வருடந்தோறும் ஏப்ரல் மாதம் வந்துவிட்டாலே, நீலகிரி மாவட்டம் களைகட்டத் துவங்கி விடுவது வழக்கம்...
ஊட்டி சீசனுக்கு வெளியூர் சுற்றுலாக்கள் மொய்க்கும் காரணம், கீழ் பிரதேசங்களில் வெயிலின் வெக்கை தாங்கமுடியாமல்... “ஊட்டிக்கு போலாமா” என்று கிளம்பி நீலகிரி மலை ஏறுவது வாடிக்கையான ஒன்று என்றாலும்.... ஏப்ரல், மே மாதங்களில் கட்டாயம் ஊட்டி சென்று வந்துவிடவேண்டும் என்ற திட்டத்தை பலர் வருடக்கணக்காக மனதில் கனவுகண்டு கொண்டிருக்கிறார்கள்...
மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை, மலைச்சாலை முழுவதும் இரவு பகல் என்று பாராமல் வாகன நெரிசல் திக்குமுக்காடச் செய்துவிடும். ஊட்டி.... குன்னூர்.... கூடலூர் நகரங்களில் இந்த சுற்றுலாக்களால் திணறுவது இந்த மலை மாவட்டம் மட்டும் அல்ல... காவல்துறையும் தான்...
இந்த மலை மாவட்டத்தில் உள்ள பெரிய ஹோட்டல்கள், பல மாதங்களுக்கு முன்பே தங்களின் புக்கிங்குகளை கிளோஸ் செய்து…. வரும் சுற்றுலாக்களை கண்ணும் கருத்துமாக கவனிப்பதில் படு மும்முரமாக இருப்பார்கள்.
சமீப காலத்தில் புற்றீசல் போல மாவட்டம் முழுவதும் உருவான காட்டேஜ்கள் இந்த சீசனை மையமாக வைத்து, ஏகப்பட்ட பகல் கொள்ளையை நடத்தி வந்தன. அதிலும் மலர்க்காட்சி சமயத்தில் தங்கும் விடுதி அறையின் ரேட் இஷ்டத்திற்கு எகிறும்... இதைப் பற்றி எவரும் கேட்க முடியாமல் இருந்தது... கடந்த வருடம் அனுமதி இல்லாத காட்டேஜ்களுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா செக் வைத்து, பல விடுதிகளை சீல் செய்தார்.
ஊட்டி சீசன் சமயத்தில் மிக முக்கிய ஈர்ப்பு குதிரைப் பந்தயம்... ஐநூறு குதிரைகளின் வருகை. ஏப்ரல் 14 ஆம் தேதி துவங்கும் குதிரைப் பந்தயம் சனி, ஞாயிறு மற்றும் முக்கிய அரசு விடுமுறை நாட்களில் மிக அதிகமாக களை கட்டும். அதனை சாக்கிட்டு அதிகமான வெளியூர் ஆட்கள் இந்த ரேஸ் கோர்ஸில் குவிவது வழக்கம்...
இந்த குதிரைப் பந்தயத்தை படம் எடுக்க பத்திரிகையாளர் என்ற முறையில் டிக்கெட் வாங்கிச்சென்றாலும்... ஏகப்பட்ட பந்தாவை காட்டும் ரேஸ் கோர்ஸ் முக்கியஸ்தர்கள் அனுமதியை மறுப்பது போன்ற கசப்பான சம்பவங்கள் அரங்கேறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனாவின் வருகையால் ஊட்டி ரேஸ் கோர்ஸ் வெறிச்சோ வெறிச்.....
நீலகிரி முழுவதும் கட்டுக்கடங்காத கூட்டம் மொய்க்கும் இந்த மே மாதம் இன்று சற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். காரணம் கொரோனா..... ஊட்டி அரசு பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் என்று எல்லா சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு மயான அமைதியில்...
.
ஊட்டி சீசன் என்றாலே உலகப் பிரசித்தி பெற்ற மலர் கண்காட்சி தான் எல்லோர் நினைவிலும். உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் இருந்து வரும் சுற்றுலாக்கள் ஓடோடி வந்து பார்ப்பது இந்த மலர் அணிவகுப்பைத்தான்.
