தொடர்கள்
அரசியல்
மகா - க'டகா எல்லை தொல்லை - பால்கி

20221109224649650.jpg

தநா – க’டகாவிடையேயான 'முந்தைய' காவிரி நீர் பிரச்சினை மாதிரி, மகா - க'டகா எல்லை தொல்லை அறுபதுக்கும் மேலான வருஷங்களாக இழுத்துக் கொண்டிருக்கிறது.

போன வாரமெல்லாம் இவ்விரு மாநிலங்களிலும் பெலகாவியை உரிமை கோருவது தொடர்பாக பெலகாவியில் (கர்நாடகா ரக்ஷனா வேதிகேவி, மஹாராஷ்டிரா ஏகிகாரண் சமிதி) இரு தரப்பினருக்கும் கைகலப்பு, இரு தரப்பிலிருந்தும் வந்து போகும் வாகனங்கள் குறிவைக்கப்படல், மகா அமைச்சர்களின் பெலகாவி விசிட் கேன்ஸல் ஆனது, மகா’வின் அரசியல் தலைவர்களின் மகா உசுப்பல் வசனங்கள், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மையின் உறுதியான பேச்சு. மாநிலத்தில் 2023 சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த பிரச்சினைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற மறுப்பு வேறு போன்ற சூடான செய்திகள் வந்த வண்ணமிருந்தன.

20221109224613574.jpg

பொம்மை தொடர்ந்து,"இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது, எங்களின் நிலைப்பாடு சட்டமானது மற்றும் அரசியலமைப்புச் சட்டமானது, எனவே நாங்கள் சட்டப் போராட்டத்தில் வெல்வோம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே, தேர்தலுக்காக பிரச்சினையை உருவாக்க விரும்புவதில் எந்த கேள்வியும் இல்லை. மாநிலத்தின் எல்லைகளையும், நமது மக்களையும், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் வசிக்கும் கன்னடர்களின் நலன்களையும் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்”.

மகா – க’டகா முதலமைச்சர்களின் முயற்சி: எல்லை வரையறை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையும், மகாராஷ்டிர முதல்வர் ஷிண்டேவும் செவ்வாய்கிழமை இரவு தொலைபேசியில் பேசி, இரு தரப்பிலும் அமைதியும், சட்டம் ஒழுங்கும் பராமரிக்கப்பட வேண்டும் என்று ஒப்புக்கொண்டனர்.

20221109224245824.jpg

இரு மாநிலத்தின் பஸ் சேவைகள், வாகனங்கள் கலவரக்காரர்களின் பொம்மைகளாக களேபரப்பட்டன. இது குறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் பொம்மையிடம் செவ்வாய்க்கிழமை பேசியிருக்கிறார்.

20221109224151895.jpg

மகா அமைச்சர்களின் பெலகாவி விஜயம்: ஒரு நாள் முன்னதாக, பொம்மை மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிடம்," உங்களது அமைச்சரவை சகாக்களை, கர்நாடகாவுடனான மாநிலத்தின் எல்லைப் பிரச்சினையை ஒருங்கிணைப்பதற்காக நியமிக்கப்பட்ட மகாராஷ்டிர அமைச்சர்கள் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் ஷம்புராஜ் தேசாயைய் பெலகாவிக்கு அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் அவர்களின் வருகை எல்லை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை சீர்குலைக்கும்.

ஏனெனில், பெலகாவி மாவட்ட நிர்வாகம் திங்கள்கிழமை இரண்டு மகாராஷ்டிர அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் நகருக்குள் நுழைவதற்கு தடை விதித்தது. துணை ஆணையர் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் நித்தேஷ் பாட்டீல், எல்லைப் பிரச்சனையில் மகாராஷ்டிர உயர் அதிகாரக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஒரு எம்பி தவிர, அவர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், CrPC இன் பிரிவு 144 இன் கீழ் தடை உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.

