தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

20210001164324784.jpeg

தேவை வெளிப்படைத்தன்மை....

சுகாதார சவால்கள் நிறைந்ததாக 2020 இருந்தது. சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து, அர்ப்பணிப்புடன் இன்றுவரை சேவை செய்து வருகின்றனர். மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில், கொரோனா நோய் தொற்றால் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். கோவிட் வைரஸை எதிர்த்து போராடுவதில் நாம் ஒன்றுபட்டு இருந்தோம் என்பது உண்மைதான்.

தடுப்பு ஊசி பரிசோதனையிலும் நாம் இந்த அக்கறையை காட்ட வேண்டும். மருத்துவ வல்லுநர்கள் தடுப்பூசி பரிசோதனையை இறுதிக்கட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். தடுப்பூசி போடத் தொடங்கும்போது வதந்திகள் பரவக்கூடும். வதந்திகள் என்பதே சிலரின் சுய லாபத்திற்காக பொறுப்பற்ற தன்மையால் பரப்பப் படுவதுதான்!

முதலில் இதற்கு மருந்தே இல்லை என்று சொல்லி வந்தார்கள். உலகம் முழுவதும் இதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் முழு முனைப்புடன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முழு மூச்சாக ஈடுபட்டார்கள்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை இந்த வாரம் நடைபெறும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புத்தாண்டில் தடுப்பூசி கிடைக்கும் என்று பிரதமர் ஒரு விழாவில் சொல்லியிருக்கிறார்.

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு தான், பொதுமக்கள் கொரோனா அச்சத்தில் இருந்து விடுபடுவார்கள். எனவே தடுப்பூசி விஷயத்தில் வெளிப்படைத் தன்மையுடன் இந்த அரசு இருக்க வேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்பும். அதுதான் சரியும் கூட.

ஆக.. தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது தற்சமயம் உறுதிபட தெரிந்து விட்டது. அதேசமயம் இந்த தடுப்பூசி பரிசோதனைக்கு உள்ளாகும் பொது மக்கள் பற்றியும் அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும்... அது நல்லதோ, கெட்டதோ..எதுவானாலும் அதையும் வெளிப்படையாக அரசு தெரிவிக்க வேண்டும். இது கட்டாயம் மட்டுமல்ல.. அரசின் கடமையும் கூட.