தற்போது இந்த கொரோனா தாக்கத்தால் மூடப்பட்டுள்ள பொட்டானிக்கல் கார்டனில் மலர் அலங்காரங்கள் ரெடி! ஜப்பான், நெதர்லாந்து, அமெரிக்கா, மற்றும் ஜெர்மனி நாடுகளின் 400 வகை விதைகளின் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது...
பூங்கா முழுவதும் ஐந்து லட்சம் நாற்றுகள் நடப்பட்டுள்ளன... 3500 தொட்டிகளில் மலர்கள் கண்ணைக் கவர்கின்றன... கண்ணாடி மாளிகையில் 4500 மலர் தொட்டிகளில், ஸ்வீட் மலர்கள்... இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, சால்வியா, டயன்தாஸ் ஆகிய மலர்களால் கொரோனா வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மலர்களைக் காண, வழக்கமாக லட்சக்கணக்கில் சுற்றுலாக்கள் மொய்ப்பது வழக்கம். இந்த வருடம் எந்த கண்ணும் - படாமல், தங்களின் அழகு வாசத்தை இயற்கைக்கு சமர்ப்பித்துக் கொண்டிருக்கின்றன இந்த மலர்க் கூட்டம்...
மருத்துவப் பணியளர்கள்.. தூய்மைப் பணியளர்களை தினம் நூறு பேர் என்று சமூக இடைவெளி விட்டு மலர்களை ரசிக்க அனுமதி வழங்கியுள்ளார் மாவட்ட ஆட்சியர்……
பூங்கா காப்பாளர் ராதாகிருஷ்ணன் ரோசா மலரை ஒவ்வொரு ஊழியருக்கும் கொடுத்து, கைதட்டி வரவேற்று மலர்களை பார்க்கச் செய்கிறார்கள்.
கிருஷ்ணகுமாரி என்ற செவிலியர் நம்மிடம், “எங்களையும் மனிதர்களாக பாவித்து, யாரும் எட்டிப்பார்க்காத மலர்க் கண்காட்சியை எங்களுக்கு தக்க மரியாதையுடன் பார்க்க வைத்த கலெக்டர் அம்மாவுக்கு நன்றி” என்று கண் கலங்கினார்.
ஊட்டி மலை ரயில், சீசன் துவங்கிவிட்டால் கூட்ட நெரிசலால் சிக்கி கிடத்தட்ட தவழ்ந்து செல்லும்.. ஜூன் மாதம் கடைசி வரை டிக்கெட் கிடைக்காது. கடந்த ஜனவரி மாதம் இந்த ரயிலின் டிக்கெட் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு.. தினமும் இந்த ரயிலில் பயணம் செய்யும் லோக்கல் பயணிகள் பாதிக்கப்பட்ட நிலையில்... கொரோனாவால் ரயில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியாவை தொடர்பு கொண்டு, ஊட்டி சீசனை பற்றிக் கேட்டோம்... “ஊட்டி சீசன் என்பது உலகப்புகழ் பெற்ற ஒன்று. இந்த வருடம் இது நான் சந்திக்கும் மூன்றாவது சீசன். மே ஒன்றாம் தேதி ஆரம்பிக்கும் சீசன் நிகழ்வுகள் முப்பத்தியொன்றாம் தேதி வரை களை கட்டும். படு பிஸியாகிவிடுவோம். இந்த வருடம் நிறைய புது நிகழ்ச்சிகள் நடத்தி, சுற்றுலாக்களை மகிழ்விக்க திட்டம் இருந்தது. உள்ளூர்வாசிகளையும் இந்த நிகழ்வுகளில் பங்கு எடுக்கச் செய்து, பல மாலை நேர நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் ரெடியாக இருந்தது. மலர் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலயையில் இருக்க... கோவிட் 19 வந்தவுடன் அனைத்தும் அப்படியே நின்றுவிட்டது. ஏற்கனவே விதை விதைக்கப்பட்டு... நாற்று நடப்பட்டு வளர்க்கப்பட்டுள்ள அழகான மலர்கள் கார்டனில் பார்வைக்கு எப்பொழுதும் போல வைக்கப்பட்டுள்ளன.
