கவர் ஸ்டோரி
பூமராங் ஆன திமுக சீண்டல்!.. ‘கோட்டை’ விட்ட திமுக! - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

2020041523092194.jpeg

திறன்பட்ட நிர்வாகத்தை கொடுப்பதைவிட, நிர்வாகத்தை மிரட்டிக்கொண்டே இருப்பதுதான் திமுகவின் அடிப்படை அரசியல்.

1977 -1987 வரை தமிழகத்தில் ஆட்சி செய்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக இல்லாமல், மிரட்டியே தன் தலைமை மற்றும் கட்சியின் இருப்பை உயிர்ப்போடு வைத்திருந்தார் கருணாநிதி.

20200415230756835.jpeg

‘முதல்வர் கருணாநிதியைவிட, எதிர்க்கட்சி கருணாநிதி தான் சுறுசுறுப்பானவர்’ என்று சோ ஒரு முறை சொன்னார். அதுதான் உண்மை.

திமுகவின் அடிப்படை உள்நோக்கத்தை தெரிந்து கொண்டால்தான், அவர்களின் அரசியல் அணுகுமுறையை புரிந்து கொள்ள முடியும்.

திமுகவிற்கு ஆட்சி என்பது சேமிப்புத் தொகை. கிடைக்கும் ‘ஊதிய’த்தை சேமித்து வைப்பது. கட்சி என்பது நிரந்தர வைப்புத் தொகை. அதனால்தான் கருணாநிதியும், இப்போதைய ஸ்டாலினும் கட்சியை தன் குடும்பக் கட்டுப்பாடில் வைத்திருப்பதில் அதிக எச்சரிக்கையோடு இருப்பார்கள்.

‘2021ம் வருடம் பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். அதே சமயம் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையை கட்சியினருக்கு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்...’ இதைத்தான் இப்போதைய திமுக செய்து கொண்டிருக்கிறது.

இந்த கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருந்தபோதும், இதில் எடப்பாடி அரசுக்கு எந்தப் பெருமையும் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தத் துவங்கியது திமுக.

அதற்காகவே சென்ற மாதம் ஏப்ரல் 20ஆம் தேதி திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் துவங்கப்பட்டது. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கவே இந்தத் திட்டம் என அறிமுகமாகியது. இந்த திட்டத்திற்காக ஒரு தனியான செல்பேசி எண்ணையும் திமுக அறிவித்தது.

‘ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான அழைப்புகள் அறிவித்த எண்ணுக்கு வருகிறது. இதனால் திமுக மீது மக்கள் வைத்த நம்பிக்கை
உறுதிப்பட்டு வருகிறது’ என்று ஸ்டாலின் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

20200415230553846.jpeg

ஆனால், கட்சி நிர்வாகிகளுக்கு இது பெரும் தலைவலியாகிப் போனது. ‘ஒன்றிணைவோம் வா’ என்கிற திட்ட அறிவிப்புக்கு முன், திமுகவின் பகுதி செயலாளர்களிலிருந்து, மாவட்டச் செயலாளர்கள் வரை தங்கள் பகுதிகளில் ‘யார் திமுக அனுதாபிகள்’ என்று அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஏற்கனவே நலதிட்ட உதவிகள் வழங்கிக் கொண்டிருந்தனர்.

ஆனால் ‘ஒன்றிணைவோம் செயலி’யில் உதவி கேட்டு கட்சிக்கு எதிரானவர்கள் கூட அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். இப்படி ஒரு திட்டத்தை அறிவிக்கப்போகிறது தமது கட்சி என்பது கட்சி நிர்வாகிகளுக்கே தெரியாது என்பதுதான் உண்மை. இந்த செல் அழைப்புகளை கண்காணித்து வருவது பிரசாந்த் கிஷோர் நிறுவனம்.


20200415230950624.jpeg


‘லட்சக்கணக்கில் உதவி கேட்டு அழைப்புகள் வருகிறது;’ என்ற ஸ்டாலினிடம்
ஆரம்பத்தில் உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். அது உண்மையா என்று யாரும் கேள்வி கேட்க அனுமதியில்லை. கட்சித் தலைவரும் அதை உறுதி செய்து கொள்வதில் அக்கறை காட்ட மாட்டார். ஒரு கட்டத்தில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் முழுமையாக உள்ளே புகுந்தது.

