# மகளதிகாரம் - 17 #
முன்னொரு பொழுதில்
யாருக்கும் அடங்காதவர்
பெரும் கோபக்காரர் என அறியப்பட்டவர்
போதி மரத்தடியில் சம்மணமிடாமலே
அமைதி தவழ
மென்வார்த்தைகள் நிரம்பியவராய்
மாறிப்போனார்
முன்பெல்லாம்
இம்மாற்றங்கள் குறித்து யாரேனும் கேட்டால்
வெடுக்கென்று எரிந்துவிழும் அப்பழக்கமும்
துளியுமிராது மறைந்து போனது
முற்றிலும் மாறியதில்
கட்டியவளுக்கு சிறு பங்குண்டு எனினும்
முழுவதும் அவளே என்றே ஊர் நம்பியது
இவை கேட்டு மருமகளின் மீது
சிறு பொறாமை உண்டெனினும்
உள்ளூர மகிழவே செய்தாள்
தாய்க்கிழவி
ஒருகாலத்தில்
தன் தந்தையின் பரிணாம மாற்றங்களை
நிர்ணயித்த மகள்கள்தான்
பின்னொரு தருணத்தில்
தன் மகனின்
தன் கணவனின்
மாற்றங்களுக்கான விடையை
இவ்வுலகில் தேடுகிறார்கள் என்பதை
நகைத்தபடி ரசித்தது காலம்.
Leave a comment
Upload