இந்த வருடம் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. அதே வேளையில் மருத்துவ ஊழியர்கள்.... மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களை தினமும் நூறு பேர் சமூக இடைவெளி விட்டு மலர் கண்காட்சியை பார்க்க அழைத்து வருகிறோம். அவர்களின் சந்தோஷம் தான் இந்தத் தருணத்தில் மிக முக்கியம்... லட்சக்கணக்கில் சுற்றுலாக்களின் கூட்டம்... போக்குவரத்து நெரிசலை வருடந்தோறும் சந்தித்து வந்த நீலகிரி.... கொரோனா பாதிப்பால் வெறிச்சோடி இருக்கிறது.
உள்ளூர்வாசிகள் மலர்க்காட்சியை காண... பதினெட்டாம் தேதிக்கு பின்னால் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று யோசித்து உள்ளேன்... அது நம் தமிழக அரசின் முடிவுப்படி தான் நடக்கும்” என்றார்.
ஏப்ரலில் ஊட்டி சீசன் துவங்கி ஒரு மாதம் நடக்கும். ஸ்ரீ மாரியம்மன் தேர் திருவிழா.. அதைத் தொடர்ந்து காந்தல் குருசடி திருவிழா... ஒரு இறை பக்தியுடன் தான் சீசன் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது..
அதைத் தொடர்ந்து, நீலகிரி சீசனில் சுற்றுலாக்களை கவரும் நாய்களின் கண்கவர் காட்சி!
South of India Kennel Club கண்காட்சி.... பல வருடங்களாக இந்தக் கண்காட்சியை நடத்தி வரும் லஜபதி சற்று அப்செட் ஆகி இருக்கிறார்....
“நான் South of India Kennel Club கௌரவ செயலர். ஆரம்பத்தில் ஊட்டி ஆர்ட்ஸ் காலேஜ் விளையாட்டு மைதானத்தில்தான் நாய்களின் கண்காட்சியை நடத்துவோம். அதற்கான டென்ட்களை மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் தான் கொடுத்து உதவுவார்கள். ஆரம்பத்தில் 150 நாய்கள் கலந்து கொள்ளும். அழகு.. பிரீடிங்.. ஒழுக்கம் என்று போட்டிகள் நடக்கும். இந்த கேனல் கிளப் சென்னையை சேர்ந்தது. ஐரோப்பா அங்கீகரித்த ஒரு கிளப்... ஊட்டிக்கு அடுத்து கொடைக்கானல்.. குன்னூரில் கண்காட்சி நடக்கும். எங்க அப்பா தியாகி திருவேங்கடம்.. என் மகன் விவேகானந்த் நாய் வளர்ப்பில் சூப்பர்மேன்கள் .
பெரிய நபர்கள் தங்களின் நாய்களை இந்தக் கண்காட்சிக்கு கூட்டி வருவார்கள். வெளிநாட்டில் இருந்து விமானத்தில் பயணித்து வரும் நாய்களும் உண்டு...
ஊட்டி கிளைமேட் நாய் வளர்ப்புக்கு ஏற்றது, அதனால் தான் நிறைய வெளியூர் நாய்கள் இங்கு வளர்க்கப் படுகின்றன. லாப்ரடார், ரீடிவேர் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் ஆகிய நாய்கள் எதிரியின் வேர்வையையே மோப்பம் பிடிக்கும் திறமை உள்ளது... ஒழுக்கத்தில் சூப்பர். அதனால் தான் போலீஸ் வசம் இந்த நாய்கள் உள்ளன. தற்போது கொரோனாவால் எல்லாம் அப்செட். நீலகிரி பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.. என்ன செய்ய... ஊட்டி சீசன் அப்செட்” என்று வருத்தப்பட்டார்.
ஊட்டி சீசன் மலர்களை சுற்றி...மலர்களின் மாநாட்டைக் காண லட்சக்கணக்கில் கூட்டம் குவியும்.... ஓய்வு பெற்ற தோட்டக்கலை அலுவலர் முருகனை தொடர்புகொண்டு பேசினோம்...
“எப்படி இருக்கும் ஊட்டி சீசன்... மார்ச் முதல் ஜூன் வரை இதமான கிளைமேட்..... எங்களுக்கு அப்பொழுது தான் படு பிசியான வேலை. காரணம் மலர் கண்காட்சி தயாரிப்புகள்.... 83-84 மற்றும் 86-94 ஆண்டு வரை தோட்டக்கலையில் என் பணி....
