தொடர்கள்
தொடர்கள்
தேன்தமிழ் துளிகள் -3-மரியா சிவானந்தம்

20220629093859826.jpg

இயற்கையில் முரண்கள் இணைந்தே உள்ளன ..!

இரவு-பகல், இருள்-ஒளி, வெற்றி-தோல்வி ,நன்மை-தீமை. இன்பம்- துன்பம் என்று முரண்கள் என்றும் இணைந்தே மனித வாழ்வில் வருகின்றன.

இருளும், ஒளியும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையது. இருளின் முடிபு ஒளி வெள்ளத்தை கொண்டு வரும். ஒளி குறைந்த போது, இருள் கவியும். இரவும், பகலும் தொடர்புடையன. இரவின் முடிவு விடியல். பகலின் நீட்சி இரவாகும். வெற்றியும் தோல்வியும் தொடர்ந்து நிகழும். நன்மை கலவாத தீமை இல்லை. தீமையின் சுவடு படியாத நன்மையும் இல்லை. இன்பமும், துன்பமும் இணை பிரியாதவை. முழுவதும் இனிமை நிறைந்த வாழ்க்கை இல்லை. முற்றிலும் துன்பமே அமைந்த வாழ்க்கையும் இல்லை. இவை அனைத்தும் இயற்கை நியதிகள்.

சென்ற வாரம் 'இனியவை நாற்பது' என்னும் பதினெண் கீழ்க்கணக்கு நூலைப் பற்றி விவாதித்தோம். 'இனிதே' என்று முடியும் அடிகளுடன் அப்பாடல்கள் வாழ்க்கைக்கு இன்பம் சேர்ப்பவற்றை பட்டியல் இட்டது. பதினெண் கீழ்க்கணக்கில் மற்றொரு நூலாகிய 'இன்னா நாற்பது. 'இன்னா' என்று முடியும் அடிகளைக் கொண்ட நாற்பது பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்கள் என 160 கருத்துக்களை, அறிவுரைகளை கொண்டுள்ளது இந்நூல். மனித வாழ்க்கையில் துன்பம் தரும் பொருள்களை அட்டவணை இடுகிறது,

இன்னா நாற்பது நூலை இயற்றியவர் கபிலர். தமிழ் இலக்கிய வரலாற்றில் 'கபிலர் 'என்ற பெயரைக் கொண்ட புலவர்கள் பலர் வலம் வருகிறார்கள். இவர் புறநானூறு பாடல்களைப் பாடிய சங்கப்புலவர் கபிலர் அல்லர். இந்நூலாசிரியர் 'கபில தேவர்' என்ற பெயரால் குறிக்கப்படுகிறார். சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தவர் இவர். கி.பி.நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூல் இது.

'இனியவை நாற்பது' வாழ்க்கைக்கு இனிமை சேர்க்க கூடிய, நன்மை பயக்கக்கூடிய நேர்மறை செய்திகளைச் சொல்கிறது என்றால் 'இன்னா நாற்பது' வாழ்க்கைக்கு துன்பம் தரக்கூடிய எதிர்மறை சேதிகளை எடுத்து கூறுகிறது. "இந்த செயல்கள் உனக்குத் துன்பத்தை வர வைக்கும். எனவே ,அவற்றில் இருந்து விலகி நில்" என்று வெளிப்படையாக சொல்கிறது இன்னா நாற்பது . அவ்வகையில் இந்நூல் அறிவுரைகளை ஆணித்தரமாக சொல்லும் நேர்மறை நூலே.

இன்னா நாற்பது நூலின் கடவுள் வாழ்த்தும், இனியவை நாற்பது நூலின் கடவுள் வாழ்த்தை ஒத்ததே.

முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா ஆங்கின்னா
சத்தியான் தாள்தொழா தார்க்கு

(இன்னா நாற்பது-கடவுள் வாழ்த்து)

"மூன்று கண்களை உடைய சிவனின் திருவடிகளை வணங்காமல் இருப்பவர்கள் துன்பம் அடைவர். பொற்பனை கொடியை உடைய பிரமனை துதிக்காதவர்கள் துன்பம் அடைவார். சக்கரம் ஏந்திய திருமாலை மறந்து வாழ்வது துன்பத்தை வருவிக்கும். வலிமை கொண்ட வேல் ஏந்திய முருகக்கடவுளை தொழாதவர்கள் துன்பம் அடைவர்" என்பது இப்பாடலின் பொருளாகும்.

சென்ற இதழில் வெளி வந்த 'இனியவை நாற்பது' கடவுள் வாழ்த்துடன் ஒப்பிடுகையில், சிவன், பிரம்மா ,திருமால் ஆகிய கடவுளரை வணங்குதல் இன்பம் தரும் என்ற பொருளைத் தந்தது கண்டோம். இன்னா நாற்பதோ இவர்களை வணங்காமல் விடுத்தல் துன்பம் தரும் என்று உரைக்கிறது.

'இன்னா நாற்பது' வழங்கும் இந்த வாரத்துக்கான பாடல்

பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா;
'அரியவை செய்தும்!' என உரைத்தல் இன்னா;
பரியார்க்குத் தாம் உற்ற கூற்றின்னா; இன்னா,
பெரியார்க்குத் தீய செயல்.
(இன்னா நாற்பது -26)

கல்வி ,கேள்வி, ஒழுக்கங்களில் சிறந்த பெரியோரிடம் நட்பு கொண்டு இருந்து விட்டு, பின்பு அந்நட்பினை கை விட்டு அவரை விட்டு விலகி இருப்பது துன்பத்தைத் தரும்.

செய்ய இயலாத அரிய செயலை 'செய்து முடிப்போம்' என்ற வெற்று சூளுரை துன்பத்தைக் கொண்டு வரும்

நம்மிடம் அன்பு கொண்டு வாழ்பவர்களிடம் , நமது துன்பங்களைப் பகிர்ந்துக் கொள்ளுதல் துன்பம் தரும்.

பெருமை மிக்க பெரியவர்களுக்குத் தீங்கு செய்தல் பெருந்துன்பத்தைக் கொண்டு வரும்

எளிய கருத்துக்கள், எக்காலத்துக்கும், எந்நிலையினருக்கும் ஏற்ற கருத்துக்கள் அல்லவா இவை? பண்டைய நீதிநூல்கள் எல்லாமே தனிமனித மற்றும் சமூக வாழ்வில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய நியம ஒழுக்கங்களை உரத்துக்கு கூறுகின்றன. எல்லா நூல்களிலும் அறத்தை வளர்த்தல், வறியவர்க்கு அளித்தல், கல்வியைப் போற்றுதல், பெரியோரை வணங்குதல் என்று தனி ஒழுக்கங்களும் அரசனுக்கு அடிபணிதல், வீரம், வாய்மையுடன் நடத்தல் என்னும் சமூக மதிப்பீடுகளும் வலியுறுத்தப்படுகின்றன. இன்னா நாற்பதும் விதி விலக்கல்ல .

சிந்தனைக்கு விருந்தாகும் அழகான பாடல்கள் பல அணிவகுத்து வர காத்திருக்கின்றன.

- சந்திப்போம்

.