பவாரின் பார்வை: முன்னாள் மாநில முதலமைச்சரான பவார், மத்திய அரசையும் மகாராஷ்டிராவில் உள்ள ஏக்நாத் ஷிண்டே-பாஜக அரசாங்கத்தையும் "மௌனப் பார்வையாளர்கள்" என்று சாடினார்.

2022110922433368.jpg

"எல்லைப் பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அங்குள்ள நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் கூறினார்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் அதற்கு கர்நாடக அரசும், மத்திய அரசும் தான் பொறுப்பாகும் என்றார்.

“மகாராஷ்டிரா பொறுமையைக் கடைப்பிடிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது, அதைச் செய்ய அது இன்னும் தயாராக உள்ளது. ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. 24 மணி நேரத்தில், வாகனங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால், இந்தப் பொறுமை வேறு பாதையில் செல்லும், முழுப் பொறுப்பும் கர்நாடக முதல்வர் மற்றும் கர்நாடக அரசு மீதுதான் இருக்கும்" என்று பவார் செய்தியாளர்களிடம் கூறினார்.

மஹாராஷ்டிராவின் அக்கல்கோட் மற்றும் சோலாப்பூரில் உள்ள "கன்னடம் பேசும்" பகுதிகளை இணைக்க வேண்டும் என்று பொம்மை சமீபத்தில் முயன்றார், மேலும் சாங்லி மாவட்டத்தில் உள்ள ஜாட் தாலுகாவில் உள்ள சில கிராமங்கள் தென் மாநிலத்துடன் சேர விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

மகாராஷ்டிராவில் உள்ள சில கிராமங்களில் கர்நாடகா மற்றும் குஜராத்தின் எல்லையோரங்களில் இந்த மாநிலங்களுடன் இணைய முற்படுவது குறித்து கேள்வி எழுப்பிய பவார், “குஜராத், சோலாப்பூர் அல்லது ஜாட் எல்லையில் என்ன நடந்தது? இவையெல்லாம் எப்படி திடீரென்று உருவானது?

வடக்கு மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள், தாங்கள் அக்கறையின்மை மற்றும் வளர்ச்சியின்மையை எதிர்கொள்வதாகக் கூறி, குஜராத்தில் தங்களைச் சேர்க்கக் கோரியுள்ளன.

"நான் ஏழு-எட்டு முறை சோலாபூரின் பாதுகாவலர் அமைச்சராக இருந்தேன், எனக்கு சோலாபூரை நன்கு தெரியும். எனது ஆட்சிக் காலத்தில் இந்தப் பிரச்சினையை யாரும் எழுப்பவில்லை. அது ஜாட் (கர்நாடக எல்லையான சாங்லியில்) அல்லது குஜராத் எல்லையில் இருக்கட்டும். இந்தப் பிரச்சினைகளை யாரும் எழுப்பவில்லை. யாரோ ஒருவர் (நிலைமையை) தூண்ட முயற்சிக்கிறார், துரதிர்ஷ்டவசமாக மகா அரசு ஒரு பார்வையாளன் பாத்திரத்தை எடுத்துள்ளது,”என்று பவார் கூறினார்.

20221109224412145.jpg

ராவுத்தின் ரவுசு: உத்தவ் சேனாவின் ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் ராவத் சென்ற புதன்கிழமை ஒரு ட்வீட்டில் மத்திய அரசைக் குறிவைத்து, "டெல்லியின் ஆதரவு" இல்லாமல் பெலகாவியில் மராத்தி மக்கள் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது என்று கூறினார்.

“பெலகாவியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்” என்றார்.

ஃப்ளாஷ் பேக்:

ஒரு குண்டூசி (வைக்க) நிலம் கூட, ஐ மீன், ஒரு அங்குலம் நிலம்கூட விடமாட்டேன் என்று மகாவுடனான பங்குத், ஐ மீன், எல்லைத் தகராறு குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை டிசம்பர் 19, 2021 கூறியதிலிருந்து ஆரம்பிப்போம் இதன் மூலத்தை அறிய.