ஒருமுறை சீசனுக்கு முதல்வர் எம் .ஜி.ஆர் தமிழக மாளிகையில் ஓய்வு எடுத்தார். அப்பொழுது நான்தான் அங்கு கார்டன் அலுவலர்... தோள்மேல் கைபோட்டு அரவணைத்து பாராட்டி பேசுவார்... அப்போது நடந்த கமலின் ஷூட்டிங்கை அவர் ரசித்துப் பார்த்ததை மறக்க முடியாது.... இப்படி கார்டனில் மலர்களுடன் ஏகப்பட்ட வேலைகள்.... 1995 ஆம் வருடம் மலர்க் காட்சியின் நூறாவது வருடம். அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் கனவு ஊட்டியில் பிரம்மாண்ட ரோஸ் கார்டன்... அவரின் தொடர் பார்வையில் விஜயநகரம் டி கார்டனை... ரோஸ் கார்டனாக மாற்றி அமைத்தோம்...
ஜெயலலிதாவின் உறவினர் கோபாலஸ்வாமி பெங்களூரில் நர்சரி நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் தான் 3500 வகை ரோஸ் செடிகள் வாங்கி உருவாக்கினோம் ...‘ஜெயலலிதா நூறாவது நினைவு ரோஸ் கார்டன்’ என்ற பெயரை வைத்து, அவரே நேரடியாக வந்து திறந்து வைத்தார். சண்டிகரில் உள்ள ஜாகிர் உசேன் ரோஸ் கார்டனை விட ஊட்டி மிகப் பெரியது... அங்கு 600 வகை தான்..... இது எங்க தோட்டக்கலை துறையின் மாஸ்டர் பீஸ் என்று சொன்னால் மிகையாகாது” என்று சிலாகித்துக் கூறினார் முருகன்.
ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் இந்த சீசனில் அனைவரையும் கவரும் ஒன்று.. இத்தாலியன் கார்டன்... மலர் அலங்காரம்... அதே போல லீனா நாயர் கலெக்டராக இருக்கும் போது...
“ஊட்டி ரேஸ் கோர்ஸில் ஒரு ஜப்பான் கார்டன் உருவாக்கினோம்... பின்னர், அது கைவிடப்பட்டது... மெட்ராஸ் ரேஸ் கிளப் ஒத்துழைக்கவில்லை... இந்த சீசனை பற்றி நினைக்கும் போது, எங்க கார்டன் கார்ட் பாதர்கள் இஸ்மாயில்.... யூசுப் ஆகியயோரை மறக்க முடியாது. பல தாவரவியல் பெயர்களை சொல்லித் தந்த மகான்கள்.... தற்போது சீசன் காலியாக இருக்கிறது... அதே வேளை நிறைய ஊட்டி சீசன் நினைவுகள் என் மனதில் பசுமையாக....” என்று முடித்தார் முருகன்.
“ஊட்டி சீசன் கோடைவிழாவை என்னால் மறக்கமுடியாது. 55 வருட மலரும் நினைவுகள்.... இன்று அவை இல்லாமல் ஊட்டியை என்னால் பார்க்க முடியாது” என்று கூறினார் மூத்த பத்திரிகையாளர் ஷண்முகசுந்தரம்...
“நான் கீழ்கோத்தகிரியில், எட்டாம் வகுப்பு படித்த போது பார்த்ததுதான் முதல் ஊட்டி சீசன். ஆர்ட்ஸ் காலேஜ் கிரௌண்டில் கோடைவிழா நடைபெற்றது. அன்று பலத்த மழை... மறக்க முடியாத ஒன்று..
அதற்கு பின் ஊட்டியில் செட்டில் ஆகி, பத்திரிகைப் பணியில் சேர்ந்தவுடன் தான் சீசனை முழுமையாக ரசிக்கத் துவங்கினேன்...
நீலகிரி சுற்றுலா போக்குவரத்து ஆலோசனை குழு, மாவட்ட கலெக்டர் தலைமையில் எம்.எல்.ஏ., அரசு அதிகாரிகள்... முக்கியப் பிரமுகர்கள் இணைந்து கோடை விழா நடத்தினார்கள்...