20200415230625478.jpeg

‘இந்த அழைப்புக்களை கண்காணிக்க ஒரு தனியான வாட்ஸ்ப் குழு அமைக்கிறாம். அந்தந்த பகுதிகளின் தேவைகள் என்னவென்பதை நாங்கள் சொல்கிறோம். அந்த முகவரிக்கு உதவிப் பொருட்களை அனுப்பி வைக்கலாம்’ என்றது. அந்த முகவரிகள் பெரும்பாலும் வசதி படைத்தவர்களின் இல்லங்களாகவே இருந்தது. ‘இது தேவையற்ற செலவு! இதனால் கட்சிக்கு எந்தப் பலனுமில்லை’ என்று திமுக நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்தார்கள்.

மே 12-ஆம் தேதி மாவட்ட செயலாளர்களுக்கு அறிவாலயத்தில் இருந்து ஒரு தனி உத்தரவு பறந்தது. ‘பொது மக்களிடமிருந்து பெற்ற மனுக்களை பிரிண்ட் எடுங்கள். அதை மாவட்ட ஆட்சியாளரிடம் மேல் நடவடிக்கைக்காக நேரில் தந்து விடுங்கள்’ என்று சொன்னது.

அதாவது ‘ஒன்றிணைவோம் திட்டம்’ என்பது ஒரு ‘கூரியர் சர்வீஸாக’வே மாறிப்போனது. ‘பொறுப்பை தட்டிக் கழித்துவிடலாம். அதே சமயத்தில் திமுக மக்கள் நலனில் அக்கறை காட்டுகிறது என்கிற விளம்பரத்தையும் தேடிக்கொள்ளலாம். அதோடு கட்சிக்கு எந்தப் பொருளாதார சுமையும் கிடையாது’ இப்படி நினைத்து ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்திற்கு ஏறக்குறைய மூடுவிழாவே நடத்திவிட்டது திமுக தலைமை!

2020041523124695.jpeg

மாவட்ட செயலாளர்களுக்கு இதனால் ஓரளவுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி! அதாவது தங்களது பணம் பெரும்பாலும் தப்பித்த சந்தோஷம். கூடவே ‘தளபதி நல்ல திட்டம் அறிவித்தார். இந்த பிரசாந்த் கிஷோர் மூடுவிழா நடத்தி விட்டாரே’ என்றும் புலம்பத் துவங்கினார்கள்... இந்தத் திட்டம் அறிவிப்பதற்கு முன் பல மாவட்ட நிர்வாகிகள் தங்கள் சொந்தப் பணத்தை செலவழித்து அவர்கள் பகுதியில் நலத்திட்டங்களை நிறைவேற்றினார்கள்.

‘எங்கள் செலவில் எடப்பாடி அரசுக்கு நல்ல பெயர்’ என்கிற அங்காலாய்ப்பை எங்கும் கேட்க முடிந்தது..முடிகிறது!...

இதனால் அரசு இயந்திரத்திற்கு இன்னொரு சிக்கல்! “இவர்கள் அறிவிப்பு செய்வார்கள். ஏராளமான மனுக்கள் வரும். அதை கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொட்டிவிட்டுப் போவார்கள். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் என்று அறிவிப்பார்களா?!.” இதனால் பல மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் இந்த மனுக்களை வாங்கவே தயக்கம் காட்டியது.


20200415230653227.jpeg

சில மாவட்ட ஆட்சித்தலைவர்கள், துணிச்சலுடன் ‘நீங்களாகவே ஒரு தொலைபேசி எண்ணை அறிவிப்பீர்கள். உதவி செய்கிறோம் என்று சொல்வீர்கள். உங்களால் முடியவில்லை என்றால் அரசாங்கத்தின் தலையில் கட்டிவிட்டு பழியை எங்கள் மீது போடுவீர்களா?’ என்று கேட்டார்கள். மேலும் கடிதங்கள் எல்லாமே திமுகவின் மாவட்ட செயலாளர், வட்டச் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்கள். ‘இதில் அரசு என்ன செய்ய முடியும்?’ - இதுதான் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் அடிப்படை கேள்வி.

‘கட்சித் தலைமையின் உத்தரவு. அதைத்தான் நாங்கள் செய்கிறோம்’ என்று சொல்லி நகர்ந்து விட்டார்கள் உள்ளூர் கட்சி நிர்வாகிகள்.

