இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முதல் விதை என்றால் சரித்திரம் 1857 சிப்பாய் கலகத்தைத் தான் சொல்கிறது.
ஆனால் அதற்கு முன்பே அந்த போராட்டத்தின் விதை விதைக்கப்பட்டது தமிழக மண்ணில் வேலூர்!
அது சுதந்திரத்திற்காக ஏற்பட்ட கலவரமா ?? தனிமனித சுதந்திரத்திற்காக என்றும் சொல்லலாம்.
10ந் தேதி 1806.
வேலூரில் ஒரு அசாதாரண தினம்.
அன்று நூறு சிப்பாய்கள் ஒரு கலவரத்தை துவங்குவதற்கு காரணமானவர் ஜெனரல் ஜான் கிராட்டாக். (சர் பட்டமெல்லாம் இப்போது எழுதுவாக இல்லை)
திடீரென அவர் போட்ட ஒரு விதி , சிப்பாய்கள் அனைவரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக அவர் போட்ட விதிமுறை தான் அன்றைய கலவரத்திற்கு காரணம்.
இந்துக்கள் விபூதியோ குங்குமமோ எந்த விதமான மத அடையாளங்களையும் அணியக் கூடாது . அது மட்டுமல்ல இஸ்லாமிய வீரர்கள் முகத்தில் தாடி மீசை எதுவும் இல்லாமல் மழுங்க எடுத்து விட வேண்டும் என்பது தான் அந்த சட்டம்.
தேன் கூட்டில் கைவைப்பது தெரியாமல் கிராட்டாக் கிராக்குத் தனமாக போட்ட இந்த புதிய விதிமுறைதான் கலவரத்திற்கு காரணமானது.
வேலூர் கோட்டை அன்று 100 புரட்சி சிப்பாய்களால் பிரிட்டிஷாருக்கு எதிராக கலவரம் ஏற்படுத்தி கைப்பற்றப்பட்டது. ஒரே ஒரு நாள் தான்.
அதற்குள் கிழக்கிந்திய கம்பெனியின் ஆற்காட்டு படை வந்து இந்த கலவரத்தை புரட்சியை ஒடிக்கி விட்டனர் என்பது வேறு கதை.
எப்படித் துவங்கியது இந்த மினி புரட்சி என்பது ஒரு விறுவிறுப்பான கதை.
சிப்பாய்கள் தங்கள் குடும்பத்துடன் கோட்டைச் சுவர்களுக்கு வெளியே தங்குவது தான் வழக்கம்.
ஆனால் அன்றைய தினம் காலை அவர்களுக்கு ஒரு பரேடு இருந்ததால் முதல்நாள் இரவு கோட்டைக்குள் தங்க வைக்கப்பட்டனர்.
நள்ளிரவு தாண்டி இரண்டு மணி நேரங்கள் கடந்தது.
புரட்சி சிப்பாய்கள் ஒன்று கூடினர். கோட்டையை கைப்பற்றும் வேலை துவங்கியது.
புரட்சி சிப்பாய்கள் தங்களது படை ஆஃபீசர்கள் 14 பேரை கொன்றனர். கோட்டைத் தளபதி ஜான் ஃபான்கோர்ட் அதில் ஒருவர்.
விடிவதற்குள் கோட்டையில் மைசூர் சமஸ்தானத்தின் கொடியை பறக்க விட்டனர் புரட்சி சிப்பாய்கள். அங்கு சிறைப்பிடிக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் இரண்டாவது மகன் வெளியே வந்து புரட்சியாளர்களுடன் சேர்ந்து கொண்டார்.
ஆனாலும் கோட்டைக்கு வெளியே காவலில் இருந்த மேஜர். கோப்ஸ் என்ற ஆங்கிலேயர் உடனடியாக ஆற்காடு படைக்கு தகவல் தெரிவிக்க, மெட்ராஸ் காலாட்படை ஆற்காட்டிலிருந்து 26 கி.மீ கடந்து இரண்டு மணி நேரத்தில் வந்து விட்டது. அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தவன் ராபர்ட் ரோலியோ ஜில்லஸ்பீ என்ற ஆங்கிலேயன். ஆற்காட்டில் அவசர தகவல் தெரிந்ததும் 15 நிமிடங்களில் புறப்பட்டு விட்டார்களாம்.
