திருநீறு (விபூதி) அணிந்தால்…!!
"மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே"என்று திருநீறு (விபூதி) பற்றி திருஞானசம்பந்தர் மிகப் பெருமையாகக் கூறியுள்ளார்.
திருநீறு `விபூதி' என்றும் அழைக்கப்படும். விபூதி என்றால் ஞானம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். `பிறப்பு, இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து, ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு’ என்று போற்றுகிறது திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகம்.
“பூசுவதும் வெண்ணீறு” என்று திருவாசகம்-திருச்சாழலில் பாடியுள்ளார் மாணிக்கவாசகர்.
"நீறில்லா நெற்றி பாழ்!" என்கிறார் அவ்வையார்.
விபூதி சிறந்த கிருமி நாசினி என்றும், அதனால் பல நோய்களை வராமல் தடுக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது. விபூதியை, ஜபம், மந்திரித்தல், யந்திரங்கள், மருத்துவம்... எனப் பல்வேறு பணிகளுக்காகப் பயன்படுத்திய விதத்தை அகத்திய மாமுனி `அகத்தியர் பரிபூரணம்' என்ற நூலில் விளக்கியிருக்கிறார்.
பகவத்கீதையின் பத்தாவது அத்தியாயம் பகவான் கிருஷ்ணரின் மகிமைகளைப் போற்றும் பகுதியாக விபூதி யோகம் என்ற பெயரிலேயே அமைந்திருக்கிறது.
"பூதி அணிவது சாதனம் ஆதியில்
காதணி தாமிர குண்டலம் கண்டிகை
ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம்
தீதில் சிவயோகி சாதனம் தேரிலே." என்கிறார் திருமூலர்.
இப்பாடல் சிவனடியார்கள் அணிய வேண்டிய முக்கிய சிவ சின்னங்கள் மூன்று அதில் திருநீறு முதலாவதும் இரண்டாவதாகச் செம்பிலான குண்டலத்தைக் காதிலும் உருத்திராக்க மாலையைக் கழுத்திலும் அணிய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ என்று சொல்லி திருநீறு அணிவது தேவாரம், திருவாசகம், திருமந்திரம் அடங்கிய பன்னிரண்டு திருமுறைகளைப் பாடிய பலனைத் தரும்.
திருநீற்றின் வேறு பெயர்கள்:
திருநீற்றை விபூதி, பஸ்மம், பசிதம், சாரம், இரட்சை என்றும் அழைக்கிறார்கள்.
அருட்செல்வத்தை வழங்குவதால் விபூதி என்று கூறப்படுகிறது.
பாவங்களையும் சாம்பலாக்குவதால் பஸ்மம் என்று அழைக்கப்படுகிறது.
இருளாகிய அறியாமையை அகற்றி ஆன்ம ஓளியைக் கொடுப்பதால் பசிதம் என்று வழங்கப்படுகிறது.
அனைத்து குற்றங்களையும் போக்குவதால் சாரம் என்ற உயர் பொருளில் அழைக்கப்படுகிறது.
துன்பங்களிலிருந்து காத்து மனத்தெளிவைத் தருவதால் இரட்சை என்று கூறப்படுகிறது.
மருந்தான திருநீறு:
இந்த திருநீற்றை (விபூதி) நெற்றியில் தரித்துக் கொண்டால், எந்த ஒரு தீய சக்தியும் மனிதர்களை அண்டாது ஆன்மீக ரீதியான நம்பிக்கை. திருநீறு ஆன்மிக பலத்துக்கு மட்டுமல்ல, ஆரோக்கிய நலத்துக்கும் உகந்தது என்கிறது நவீன அறிவியல்.
குளித்தவுடன் தலையில் இருக்கும் நீரைப் போக்கி தலைவலி, ஜலதோஷத்தைத் தடுக்கும் தன்மை விபூதிக்கு உண்டு. இதனை நமது தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் தடவிக் கொள்ள அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும். இதனால், எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டுச் சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும். இந்த விபூதியைச் சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டு எச்சில் கூட்டிக் கலந்து உள்ளே அருந்தினால் வயிறு சம்பந்தமான சில நோய்கள் குணமாகும்.
மனித உடலில் நெற்றி ஒரு முக்கியமான ஸ்தானம். புருவ மத்தியை வசியப்படுத்திப் பல வகை சித்துகளைச் செய்ய முடியும் என்பது ஞானியர் வாக்கு. நெற்றியின் மையத்தைக் காப்பதற்காகவே விபூதி அணியப்படுகிறது. ஆக்ஞா, விசுத்தி சக்கரங்களைப் பாதுகாத்து ஆன்ம ஒளியைப் பெருக்குவது விபூதி.
பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டச் செய்யும் நெற்றியைச் சீர்படுத்தவும், சூரியக் கதிர்களின் சக்திகளை நெற்றி வழியாக உள்ளே செலுத்தவும் திருநீறு பயன்படுகிறது என்று அறிவியல் பூர்வமாகக் கூறப்பட்டுள்ளது.
திருநீறு நேர்மறை அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. திருநீற்றின் மின்காந்த பண்பானது . நம்மைச் சுற்றி அதிர்வுகளை உள்வாங்கிச் சரியான விகிதத்தில் செலுத்துகின்றன.
திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அதனால் தான் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் வந்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்லும் போது, நெற்றியில் விபூதியைப் பூசிக் கொள்வதில் நம்மிடம் நம்பிக்கை இன்றளவும் இருந்து தான் வருகிறது.
தேவர்களும் ஞானிகளும் போற்றிய திருநீற்றை அணிந்து நாளும் வளமோடு "அறிவுத் தெளிவு பெற்று" வளமோடு வாழ்வோம்!
Leave a comment
Upload