தொடர்கள்
Daily Articles
சின்னக் கலைவாணர் விவேக்! - வெங்கட் சுபா

20210317085044305.jpg

சின்னக் கலைவாணர் விவேக்....!

தமிழ்த்திரை உலகம் மற்றும் திரைப்பட ரசிகர்கள் S P B எனும் இசைக்கலைஞரை இழந்த போது ஏற்பட்ட அதிர்ச்சியையே இன்னமும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் மற்றுமொரு நல்ல மனிதன், சிறந்த கலைஞன் விவேக் மறைவு மாபெரும் இழப்பாக...தாள முடியாத துக்கமாக இன்றைய விடிகாலை பிறந்தது.

விவேக் ...

சட்டென புகழ் பெற்ற திடீர் கலைஞனல்ல ..

பாலச்சந்தர் அறிமுகம் எனும் மோதிரக்கை தொடுதல் முதல் கட்டம் .. ஆனால் அதற்குப் பின் தன் வழியை, தன் கலையை.. தனி மனதனாக செதுக்கிக் கொண்ட அதிசயக் கலைஞன் ... அற்புத நடிகன் ... அழகன் ..

20210317085325943.jpg

நகைச்சுவைக் கலைஞன் என்றால் சிரிக்க வைக்கும் கோமாளி எனும் வழக்கத்தை மாற்றிய அயல் நாட்டு சார்லி சாப்ளின், அந்த கால கலைவாணர் அதற்குப்பின் நாகேஷ் என்றால் இன்று நாம் இழந்த விவேக் அதே வரிசையில் இடம் பெறும் மாபெறும் கலைஞன் !

உண்மையிலேயே நம்ப முடியாத மரணம் ..

பொதுவாக உடல் நலம் காக்க அனைத்து வகை ஒழுக்கமும் உள்ள மனிதன் ...

புத்திர சோகம் எனும் மாபெரும் இடியையே தாங்கிய அந்த இதயம் ... முந்தைய நாள் வரை முழுவதும் புண்ணியங்களாகவே செய்த நல்ல மனிதனின் இந்த நாள் காலைப் பொழுது எப்படி இருண்டு போனது என்பதும் புரியவில்லை ...

இவர் பணிபுரிந்த இயக்குனர்கள் அனைவருக்கும் இவர் பங்களிப்பு தெரியும். அந்த அளவுக்கு இவர் நல்ல எழுத்தாளரும் கூட.

அனைத்து காலகட்டத்திலும் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் அனைவரையும் கேட்டால் இவர் எவ்வளவு நியாயமானவர், கனிவானவர் என்பது புரியும் ...

சாமி படத்தில் வரும் கதாபாத்திரம் போல நிஜத்திலும் பல புரட்சிகர சிந்தனைகளோடு வாழ்ந்தவர்; பல சந்தர்ப்பங்களில் தன் செயலில் நிரூபித்தவர் ...

20210317085432333.jpg

மரக்கன்று நடுதல் என்பது ஒரு புகைப்படம் எடுக்க மட்டுமே என வாழும் பல பிரபலங்களுக்கு மத்தியில் அதனை இந்த உலகத்திற்கு செய்ய வேண்டிய கடமையாக செய்தவர் ... பலரும் செய்ய உந்துகோலாக வாழ்ந்தவர் இந்த கலாமின் காதலர்.

அவரால் வளரும் பல ஆயிரம் மரங்கள் காலம் தாண்டி நிச்சயம் அவர் பெயர் சொல்லும் ...

அவர் நடித்த பல கதாபாத்திரங்கள் அவரது திறமைக்கு சாட்சியாக நிலைக்கும் ... வரும் தலைமுறைக்கும் உற்சாகமளிக்கும் .

ஜனங்களின் கலைஞன் .. சின்னக் கலைவாணர் .. என்னும் பட்டப் பெயரெல்லாம் தாண்டி விவேக் எனும் மூன்றெழுத்து விவேக மனிதனை தமிழ்த் திரையுலகத்தால் மறக்கவே முடியாது

என்ன ஆனது ஏன் ஆனது என்பது மருத்துவர்களுக்கே புரியாத மர்மம்தான் ...

எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத மரணம்தான் ...

ஒரு சாதாரண அரசு அலுவலராக வாழ ஆரம்பித்து கடுமையாக உழைத்து முன்னேறி தன் புகழ் நிலைக்க பாடுபட்டு வெற்றி பெற்ற சாதனையாளர் விவேக் .

அவர் ஆன்மா சாந்தி அடைந்து வேறொரு உலகில் அமைதி பெறட்டும் .. அங்கும் அவர் சமுதாயப் பணி தொடரட்டும் ....

நம்மை அழவைத்த ஆண்டவன் மாத்திரம் குரூரமாய் சிரிக்கட்டும்...!