‘ஒரு குறுகிய கால கூரியர் கம்பெனி நடத்த தலைமைக்கு யோசனை சொல்லி, பிரசாந்த் கிஷோர் நிறுவனம் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டது. தளபதிக்கு இந்த உண்மைகள் புரிவதில்லை. சாதாரண கட்சிக்காரர்கள் எளிதில் தலைமையை அணுகவும் முடியவில்லை’ என்று அழாத குரலில் கோரஸ் பாடுகிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

மாவட்டங்களில் நடந்த இந்த கூத்துக்களின் உச்சகட்டம்தான் தலைமைச் செயலகத்தில் திமுக எம்.பிக்கள் அரங்கேற்றிய அராஜகம்!


இவர்கள் தலைமைச் செயலாளர் அறைக்குள் போனார்கள். அப்போது தொலைக்காட்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல நிவாரண திட்டங்களை அறிவித்துக் கொண்டிருந்தார். நிதி செயலாளருடன் அமர்ந்து அது பற்றிய குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் தலைமைச் செயலாளர்.

முன் அனுமதியுடன் அங்கு வந்த திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், திமுக தொண்டர்கள் சகிதம் உள்ளே நுழைந்தனர். அனுமதி என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும்தான். கட்சிக்காரர்களுக்கு இல்லை. உள்ளே போன டி.ஆர். பாலு சோபாவில் அமர்ந்தார். தலைமைச் செயலாளரும் அவர் அருகில் அமர்ந்தார். டி.ஆர். பாலுவுடன் வந்தவர்கள் கட்டுக்கட்டாக மனுக்களை அங்கே இறக்கினார்கள். செல்பேசி, வீடியோ கேமரா மூலமாக அந்தக் காட்சிகளை படமெடுக்கத் துவங்கினார்கள். அப்போது அங்கே திரண்ட கட்சியினர் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டனர். இது அனைத்தும் நடந்ததோ ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அறையில்! நடந்தது இதுதான்.

தலைமைச் செயலரிடம் அனைத்து மனுக்களின் மீதும் எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவினர் கேட்ட போது “ தற்போது அரசு அலுவலங்களில் ஊழியர்கள் வருகை குறைந்த அளவே உள்ளதால் என்னால் அது பற்றி இப்போதைக்கு எந்த உத்திரவாதமும் தர இயலாது” என உண்மை நிலவரத்தை தெரிவித்துள்ளார், த.செ.

ஆனால் வெளியே வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தயாநிதமாறன் தாங்கள் தாழ்த்தப்பட்டவர்களைப் போல தலைமைச் செயலாளர் அறையில் நடத்தப்பட்டதாக பத்திரிகையாளர்கள் முன்பு சொல்ல.. அடுத்த தலைவலி கட்சிக்கு துவக்கம்.!

“எனில், தாழ்த்தப்பட்டவர்கள் அரசால் கீழ்த்தரமாக நடத்தப்பட வேண்டியவர்களா?!” எனக் கொதித்து கொடி பிடித்தன தொல்திருமா வளவன் தலைமை மற்றும் இன்ன பிற தலித் கட்சிகள். வேறு வழியின்றி தஙகள் கட்சியினர் தலைமைச் செயலாளர் அறையில் தாழ்ந்தவர்களாக நடத்தப்பட்டதை த்தான் அவ்வாறு தான் குறிப்பிட்டதாக சப்பையான விளக்கம் கொடுத்து வருத்தம் தெரிவித்தார் தயாநிதி. ஆனால் திமுக தலைவர் மட்டும் பொது வெளியில் இது பற்றி வாயே திறக்கவில்லை.

அடுத்த நாள்.. தலைமைச் செயலாளரை மிக மோசமான வார்த்தைகளில் விமர்சித்து கட்டுரை தீட்டியது கட்சியின் அதிகாரபூர்வ நாளேடு முரசொலி. இது திமுகவின் பாரம்பர்ய பழக்கம்தான்.

அதிகாரிகளை மிரட்டுவதுதான் திமுக அரசியலின் பாலபாடம்! அவர்கள் ஆட்சியில் இருந்தால், அந்த மாவட்டச் செயலாளர்தான் அந்த மாவட்ட டி.ஐ.ஜி. அந்த பிராந்திய ஐ.ஜி.! மாவட்ட கலெக்டர் என்று பெருமிதம் கொள்வார்கள். சமீபத்தில் கூட ஒரு மாவட்ட செயலாளர் கூட்டத்தில்`ஸ்டாலின் இதைக் குறிப்பிட்டு, மாவட்ட செயலாளர் பதவியின் மேன்மையையும் பெருமையையும் விளக்கினார்.

