இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும், முக்கியமாக உலக சுகாதார அமைப்பும் இனி மக்கள் கொரோனா வைரஸுடன் சேர்ந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்கள்... அதாவது, கொரோனா வைரஸ் முற்றிலும் அழியாமலும் போகலாம், ஹெச்ஐவி போல் குறிப்பிட்ட காலத்தில் தோன்றும் எண்டமிக் வகை (திணையின அல்லது வட்டார நோய்) வைரஸாக மாறிவிடும் என்றும் ஒருவேளை கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டறியப்பட்டாலும், வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தும் அளவிற்கு போதுமான அளவில் அவற்றை உற்பத்தி செய்து உலகளவில் விநியோகிப்பதற்கும் மிகப்பெரும் முயற்சி தேவைப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்ட நிர்வாக இயக்குநர் மைக் ரயான் தெரிவித்துள்ளார்.
“கடுப்புல புள்ள பெத்து, காண்டாமிருகம்னு பேரு வச்சாளாம்” என்று கிராமங்களில் ஒரு சொலவடை சொல்வார்கள்..
அதுபோல நமக்கு உயிர் பயத்தால் திகிலோ, அல்லது இப்படி வந்து நம் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டு விட்டதே என கடுப்போ ஆனாலும்... இந்த காண்டாமிருகம் மன்னிக்கவும்... இந்த கொரோனா கூட வாழ பழகிக்க வேண்டியதுதான்!
நம் மக்களும் கொரோனாவுடன் வாழ பழகனுமா என்று முதலில் திடுக்கிட்டாலும்... சரி, தலையெழுத்து விடப்பா..! தொலையுது கர்மத்தே..! இந்த கொரோனோ கூடவும் கொஞ்ச நாள் வாழ்ந்துதான் பார்ப்போமே என மனதை தேற்றிக்கொண்டு தயாராகி வருகிறார்கள்.
நாட்டின் மத்திய உயர்தர வகுப்பினர், இது போல் தயாராகி வர... நம் நாட்டின் ஏழை எளிய மக்கள், கொரோனாவால் தங்கள் வாழ்வாதாரம், வருமானம் எல்லாவற்றையும் இழந்து சாப்பிட ஒரு வேளை உணவு கூட இல்லாமல் பல நூறு கிலோமீட்டர்கள் நடை பயணம் போய்க் கொண்டு இருக்கிறார்கள்...
மத்திய அரசு, நாட்டுமக்களின் துயர் துடைக்க முக்கியமாக ஏழை எளிய மக்களான வெளிமாநில தொழிலாளர்களுக்கு... “அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும். நாடு முழுவதும் 8 கோடி வெளிமாநில தொழிலாளர்கள் இருக்கிறார்கள், இதற்காக 3500 கோடி ரூபாய் செலவிடப்படும்... தற்போது சொந்த மாநிலம் செல்லும் வெளிமாநில தொழிலாளர்கள், அங்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம்.. கடந்த 2 மாதங்களில் நகர்ப்புற ஏழைகள், வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உதவிட தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து 11 ஆயிரம் கோடி ரூபாய், மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.. இதன் மூலம் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு, தங்குமிட வசதி, உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன..” என நேற்று முன்தினம் அறிவித்துள்ளது..
இது போன்ற அறிவிப்புகள் ஒரு புறம் இருந்தாலும், உண்மையிலேயே இந்த நலத்திட்டங்கள் எல்லா வெளிமாநில தொழிலாளர்களுக்கும் போய் சேருகிறதா என்பது கேள்விக்குரியாகவே இருக்கிறது. இதனை உறுதி செய்யும் விதமாக, இந்த வாரத்தில் குஜராத் உயர்நீதிமன்றம் இது தொடர்பான விசாரணையில்... “இந்த லாக்டவுன் காலத்தில் சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் மக்கள் பெரும்பாலும் பட்டினி கிடப்பதாகத் தெரிகிறது. அதிலும் இருப்பதிலேயே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வெளிமாநில தொழிலாளர்கள்தான். தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப அவர்கள் மிகவும் போராடுகிறார்கள். அவர்கள் அனைவரும் பயத்தில் உள்ளனர். அவர்கள் கோவிட்-19 தொற்று காரணமாக பயத்தில் இல்லை; பட்டினியால் இறந்து விடுவோம் என்றே அவர்கள் பயப்படுகின்றனர், தங்களின் சிறு குழந்தைகளுடன் நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் மாநில நெடுஞ்சாலைகளில் நடந்து செல்வதை அனுதினமும் பார்க்க முடிகிறது. அவர்களுடைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அவர்கள் மிகவும் மனித தன்மையற்ற மற்றும் அபாயகரமான சூழலில் வாழ்கின்றனர். இதை நிவர்த்தி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், அவர்களின் இன்னல்களை போக்குவதற்கான சிறந்த வழிமுறைகளையும் உருவாக்க வேண்டும்” என்று நீதிபதிகள் பி.பி. பார்திவாலா மற்றும் இலேஷ் வோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையின்போது தெரிவித்தது.