(கொன்று குவித்த ஜில்லஸ்பீ)
ஜில்லஸ்பீ வேலூர் கோட்டைக்கு வரும் போது கதவு திறந்திருக்கவில்லை. சுமார் அறுபது ஆங்கிலேயர்கள் மட்டுமே 69வது படையில் மிஞ்சியிருக்க, அவர்களிடம் போதிய ஆயுதங்கள் இல்லை என்பதையும் புரிந்து கொண்டான். கோட்டைச் சுவரை கயிற்றின் உதவியுடன் ஏறினான் ஜில்லஸ்பீ. அது வரை நேரம் கடத்த தன்னுடைய படை வீரர்களை துப்பாக்கியால் சுடச் சொல்லி விட்டு கோட்டைக்குள் குதித்தான்.
மெட்ராஸ் 19வது படையும் அதற்குள் வந்து விட அவர்களை வைத்து கோட்டைக் கதவுகளை தகர்த்தார்கள். வெகுசுலபமாக காலாட்படை உள்ளே புகுந்தது.
வழியில் எந்த புரட்சி சிப்பாய் தடுத்தாலும் ஆங்கிலேய படைகளின் வாள் மட்டுமே பேசியது.
கோட்டைக்குள் சுமார் நூறு புரட்சி சிப்பாய்கள் பதுங்கியிருந்தனர். அவர்கள் அத்தனை பேரையும் வெளியே வரவழைத்தனர். அனைவரையும் சுவர் ஓரமாக வரிசையில் நிற்க வைத்தனர் ஆங்கிலேயர்கள். ஜில்லஸ்பீ ஆணையிட்டான்.
நூறு பேரும் பொறுமையாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கோட்டைச் சுவரை தகர்த்தெறிந்த ஜான் ப்ளாகிஸ்டான் என்ற பொறியாளர் பின்னாட்களில் இந்த காட்சியை விவரிக்கும் போது இப்படி எழுதியிருக்கிறார்.
"அந்த செயல் தகுந்த தண்டனையாகத்தான் எனக்குப் பட்டது. ஆனாலும் இத்தனை நாட்களுக்குப் பின் யோசித்துப் பார்க்கும் போது அதை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அப்போது அதைப் பார்த்ததற்கும் இப்போது யோசிப்பதற்குமான கால அளவு தான் அதற்கு காரணம்.
இந்தக் கால அளவு தான் சரித்திரத்தின் ஒவ்வொரு சம்பவத்தையும் ஏன் எதற்கு நடந்தது இது என்று யோசிக்க வைக்கிறது. என்ன சாஸ்வதம் இந்த உலகில் என்று ஒவ்வொரு நாடும் போரைத் துரத்துகிறது. இப்படி தத்துவங்கள் ஒரு புறமிருக்க......
அந்த நூறு புரட்சி சிப்பாய்கள் யார் ? அவர்கள் குடும்பம் எப்படி இருந்திருக்கும். ? அவர்கள் வாரிசுகளுக்கு
( ஒரு வேளை இருந்தால்) இந்த கொடிய கதை, செய்தி தெரியுமா ?? தங்கள் பாட்டனார்களின் புரட்சியும் விடுதலை வேள்வியும் சிந்திய ரத்தமும் அறிவார்களா ???
அன்று சுமார் 350 புரட்சியாளர்கள் மொத்தமாக கொல்லப்பட்டனர் என்கிறது வரலாறு.
அது போலவே ஆங்கிலேய படைகளிலும் இருநூறு பேர் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
பலர் கோட்டையை விட்டு சிதறி ஓடினாலும் உள்ளூர் காவல் துறை அவர்களை விரட்டிப் பிடித்து கைது செய்தது. (காவல் துறையில் யார் பெரும்பாலும் இந்தியர்கள் தானே..)
