60 நாட்களாய் தொடர்ந்து நடை பயிற்சி செய்ய முடிந்தது. கோவிட்டின் மகத்துவத்தில் சேரும்.
தள்ளிப் போகாதே.. எனை விட்டு போகாதே என, சித் ஸ்ரீராம் என் காதில் இறைச்சலாய் இறங்க, அமைதியாய், காலை பனி விழுந்த நிலம் பார்த்து நடை பயில, பக்கத்தில், மூச்சிரைத்தவாறே யாரோ ஒடி வரும் அதிர்வு கண்டு அவசராமய் 2 மீட்டர் தூரம் தள்ளி நான் நடக்க, கடந்த நபர், கை அசைத்து காற்றில் தனது ஹெலோவை கரைத்தார்.
கோவிட்டுக்கு முன்னராயிருந்தால், இருவரும் முகமனோடு ஒர் சின்ன உரையாடலும் நிகழ்த்தி இருப்போம். இப்போது “தூரத்தள்ளி நிற்பது சால நன்று” என்று கை குலுக்கலின்றி, இடைவெளியுடன் பழகப் பழகியாயிற்று!
காலி தெருக்கள், விளையாட அனுமதி இல்லை என பெயர் பலகை தாங்கி தலை குனிந்த விளையாட்டு மைதானங்கள்.. இவை வழி கண் படரும்போது மனம் சொல்லும், சமாதான வார்த்தை, “இதுவும் கடந்து போகும்...”
கடந்த பல வாரங்களாய் தனிமை படுத்தப்பட்ட உலகம், நாடுகள், மனிதர்கள். உறைந்த பயணங்கள், நாளை என்ன என்ற கேள்வி தாங்கி நின்ற மனிதம், அப்பப்பா!
நான் வசிக்கும் ஆஸ்திரெலியா, 3 கட்டங்களில் கோவிட் தாக்குதலிலிருந்து வெளி வர முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
முதலில், பள்ளிகள்... பிள்ளைகளை வாரம் ஒரு நாள் முறை வைத்து வருமாறு விண்ணப்பித்தது.
கடைகள், கொஞ்சம் கொஞ்சமாய் தலை தூக்க ஆரம்பித்து இருக்கின்றன. 10 பேர் கூடலாம், இன்னும் 2 வாரத்தில் 20 பேராக சேரலாம் என்றெல்லாம் ஆசை காட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
பச்சை வட்ட சோஷியல் டிஸ்டன்சிங்கும் (சமூக இடைவெளி), ப்ளாஸ்டிக் தடுப்புகளும், முக மூடிகளுமாய் அலுவலகங்கள் தயாரகிக் கொண்டிருக்க, வேலை இல்லாதோர் கணக்கு 5.2 % விலிருந்து 6.2 % என்கிற அளவுக்கு எகிறி, கங்காரு நாடு முழி பிதுங்க ஆரம்பித்துவிட்ட து. சைனா வேறு கொஞ்சம் லேசாக தன் புருவத்தை உயர்த்த, இங்கே வியர்க்க ஆரம்பித்தாயிற்று.
வர்த்தக தடுமாற்றம் நிகழுமா? நிகழலாம் கூடிய சீக்கிரத்தில். சைனாவின் அதிருப்திக்கு ஆஸ்திரேலியா ஆளானதென்னமோ தவிர்க்க முடியாத நிகழ்வு. பின்னே? ‘காரணம் கண்டு பிடியுங்கள் கோவிட் ஆரம்பத்தை’ என முதலில் எழுப்பிய குரல் இங்கேதான். இருக்காதா பின்னே? 4.2 பில்லியன் மக்கள் உலகெங்கிலும் பாதிக்கபட்டு, 3 மில்லியன் உயிர் சேதம், 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழப்பு என உலகமே தத்தளிக்க, ஒரே காரணம் ஹூபை/வுஹானில் ஆரம்பித்த அந்த கோவிட்! அதை அமுக்கிய அவர்கள். அதற்கு அவர்கள்தான் பிணை என கூறவில்லை... எனினும், என்ன எப்படி ஏன் என்று தெரிய வேண்டாமா? இதை கேட்ட உடனே, சைனா கோபித்து முதுகைத் திருப்ப, உடனே இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறைச்சி, பார்லிக்கு 80% சதவீத தடை.
இதற்காக சீனாக்காரன் தாடை பிடித்து கெஞ்சவா முடியும், சரிதான் போய்யா, இந்த பூச்சாண்டி வேண்டாம் இங்கே என்று வெளி நாட்டு மந்திரி பிடிவாதமாய் நின்றதில், ‘இல்லியே மறு பாதிப்பெல்லாம் இல்லியே..எங்கள் நாட்டு மக்கள் உடல் நலம் கருதி நாங்கள் செய்யும் முன்னேற்பாடு’ என சமாளிக்கிறார்கள் சீனர்கள்.