1969-ம் வருடம் கருணாநிதி முதல்வரானதிலிருந்து அதிகாரிகளை மிரட்டுவதென்பது திமுகவின் பிரதான அஸ்திரம். அந்த நாட்களில் சில போலீஸ் அதிகாரிகளை திமுகவினர் தாக்கிய சம்பவங்களும் உண்டு. அதில் பெயர் பெற்றவர் முன்னாள் சென்னை நகர மேயராக இருந்த சிட்டிபாபு! பல போலீஸ் அதிகாரிகளை தங்கள் வீட்டு வேலையாட்களாக நடத்தினார்கள்.

மனம் புழுங்கிக் கொண்டிருந்த காவலர்களுக்கு கிடைத்த ‘அருமை’யான வாய்ப்புத்தான் எமர்ஜென்சி! அதாவது 1975ல் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரச் சட்டம்!

மத்திய அரசு கொடுத்த அதிகாரத்தை வைத்து, தங்கள் அதிகார வல்லமை என்னவென்பதை திமுகவினருக்கு சிறையில் காட்டினார்கள், பல காவல்துறை அதிகாரிகள். பலர் திமுகவினரை அந்தப் பகுதியில் நடந்த திருட்டு, சமூகவிரோத குற்றங்களை காரணமாக வைத்து சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைத்தார்கள். ‘அவசரச் சட்டத்தை எதிர்த்த அஞ்சா நெஞ்சர்களாக இவர்களில் பலர் கைது செய்யப்படவில்லை. ஸ்டாலின் உட்பட!

‘சிறையில் ஸ்டாலினைக் போலீஸ் தாக்குதலிலிருந்து காப்பாற்றும்போது, அதில் தாக்குண்டு சிட்டிபாபு இறந்தார்’ என்று செய்தி பரப்பினார்கள் திமுகவினர். அதே பாணிதான் இப்போது டி.ஆர். பாலு தலைமையில் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் அறையில் நடந்த அத்துமீறல்கள். எமர்ஜென்சி காலத்தில் இத்தனை ஊடகங்கள் இல்லை. திமுகவின் பொய்களெல்லாம் தியாகங்களாக சித்திரிக்கப்பட்டு, அதுவே திமுகவின் தியாக வரலாறானது.

2020041523104227.jpeg

டி.ஆர். பாலு குழு நடத்திய இந்த விளம்பரம் தேடும் அசிங்க நாடகத்தின் வெற்றியை தயாநிதி மாறன் தன் பேச்சினால் குழி தோண்டி புதைத்தார். ‘YOU PEOPLE’ என்று தலைமைச் செயலாளர் தங்களைக் குறிப்பிட்டு சொன்னதை அவர் தன் பாணியில் மொழிபெயர்ப்பு செய்யப்போக சிக்கலில் மாட்டிக் கொண்டார். வேறு வழியில்லாமல் தயாநிதி மாறனின் பேச்சைக் கண்டிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் திருமாவளவன். உடனே பல்டி அடித்து, தன் பேச்சுக்கு அடுத்த நாளே அவசரமாக மன்னிப்பு கேட்டார் தயாநிதி மாறன்.

“நான் தாழ்வான முறையில் எங்களை அவர் (த.செ) நடத்தினார் என்பதையே குறிப்பிட்டேன்” என்பது தயாநிதியின் விளக்கம்.

20200415231107431.jpeg

திமுக ஆட்சியின் போது ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி மாநகர ஆணையராக (போலீஸ் கமிஷனர்) நியமிக்கப்பட்டார். அவரை வாழ்த்தினார், ஒரு மூத்த பத்திரிகையாளர். அந்த அதிகாரி சொன்னார், ‘இந்தப் பதவி என்பது எனக்கு வரமல்ல! சாபம்! நான் அரசுக்கு வேலை செய்ய முடியாது. மாவட்ட செயலாளர்களுக்கெல்லாம் சல்யூட் அடித்தால் தான் இந்தப் பதவியில் நிலைக்க முடியும். ஜெயலலிதா ஆட்சியில் இந்தப் பதவி கிடைத்தால் தான் இந்த பதவி என்பது வரம்’ என்றார். அதுதான் உண்மை! ஜெயலலிதா ஆட்சியில் கட்சிக்காரர்கள் அதிகாரிகளோடு பேசவே நடுங்குவார்கள். அதுதான் திமுக, அதிமுக நிர்வாகத்திற்கிடையே ஆன ஒரு மாபெரும் வித்தியாசம்!