பலர் இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஆறு பேர் பீரங்கியில் கட்டி வைக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டனர். இது ஆங்கிலேயத் தனமான தண்டனை. அந்தக் கால போர்களில் தண்டனைகள் பலவிதமாக நிறைவேற்றப்படும். இந்த வகை ஆங்கிலேய ஸ்டைல்.
உடனடியாக உடல் சிதறடிக்கப்பட்டு கொல்லப்படும் கொடுந்தண்டனை.
இந்த களேபரத்தில் கிரட்டாக் போட்ட விதிமுறைகள் இரத்து செய்யப்பட்டது.
அவரை உடனடியாக இங்கிலாந்துக்கு திரும்ப வரவழைத்தது ஆங்கிலேய அரசு. அவனுக்கு டிக்கெட் காசு கூட கொடுக்க மறுத்து விட்டது.
இரண்டு புரட்சியாளர்கள் மட்டும் சென்னை கோட்டைக்கு வரவழைக்கப்பட்டு 90 கசையடிகள் கொடுக்கப்பட்டது.
நல்லவேளையாக சுமார் 50 புரட்சி சிப்பாய்களின் கசையடி ஏனோ ரத்து செய்யப்பட்டது.
மேலும் வேலூர் கோட்டையில் பணியில் மிச்சம் இருந்த அத்தனை ஆங்கிலேயர்களும் கொல்கத்தா மற்றும் சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்தியர்களின் செண்டிமெண்டை நன்றாக புரிந்து கொண்ட ஆங்கிலேய அரசு அன்றிலிருந்து மத அடையாளமாக எந்த வித பைத்தியக்காரத்தனமான விதி முறைகளையும் விதிப்பதை கை விட்டது.
1857 ல் மீரட்டில் நடந்த சிப்பாய் கலகத்திற்கும் தமிழகத்தின் வேலூரில் நடந்த சிப்பாய் கலகத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
என்ன, 1857 நடந்த சிப்பாய் கலகம் அளவில் பெரியது. வேலூரில் திப்பு சுல்தானின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று முயன்றதைப் போலவே தான் 1857ல் பகதூர் ஷா தலைமையில் முகலாய சாம்ராஜ்யத்தை கொண்டு வருவோம் என்று துவங்கினார்கள்.
1858ல் கிழக்கிந்திய கம்பெனியை கலைத்து விட்டு இந்திய அரசை நிறுவுவதற்கு ஆங்கிலேய அரசை நிர்பந்தித்தது 1857 சிப்பாய் கலகம் தான்.
வேலூர் கோட்டை புரட்சியை அமேலியா ஃபேரர் என்ற பெண்மணி. ஃபேன்கோர்டின் மனைவி அவரும் அவர் குழந்தைகளும் எப்படித் தப்பினார்கள் என்று எழுதி வைத்ததால் தான் சரித்திரம் வேலூர் புரட்சியை நினைவில் வைத்திருக்கிறது.
சின்ன அளவிலானது என்றாலும் வேலூர் சிப்பாய் புரட்சி தான் இந்திய சுதந்திர வரலாற்றின் முதல் அடியாக இருக்க வேண்டும். அன்று மட்டும் இப்போது போல சமூக ஊடகங்கள் இருந்திருந்தால் அந்த குட்டி நெருப்புப் பொறி இந்தியா முழுவதும் பரவியிருந்திருக்கும்.
சுதந்திர வேள்வியில் தொலைந்து போன பெயர்கள் தலைவர்கள் என்றால் இந்த முதல் நூறு பேரில் இருந்து துவங்க வேண்டும். மொத்த தேசத்திற்கும் விடுதலை என்ற பெருங்கனவோடு இந்த புரட்சி துவங்கியிருக்கவில்லை என்றாலும் சுதந்திர வேள்வியை ஒவ்வொரு மனதிலும் மறைமுகமாகவேனும் இந்த சம்பவம் ஏற்படுத்தியிருக்கும்.
ஆக, தோல்வியிலும் சோகத்திலும் முடிந்தாலும் முதல் சுதந்திர வேட்கை துவங்கியது தமிழகத்தில் என்பது மறுக்க முடியாத உண்மை.
Leave a comment
Upload