தொடர்கள்
தொடர்கள்
:சென்னை மாதம் - 46

20220629164840226.jpg

பல்லவர் காலத்திலிருந்து சென்னை பெருநகர் பகுதியில் கல்வெட்டுகள்:

மணலிவிற்கு சிம்மவிஷ்ணுவின் பெயர் -- திருவொற்றியூர் கல்வெட்டுகளில் பதிவு
சென்னையின் சுற்றுப்புறங்களில் ஏராளமான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில இலக்கிய சான்றுகளால் மேலும் விவரங்கள் கிடைக்க, இப்பகுதியின் வரலாற்றை நம்மால் பெரும் அளவிற்கு தெரிந்துகொள்ளமுடிகிறது. பல்லவ, சோழர், ராஷ்டிரகூடர், பாண்டிய மற்றும் விஜயநகரம் போன்ற பல்வேறு வம்சங்களைச் சேர்ந்த கல்வெட்டுகள், பிற சிறிய வம்சங்களைத் தவிர, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், அவர்களின் ஆட்சியை பற்றியும் மக்களின் வாழ்வு நிலையை பற்றியும் பல்வேறு திருப்பங்களைக்கொண்ட சரித்திர பக்கங்களை நாம் அறிந்துகொள்ளலாம். கிட்டத்தட்ட 50 அரசர்களின் போர்கள், வெற்றி தோல்விகள், வளர்ச்சித்திட்டங்கள் போன்றவற்றை பல்வேறு கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன. இப்படி பதிவுசெய்யப்பட்ட வரலாற்றிலேயே, சென்னை பெருநகரின் கடைசி 1,600 ஆண்டுகளின் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ளலாம்.

கி.பி 575 முதல் 600 வரை, பெரிய பல்லவர்களின் புதிய வரிசையைத் தொடங்கிய சிம்மவிஷ்ணுவைப்பற்றிய கல்வெட்டுகள் ஏராளமான தகவல்களை வழங்குகின்றன.

சிம்மவிஷ்ணுவிற்கும் சென்னை பகுதிக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்தன என்பதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளில் உள்ளன. திருவொற்றியூருக்கு அருகில் உள்ள மணலி என்ற பகுதியை 'சிம்மவிஷ்ணு சதுர்வேதிமங்கலம்' என்று அழைக்கப்பட்டதை கல்வெட்டுகள் பதிவுசெயகின்றன (102, 112, 128, 142, 156, 228 etc of 1912 -- திருவொற்றியூர் கல்வெட்டுகள்).

மூன்றாம் ராஜராஜன் காலத்தில் கூட மணலிக்கு இன்னொரு பெயர் 'சிம்மவிஷ்ணு சதுர்வேதிமங்கலம்' என்று இருந்து வந்தது.

சிம்மவிஷ்ணுவைத் தொடர்ந்து முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600-630) ஆட்சிக்கு வந்தார், இவருடைய கல்வெட்டுகள் கொண்ட ஒற்றைக்கல் குகை பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரந்தத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு, மகேந்திரவர்மனுக்கு இருந்த பட்டங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுவதால் மிகவும் மதிப்புமிக்கது. பட்டப்பெயர்கள் -- மத்தவிலாசன், சித்திரகார புலி, சங்கீரண கதி, சத்ருமல்லன், அவனிபாஜன்; பரிவாதனி என்ற வீணை வாசிப்பில் சிறந்தவன்.

மகேந்திரவர்மன் இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகளைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ் பெற்ற குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி இவ்வரசனே. மகேந்திரவர்மன் தான் கட்டிய மண்டகப்பட்டு குடைவறைக் கோவிலின் கல்வெட்டில் மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையின்றி இக்கோவிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். மகேந்திரவர்மனின் சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை மாமல்லபுரத்தில் காணலாம்.

மத்தவிலாசம் கி.பி 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர் முதலாம் மகேந்திரவர்மரால் இயற்றப்பட்ட ஒரு சமற்கிருத அங்கத நாடகம். இது சைவ மற்றும் பௌத்த துறவிகளை மையமாய்க் கொண்ட ஒரு நகைச்சுவை நாடகமாகும். இதனைத் தவிர பகவதஜ்ஜூகம் என்ற நாடகத்தையும் மகேந்திரவர்ம பல்லவர் இயற்றியுள்ளார்.
மகேந்திரவர்மன் இடையில் சமண மதத்தைத் தழுவியிருந்தான். பின்னர் சைவ நாயன்மார்களில் ஒருவரான அப்பரால் தன்நோய்த் தீர்க்கப்பெற்று மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினான்னென்று அறிகின்றோம். இந்த பட்டங்கள் சமஸ்கிருதத்தில் இருந்தன. தெலுங்கில் சில தலைப்புகள் இருந்தன.

மகேந்திரவர்மன் கல்வெட்டுகள் கொண்ட ஒற்றைக்கல் குகை பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குகை கோயில் என்னானது? இதைப்பற்றிய திடுக்கிடும் செய்தி அடுத்த வாரத்தில்!!!


-- (தொடரும்)

-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)