அலுவாலியா கலெக்டர் தான் அண்ணா கலை அரங்கை கட்டினார்.. விளையாட்டு அரங்காகவும் இது செயல் பட்டது. சீசனில் இசை கச்சேரி, நடனம், நாடகம் என்று மாதம் முழுவதும் நடக்கும். முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பாஸ் உள்ளவர்கள் என்று 600 பேர் அரங்கை நிரப்ப.... பொது மக்கள் வெளியே நின்று ரசிப்பதும் நடந்தது. இங்கு தான் இளையராஜா, கே.ஜே. யேசுதாஸ், எஸ்.பி.பி., பி.சுஷீலா, ஜானகி, ஜிக்கி, குன்னக்குடி,பத்மா சுப்ரமணியம் என்று பலரது கச்சேரிகள்.. அடுத்தநாள் நடக்கும் மலர் கண்காட்சியில் இவர்களின் கச்சேரி களைகட்டும்.
பின்னர் கோடை விழாவில் டெல்லி கணேஷ், மெளலி, கிரேஸி மோகன் நாடகங்கள்.... ரெமோ ஃபெர்னாண்டஸ் டான்ஸ் என்று சூப்பராக இருக்கும்.
ஏரி பூங்கா, படகு இல்லத்தில் கோடை விழாக்கள் நடைபெற்றுள்ளது. தென்னக பண்பாட்டு கலாச்சார மையம் கோடைவிழாவை நடத்தியுள்ளனர்.. சீசனின் மலர்க் காட்சியினை கலைஞர், ஜெயலலிதா போன்ற முதல்வர்கள்..தமிழக கவர்னர்கள் என்று முக்கியப் பிரமுகர்கள் முதலில் மலர்க்காட்சியை துவக்கி வைப்பதுதான் ஒரு சம்பிரதாயமாக இருந்து வந்தது....
அந்த வகையில்..தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றவுடன் கலந்து கொண்ட முதல் ஆடம்பர விழா, ஊட்டி மலர்கண்காட்சி..!
மலர் காட்சிக்கு முந்தின நாள் மின்விளக்கு அலங்காரத்தை காணச் செல்வது..... இரண்டு நாள் மலர் காட்சியை ரசிப்பது என்பது மறக்க முடியாத ஒன்று. மேலும் அந்த சமயத்தில் உறவுக்காரர்கள் நம் இல்லத்திற்கு வருவதும் அவர்களுடன் சுற்றுதும் செமை திரில்லிங்...
கோவிட் 19 என்ற வைரஸ் அரக்கன், இந்த சீசனை தடுத்து நிறுத்தி வெறிச்சோடி செய்து இத்தனை அனுபவங்களையும் அடையாமல் விட்டது தான் இந்த வருடத்திய வேதனையான விஷயம்” என்று வேதனைப்பட்டார்.
தொண்ணூற்று வயதை கடந்த தோட்டக்கலை அதிகாரி கைலாசத்தை தொடர்பு கொண்டு பேசினோம்... “ஊட்டியை என்னால் மறக்கமுடியாது.. அதுவம் சீசன் ஒரு வரப்பிரசாதம்... மாலை நேரத்தில் நான் வாக்கிங் போகும் போது நண்பர்களை சந்தித்துப் பேசுவது.... அதுவும் சீசன் சமயத்தில் ஸ்வட்டர் போடாமல் செல்வது ஊட்டியில் ஒரு திரில்லிங் அனுபவம்...
.
தோட்டக்கலை துணை இயக்குனர், இணை இயக்குனர் பதவிகளை கடந்து வந்தவன்... தற்போது பொள்ளாச்சியில் உள்ள என் தென்னை தோப்பு வீட்டில் அமைதியாக இருக்கிறேன்... கொரோனா தொற்றால் உலகமே நின்று போயுள்ள நிலையில், ஊட்டி சீசனும் அமைதியாக நின்று போயுள்ளது வருத்தமான விஷயம்....
ஊட்டி சீசனை என்னால் மறக்க முடியாது... அதை ஞாபகப் படுத்தின உங்களுக்கு தேங்க்ஸ்” என்றவர் மேலும் தொடர்ந்தார்...
.