கேள்விகளை என்றுமே வரவேற்காத சீன தேசம், ஆஸ்திரேலியாவை இக்கட்டில் வைத்தாலும், புதிய ப்ரச்சினை, புதிய பாதைகளை கொடுக்கும். சீன தேசத்தின் இந்த மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்று தலை நிமிர்ந்திருக்கிறது ஆஸி!. இதை கிண்டல் செய்ய, கவலைப்பட, இதனால் கஷ்டங்கள் அனுபவிக்க என கூட்டங்கள் பலவாறாய் வழக்கம் போல பிரிந்து கிடக்கிறது.
இந்த கோவிட் படுத்தும் பாடில் இந்த நாட்டின் நிதி நிலைமை அவ்வளவொன்றும் நன்றாயில்லை.
தேசிய பாதுகாப்பு செலவிடும் நிலையில் இல்லை, ‘வேண்டாம் சீனாவோடு ப்ரச்சினை’ என இதற்கு முன் வெளி நாட்டு வர்த்தக மந்திரியாயிருந்த டென்னிஸ் ரிச்சர்ட்சன் கவலை தெரிவித்தாலும், பிரதம மந்திரி/வர்த்தக துறைகள், ‘அதெல்லாம் பார்த்துக்கலாம். குட்ட குட்ட குனிய தேவையில்லை ... கோவிட் விசாரணை தேவை’ என்பதில் பிடிவதாமாக நிற்கிறார்கள்.
வர்த்தகம் என்பது இரு வழிப் பாதை. நமது இறைச்சி, பார்லி அவர்கள் வாங்க மறுத்தால், அவர்களது மிக அதிகத் தேவையான இரும்பு தாது, கரி வளம் நம்மிடம் நிறுத்தப்படும். சும்மா பழைய கதை பேசாது, புதிய வர்த்தக முறை, புதிய விதி முறைகள், கல்வி, விளையாட்டு, வைன், மற்றும் மருத்துவம் மூலம் உலக மக்களை இங்கே ஈர்க்க, வியாபாரம் பெருகும் .பீஜிங்கின் பூச்சாண்டிக்கு பயப்படாது, மனிதம் வாழ, கோவிட்டின் ரிஷி மூலம்/நதி மூலம் ஆராய கேள்வி எழுப்பிய குரலை அமுக்கிக் கொள்ளக் கூடாது.
சூழ்நிலைக்கேற்ப எதிரிகள்/நண்பர்கள் இடம் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.
இதற்கிடையில், வருங்காலம், கல்வி கற்பதையே ஒத்தி வைத்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது..
கோவிட் புரட்டிப் போட்ட வாழ்க்கை முறையை நாம் எப்படி மீட்போம்?
இந்தக் கேள்வி எழும் நேரங்களிலெல்லாம் உள்ளே இருந்து வரும் ஒர் குரல், ‘இதுவும் கடந்து போகும்’.
மனிதம் மீட்டெடுக்கும், மண் கூடு கரைத்து, முட்டி மோதி வெளிவரும் புல் போலே, மீண்டும் பிறப்போம், புது விதி அமைப்போம்...
என் வருங்கால தலைமுறை தன் தூக்கம் கலைந்து, தவிப்பாய் நாட்களை பார்த்துக் கொண்டிருக்கிறது. அறிவியல், தேவைகள் கண்டுபிடிக்கும் உற்ற நண்பன். இந்த தலைமுறை வாழ்க்கை முறைக்கு புதிய விதி அமைக்கும் என்றே தோன்றுகிறது. வரலாறே நமக்கு துணை, மனிதன் மீட்டெடுப்பான் தன்னை.
போனால் போகட்டும்!! என்ன, கொஞ்சமே கொஞ்சம் நாட்களை தொலைத்தோம்... ஆனால், நிறைய விஷயங்களை அறிந்து கொண்டோம், தனிமை நமக்கு ஏதோ மிக முக்கியமான பாடம் புகட்டியே செல்லும் எனவும் தோன்றுகிறது.
அடங்கி இருக்கிறோம், பர பரப்பில்லை, பயமிருக்கிறது, அடக்கம் கூடியிருக்கிறது. ஆழமாய் யோசிக்க கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. மாற்றங்கள் மட்டுமே நிஜம்.. நிஜங்களோடு வாழ பழகிக் கொள்வோம், கோவிட் நம்மை சீண்டிவிட்டு சரிந்து விடுமா, கூட இருந்தது குப்புறப்போடுமா? - இதெல்லாம் கடவுள் மற்றும் கோவிட்டுக்கு மட்டுமே தெரிந்த உண்மை..
அதுவரைக்கும், நம் நம்பிக்கை, இது ஒன்றுதான்!!! ‘இதுவும் கடந்து போகும்’.
எந் நாட்டினருக்கும் எம் நாட்டு கீதோபதேசமே பதில்!
Leave a comment
Upload