அன்று சிவாஜி மகாராஜ், சங்கொல்லி ராயண்ணா சிலைகள் சிதைக்கப்பட்டு கன்னடக் கொடி எரிக்கப்பட்டதைக் கண்டித்து கர்நாடக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குண்டர் சட்டம் பாயும் என்றும் சூளுரைக்கப்பட்டது.

தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடகா எல்லையில் ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெளிவுபடுத்தியதோடு, மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் உள்ள கன்னடர்கள் அம்மாநிலத்தில் இணைந்து இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற விரும்பினால், தனது அரசு அதற்கும் தயார்.

மகா’வுடனான எல்லைப் பிரச்சனையில் மகாஜன் அறிக்கை இறுதியானது என்பது எங்கள் அரசின் தெளிவான நிலைப்பாடு,

மகாஜன் அறிக்கை வெளியான பின்னும் அரசியலுக்காகவே, எல்லைப் பிரச்சனையை உயிர்ப்புடன் வைத்திருக்க மகாராஷ்டிரா பலமுறை முயற்சித்து வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், இது தொடர்பாக மொழி ரீதியான பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

"பெலகாவி கர்நாடகாவின் இரண்டாவது அதிகார மையமாகும், சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை அது கர்நாடகா மற்றும் கன்னடர்களின் பகுதியாக இருக்கும், அதற்கு சுவர்ண விதான சவுதா ஒரு சான்று. அதில் எந்த சமரசமும் இல்லை" என்று அவர் கூறினார்.

மேலும், கன்னடிகர்கள் அதிகம் வசிக்கும் மகாராஷ்டிராவின் ஜாத் தாலுக்காவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 40 கிராம பஞ்சாயத்துகள் அரசால் வழங்க இயலாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவர்கள் தண்ணீர் மற்றும் மகா அரசின் உதாசீன அநீதியை சந்தித்து வருகிறார்கள், மேலும் கர்நாடகாவுடன் சேர விரும்புகிறார்கள், மகாராஷ்டிராவில் உள்ள கன்னடர்களைப் பாதுகாப்பது கர்நாடகாவின் பொறுப்பு என்று முதல்வர் கூறினார்.

மேலும், அவர்கள் கர்நாடகாவுடன் இணைந்து தீர்மானம் நிறைவேற்ற விரும்பினால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நான் இப்படி சொன்னது சர்ச்சையாகத்தான் போகிறது என்பதை நான் அறிவேன், ஆகட்டும். அட்டூழியங்கள் நடக்கும், நாங்கள் வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

தகராறின் பூர்வீகம் இதுதான்:

1957ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்ட பிறகு எல்லைப் பிரச்சினை ஆரம்பமானது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கணிசமான மராத்தி பேசும் மக்கள்தொகையைக் கொண்டிருப்பதால், முந்தைய பம்பாய் பிரசிடென்சியின் ஒரு பகுதியாக இருந்த பெலகாவிக்கு மகாராஷ்டிரா உரிமை கோரியது. தற்போது தென் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 814 மராத்தி மொழி பேசும் கிராமங்களுக்கும் இது உரிமை கோரியது.

எவ்வாறாயினும், மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் மற்றும் 1967 ஆம் ஆண்டு மகாஜன் கமிஷன் அறிக்கையின்படி மொழிவாரியாக எல்லை நிர்ணயம் செய்வதே இறுதியானது என்று கர்நாடகா கருதுகிறது.

மேலும், பெலகாவி மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை வலியுறுத்தும் விதமாக, பெங்களூருவில் உள்ள சட்டமன்றமான விதான் சவுதாவை மாதிரியாகக் கொண்டு சுவர்ண விதான் சவுதாவைக் கட்டியுள்ளது, மேலும் அங்கு ஆண்டுதோறும் சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடைபெறுகிறது.

காவிரி பிரச்சினைக்கு ஒரு முடிவுக்கு வந்தது போலே இதற்கும் ஒரு முடிவு வரட்டும். மத்தியிலும் இவ்விரு மாநிலங்களிலும் பாஜகதான் ஆட்சியில் உள்ளதே.