ஊட்டி கிளைமட்டே சீசன் நேரத்தில் மாறிவிடும்... அதன் ஹைலைட் மலர் கண்காட்சி தான்.. அப்பொழுது எல்லாம் ஒரு நாள் தான் கண்காட்சி நடக்கும். காலை 10 மணிக்கு முதலமைச்சரால் துவக்கப்பட்டு... மாலை கவர்னரால் பரிசு விழாவுடன் முடிவடையும்... 5000 பேர் தான் பார்வையாளர்கள்... அதிலும் real gardeners தான் வருவார்கள்... இப்பொழுது எல்லாம் லட்சக்கணக்கில்....
நான் கார்டனில் பணிபுரியம் போது அன்றைய முதல்வர்களான காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கலைஞர் மற்றும் எம் .ஜி.ஆர் இந்த வரலாற்று சிறப்புமிக்க மலர் காட்சியை துவக்கி வைத்துள்ளனர். அண்ணாதுரை ஒரு முறை உடல் நலக்குறைவால் மலர் காட்சியில் கலந்து கொள்ளவில்லை .
எங்க தோட்டக்கலை ஸ்டாலில் கலைஞரின் பெரிய படத்தை வைத்திருந்தோம்... அதைப் பார்த்து ‘அருமை கைலாசம்’ என்று தட்டிக் கொடுத்தார். அப்பொழுது காளான் பயிரிடுவதை குறித்து அவரிடம் கூற... அதற்கு அவர், ‘அரசியலிலும் நிறைய காளான் வந்துவிட்டது... அவைகளை களை எடுக்கவேண்டும்’ என்று நாசுக்காக என்னிடம் கூறியது இன்னும் என் நினைவில்...
முதல்வர் ஜெயலலிதாதான் நூறாவது மலர்க் காட்சியை நடத்தியவர் என்று சொல்லலாம். அவருக்கு அவ்வளவு ஈடுபாடு, அதன் விளைவு தான் ரோஸ் கார்டன் உருவாகியது.
1963-ல் நான் ராஜபவன் கண்காணிப்பாளராக பொறுப்பை ஏற்க.. பிரிட்டிஷ் அரசின் கடைசி சுப்பிரண்டெண்ட் ஜியோ பார்லி.. என்னை கட்டி அணைத்து, தன் சிங்கிள் சீட் காரில் ஏறி கண்கலங்கி ஊர் விட்டு சென்றது இன்னும் என் கண்முன்னே...
1967 ஆம் வருடம் மலர் கண்காட்சி சிறப்பாக அமைந்ததனால், கவர்னர் சர்தார் உஜெல்சிங் எனக்கு தங்க மெடல் அணிவித்து கௌரவித்தார். அந்த நிகழ்வை இன்னமும் மறக்க முடியவில்லை.. அதே போல மைசூர் மகாராஜா ஜெய்சாம்ராஜ் உடையார் ஆறுமாதம் தான் கவர்னராக இருந்தார். அவர் ஊட்டி வந்து மைசூர் பேலஸில் தங்கி, ராஜ் பவன் வந்தார். அந்த வருடம் கடுமையான வறட்சி மற்றும் கடும் வெயில்... அவர் ராஜ் பவன் வந்தவுடன் திடீர் மழை கொட்டியது... அப்பொழுது நான் சொன்னேன்...‘நீங்கள் காலை வைத்தவுடன் மழை வந்துள்ளது’ என்று... என்னை கட்டித் தழுவி, பாராட்டி.. பூரித்துப் போய்.. சில்வர் பிளேட், டம்ளர் பரிசாக கொடுத்தார். அதை பத்திரமாக இன்றளவும் வைத்துள்ளேன்.... இப்படி நிறைய இருக்கிறது. என்னால் ஊட்டி சீசனை மறக்கவெ முடியாது..”
ஊட்டி சீசனை மனதில் நிறுத்துவது மலர்களால் அலங்கரிக்கப்படும் மெகா சைஸ் செட்டப் தான்... இந்த செட்டப்பை முதலில் அறிமுகம் செய்தவர், முன்னாள் தோட்டக்கலை இணை இயக்குனர் மணி. அவரை தொடர்பு கொண்டு பேசினோம்..
“ஊட்டி சீசன் எப்படி இருக்கும் ... கீழ்ப்பிரதேச வெயிலுக்கு மக்களின் கூட்டம் ஊட்டியை மொய்த்து விடும் ... அதிலும் கார்டனில் நாங்கள் திண்டாடிவிடுவோம்... 108 முதல் 111-வது மலர் காட்சி வரை நான் பணிபுரிந்ததை மறக்கமுடியாது. வி.ஐ.பி வருகை, முக்கிய அமைச்சர்கள் வருகை என்று அது ஒரு பக்கம் படு பிசி...