யாருய்யா அது..? நீதிபதிக்கு ஒரு சுவரைக்கட்டி ஊர் விஷயமெல்லாம் கண்ணுல படாம மறைக்கனும்னு சொல்றது... போய்யா அந்தாண்ட.. வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சிக்கிட்டு...
டெல்லி சாலையில், மபி, உபி, குஜராத், பீஹார் என வெளி மாநிலத் தொழிலாளர்கள் குழந்தை குட்டியுடன் சொந்த ஊர்களுக்கு திரும்ப, ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடந்து செல்கிறார்கள்.
அவர்களை பேட்டி எடுக்கும் பேட்டியாளர், “எங்கே போகிறீர்கள்..?” எனக் கேட்டவுடன்... “குஜராத் செல்கிறோம்.. வழியில் போலீஸ் எங்களை தடுத்து, போகக் கூடாது என்கிறார்கள். உணவிற்கு வழி இல்லாமல் நாங்கள் என்ன செய்வது... சொந்த ஊருக்கு போக வேண்டிய கட்டாயம்” என அழுது கொண்டே பதிலளிக்கிறார்கள்.
“இந்த சுட்டெரிக்கும் வெயிலில் தார் ரோட்டில் காலில் செருப்பில்லாமல் நடந்து போகிறீர்களே.. செருப்பு எங்கே..?” எனக் கேட்டதற்கு..
“அறுந்து போய்விட்டது” என ஒருவர் கூறுகிறார்..
உடனே பேட்டியாளர், தன்னுடைய செருப்பை கழற்றிக் கொடுத்து...
“இதை போட்டு பாருங்கள்.. அளவு சரியாக இருக்கிறதா..?” என கேட்க...“வேண்டாம் சாஹிப்.. பரவாயில்லை..!” என முதலில் மறுத்தாலும், பின் வாங்கி மாட்டிக் கொள்கிறார்..
உண்மையிலேயே இந்த காட்சிகளை பார்க்கும் போது நமக்கு நெஞ்சும் வயிறும் பற்றி எரிகிறது...
பல லட்சம் கோடி கடன்களை தள்ளி வைப்பு செய்யும் அளவிற்கு பணம் கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றும் அயோக்கிய தொழிலதிபர்கள் இருக்கும் இந்த நாட்டில், குடிக்க கஞ்சி இல்லாதவன் செருப்பைக் கூட இன்னொருவரிடம் இலவசமாக வாங்க சங்கோஜப் படுகிறான்...
இன்னும் சிலர்... “இவ்வளவு தூரம் பேட்டி மட்டும் எடுக்கத் தெரிந்த செய்தியாளர்கள் தாங்கள் வந்த காரில் அவர்களை ஏற்றி சொந்த ஊர் கொண்டு விடக் கூடாதா..? செருப்பு கொடுக்கிறது பெரிய உதவியோ!?” என பேட்டி எடுத்தவர் மீதே பாய்கின்றனர்..
பத்திரிகையாளர்களின் கடமை நாட்டில் நடக்கும் செய்திகளை, அநீதிகளை மக்கள் அறியச் செய்வது தான்.. அத்தோடு நாடெங்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இப்படி நடை பயணம் போகும் வேளையில் எத்தனை பேருக்கு எத்தனை பத்திரிகையாளர்களால் எவ்வளவு துரத்திற்கு இப்படி உதவ முடியும்? கடைசியில் வெளி மாநில தொழிலாளர்களின் அவல நிலைக்கு பேட்டி எடுத்த பத்திரிக்கையாளர் தான் காரணம் என்று பழி கூட வந்துவிடும் போல...!
இங்கே நேற்று நம் கும்மிடிப்பூண்டியில் இருந்து நடந்தே ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் செல்ல வட மாநில தொழிலாளர்கள் நடந்து போகும் காட்சிகளை பார்க்கிறோம்...
