்கள் பல உண்டு.

வருடத்தில் இந்த இரண்டு யாத்திரைகளை முடித்துக்கொண்டு தனது கார் மெக்கானிக் தொழிலைத் தொடர்கிறார்.

மூன்றாவது மும்பை டு சபரிமலை பாத யாத்திரைக்காகக் காத்திருக்கிறார். அதற்கு அந்த ஐய்யன் அருள் புரியட்டும். இந்த பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்றித் தரட்டும்.

ஸ்வாமியே ஸரணம் ஐய்யப்பா