2007 ஆம் வருடம் முதல் மெகா சைஸ் மலர் அலங்காரங்களை செய்தோம்.... முதலில் 42 அடி ஈஃபில் டவர், 3000 லில்லி மலர்களைக் கொண்டு செய்தோம்... பெரிய சைஸ் மலர்க் கூடை, தாஜ் மஹால், மோனோ ரயில், மகாபலிபுரம் என்று அசத்தியுள்ளோம். என்னைத் தொடர்ந்து இந்த மெகா செட்டப் தொடர்கிறது...
பார்லிமென்ட் கட்டிடம்... சென்ட்ரல் ஸ்டேஷன்....போன்ற மலர் அமைப்புக்கள் சுற்றுலாக்களை மிகவும் கவர்ந்துள்ளது. கோத்தகிரி, நேரு பூங்காவில் காய்கறி காட்சி நடக்கும். அதில் மெகா சைஸ் கேரட்டால் வடிவமைத்திருந்தோம்.. 600 கிலோ கேரட் அதற்கு யூஸ் செய்தோம். அதே போல கப் அண்ட் சாசர் வடிவமைத்தோம்.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில், குன்னூர் ரயில்வே ஸ்டேஷனை 2000 கிலோ சாத்துக்குடி பழத்தில் வடிவமைத்தோம். இப்படி பல அபூர்வமான மெகா சைஸ் அலங்கார அமைப்புகள் சுற்றுலாக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தது. ஊட்டி சீசனை மறக்கமுடியாது.
என்ன செய்ய... கொரோனா என்ற வைரஸ் உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது.. அதன் பிடியில் இருந்து நாம் விடுபட்டவுடன்தான் அனைவருக்கும் நிம்மதி.... அடுத்த ஊட்டி சீசனில் கட்டாயம் சந்திப்போம்... அதுவரை தனித்து இருப்போம், விழித்திருப்போம், சமூக இடைவெளியை கடைபிடிப்போம்” என்று முடித்தார்.
ஊட்டி சீசனில் உள்ளூர் வாசிகள் திரில்லிங்காக ஏப்ரல்... மே மாதங்களில் என்ஜாய் பண்ணுவது அழகாக இருக்கும்... அதில் நிறைய பேர் தங்கள் வீட்டில் சொந்த கார்டன் அமைத்து பராமரிப்பதையும் ஒரு கலையாக பாவிக்கிறார்கள்...
மலர் காட்சி நிறைவு நாள் அன்று, சிறந்த வீட்டுப் பூங்காவிற்கு சிறப்பு பரிசுகளை ஊட்டி தோட்டக்கலை வழங்கி வருவது சூப்பர்..... இதில் பெரும்பாலும் தோட்டக்காரர்களை வைத்து கார்டனை அமைத்து ஜாலியாக பரிசுகளைப் பெறுவது எப்போதும் தொடர்கதை!
...அதே சமயம், தானே ஒரு தோட்டக்காரராக மறி தன் சொந்த வீட்டு பூங்காவை வடிவமைத்து பராமரித்து.. பரிசு பெறுவது தான் ஊட்டி சீசனில் ஒரு ஸ்பெஷல்.. இந்த கொரோனா காலத்தில், ஊட்டி லவ் டெல் பகுதியில், தனது பிரேமி நிவாஸ் இல்லத்தில், அழகிய கார்டனை பராமரித்து பூரித்து இருக்கும் விக்டர் பிரபுராஜ் சந்தித்து பேசினோம்…
“எனக்கு சிறு வயதில் இருந்தே மலர்கள் மேல் கொள்ளை ஆசை தான். அதற்குக் காரணம் நம்ம பொட்டானிக்கல் கார்டன் தான். அங்கு எப்போதும் குலுங்கும் மலர்களை பார்த்து, ஏன் நம் வீட்டில் கூட ஒரு கார்டன் வைத்தால் நன்றாக இருக்குமே என்று துவங்கின ஐடியா... நானே உருவாக்கின கார்டன்...