இப்படி வெளிமாநில தொழிலாளர்களை, தத்தம் மாநிலங்களுக்கு கூட்டி வந்து வேலை வாங்கியது யார்? தங்களிடம் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையை தத்தம் ஊர் காவல்நிலையத்தில் பதிய வேண்டும் என அரசு அறிவித்திருந்ததே? எத்தனை தனியார் நிறுவனங்கள் இதை செய்தன? அந்த முதலாளிகள் எங்கே? ஏன் முதலாளிகளிடம் இவர்களை இங்கேயே வைத்து பராமரிக்கும் அளவிற்கு பணம் இல்லையா..? அவரவர் நிறுவனங்களில் இத்தனை நாள் வேலை பார்த்திருக்கும் பட்சத்தில் அரசின் சிறப்பு அனுமதி பெற்று அந்த முதலாளிகளே சில பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பக் கூடாதா? அல்லது இருக்கும் இடத்திலேயே வைத்து மூன்று வேளை உணவை அவர்களால் அளிக்க முடியாவிட்டாலும் அரசிடம் கேட்டுதான் அளிக்க முடியாதா..?
இவர்களின் உழைப்பைச் சுரண்டி, கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்தாலும் இந்த நெருக்கடியான நேரத்தில் அவர்களை நிர்க்கதியாக கைவிட்டு விட்டு அரசாங்கத்திடம் சலுகை, பிச்சை எடுக்க வைக்கும் மானங்கெட்ட இரக்கமில்லா பெரு முதலாளிகளையும் அவர்களது நிறுவனங்களையும் என்ன சொல்ல?! அரசு இன்னும் என்னென்ன தரும் என கோடிக்கணக்கில் வாங்கிக் கொண்டு முழுங்கி ஏப்பம் விட நாக்கை தொங்க விட்டுக் காத்துக் கொண்டிருக்கும் ஈனப்பிறவிகள் இந்த முதலாளிகள்!
மாநில அரசுகளும், இக்கொடுமைகளைக் கண்டும் காணாமல் அவர்களுக்கு சரிவர உதவிகளையும் செய்யாமல், இவர்கள் விஷயத்தில் கண் மூடிக் கொண்டிருப்பது வருத்தம்தான்!
அதான் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறதே... என்றால் ஒரு டிக்கெட்டுக்கு 700, 1000... குடும்பமாக செல்ல 4000 ரூபாய் காசிருந்தால், அந்தக் காசை வைத்து இருக்கும் இடத்திலேயே 10 நாள் உணவு ஏற்பாட்டுடன் அங்கங்கேயே இருக்க மாட்டார்களா?
நீ கொடு, நான் கொடு என மத்திய - மாநில அரசுகள் டிக்கெட் பணத்திற்கு அடித்துக்கொள்ள... எதற்கெடுத்தாலும் மத்திய அரசு தான் நொட்ட வேண்டும் என்றால், மாநில அரசுகளின் பொறுப்பு தான் என்ன?
“ஐயோ.. பாவம்.. அவங்க தான் டாஸ்மாக் திறக்க, சுப்ரீம் கோர்ட் வரை போய் படாத பாடு பட்டுக்கிட்டு இருக்காங்களே... அந்த வேலை முடிக்க வேண்டாமா? சும்மா ஏழைபாளைனு நச்சரிச்சிக்கிட்டு...” என சொல்லும் விதத்தில்தான் அரசின் கவனம் மொத்தமும் வேறிடத்தில் இருக்கிறது.
கடைசியில் ஏழை எளிய தொழிலாளிகள் நாடு முழுவதும் நடந்தே சாக வேண்டியதுதான். இன்னுமொரு கொடுமையாக இது போல் நடை பயணம் செல்லும் தொழிலாளர்கள் ரயிலில் பஸ்ஸில் அடிப்பட்டு சாகிறார்கள்.. இந்த வியாழனன்று மட்டுமே சரியாக சொல்ல வேண்டுமென்றால் அன்றைய 24 மணி நேரத்தில் ம.பி, உ.பி , பீஹார் போன்ற மாநிலங்களில் பஸ்களில், ட்ரக்கில் மற்றும் நடை பயணமாக தொழிலாளர்கள் சென்றபோது, நடந்த வெவ்வேறு விபத்துகளில் 17 பேர் அடிப்பட்டு இறந்து போயிருக்கிறார்கள்.. 93 பேர் படுகாயம் மற்றும் காயம் அடைந்துள்ளனர்...
இறுதியாக...இந்த ஏழைகளுக்கு யார் தான் உதவுவார்கள்..?
அட போங்கய்யா...!அந்த ஆண்டவனே கை விட்டுட்டாரு...அப்புறம் இந்த அரசாங்கமும், இந்த ஆண்டிகளை வச்சு வேலை வாங்கிய ஆண்டைகளும் வந்து தான் காப்பாத்த போறாங்களா..?
மனசாட்சி உள்ளவர்கள் மனதிற்குள்ளேயே இப்படி அங்கலாய்த்து மன உளைச்சல் பட்டுக்க வேண்டியதுதான்!
Leave a comment
Upload