கடந்த 12 வருடமாக ஊட்டி மலர் கண்காட்சியில் முதல் இரண்டு பரிசுகளை தொடர்ந்து பெற்று வருகிறேன்” என்று அமைதியாகப் பேசினார்.
“ஊட்டி சீசன் என்றாலே ஏதோ ஒரு ஆனந்தம் உள் மனதில் தாண்டவம் ஆடும்... கோடை வெயில்... இதமான மழை... மாலை நேரத்தில், ஊட்டி நகரை சுற்றி வருவது... புதிய வெளியூர் ஆட்களை சந்திப்பது... எனக்கு நிறைய சீசன் நண்பர்கள் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்” என்பவர் தனது தோட்டக்கலை பற்றி மேலும் தொடர்ந்தார்.
“நான் ஜனவரி மாதமே என் கார்டன் வேலையை துவங்கி... பிப்ரவரி மாதம் நாற்று நட்டு விடுவது வழக்கம்.. செடிகள் முளைத்து வளரும் போது மெய்சிலிர்க்கும்... நான் காலை 5 .30 மணிக்கு எழுந்து தண்ணீர் ஊற்றுவது... பின்னர் களை எடுப்பது என்று படு பிஸியாகி விடுவேன்... மாட்டு சாணம் தான் எருவாக போடுவேன்... இந்த வருடம் கூட மலர்க்காட்சியை நினைத்து சூப்பராக கார்டனை ரெடி செய்தேன்... அதற்குள் இந்த கொரோனா வந்து எல்லாம் தலைகீழ்.... அதே சமயம் என் கார்டனில் மலர்கள் வழக்கம் போல நன்றாகவே பூத்துக் குலுங்குகின்றன....
கொரோனா நேரத்தில் அதிக நேரத்தை என் கார்டனில் செலவு செய்கிறேன்.. பத்து வெரைட்டி ரோஜாக்கள்... டேலியா.. லில்லிகள்... ஆஸ்டஸ்... ஆப்பிரிக்கன் மேரிகோல்டு... பேன்சி என்று அழகாக காட்சி அளிக்கிறது... இந்த மலர்களை பார்க்கும் போது ‘லில்லி மலருக்கு கொண்டாட்டம் என்னை பார்த்தத்திலே’ என்ற பாட்டை நானே பாடிக்கொள்கிறேன்... ஊட்டி நகரினுள் சென்றாலே வெறிச்சோடிக் கிடக்கிறது. நானும்அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே செல்வது... இதனால் என் மலர்களுடனே ஐக்கியமாகி விடுகிறேன்... வருடந்தோறும் ஊட்டி பொட்டானிக்கல் கார்டனில் இருந்து சிறப்பு ஜட்ஜ்கள் வந்து நம்ம கார்டனை பார்த்து விட்டுச் செல்வார்கள்.
மே இரண்டாவது வாரத்தில் தான் அழைப்பு வரும்.. அதிலும் பரிசுளிப்பு விழா மேடைக்கு செல்லும் வரை என்ன பரிசு என்று தெரியாத அளவு ரகசியம் காப்பது வழக்கம்... இந்த வருடம் எதுவும் இல்லை.... மலர் காட்சியை நினைத்தபடி ‘என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்.. எங்க ஊர் சீசனை பற்றிக் கூறும்’ என நான் மெளனமாகப் பாடியபடி இருக்கிறேன்” என சிரித்தபடி கூறினார் விக்டர்....
இந்த வருடம் ஊட்டியில்124-வது மலர்க்காட்சி நடக்க இருந்தது... ரோஸ் கார்டன் இந்த வருடம் தன் தனது வெள்ளி விழா ஆண்டை சிறப்பிக்க இருந்தது... என்ன செய்ய?! எல்லாவற்றுக்கும் கொரோனா தடை போட்டுவிட்டது.......
கடந்த 2000 ஆம் வருடம் தேயிலை விவசாயிகளின் போராட்டத்தால் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா ரத்தாகியது.... சுற்றுலாக்கள் வழக்கம் போல வந்து போனார்கள்.. ஆனால் இந்த வருடம் கொரோனா எல்லாவற்றையும் நிறுத்தி விட்டது....
கொரோனா மறைந்தால்தான் அடுத்த வருட சீசனை பற்றி யோசிக்க முடியும். அது எப்படி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Leave a comment
Upload