ஆன்மீகம்
பெருமைமிக்க மயிலாப்பூரில் சப்த சிவஸ்தலங்கள்!! - ஆரூர்.சுந்தரசேகர்.

20200413143728717.jpeg

மயிலை என்றும் அழைக்கப்படும் மயிலாப்பூர், இது சென்னையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும். முன்பு திருமயிலை எனப் பெயர்பெற்றிருந்த இந்த சிவஸ்தலமே தற்போதைய மயிலாப்பூர் ஆகும். இந்த ஸ்தலத்தை மயில், ஆர்ப்பு, ஊர் என்பதே மயிலாப்பூர் என்றானது. அதாவது, மயில்கள் அதிகம் நிறைந்திருக்கும் இடம் என்று அர்த்தம். இதைத்தவிர மயூராபுரி, மயூராநகரி என்றெல்லாம் இந்தத் தலம் குறித்து புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனாரும், பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும் அவதரித்த தலமாகும். திருக்குறளை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்ததாக சிலர் கூறுகின்றனர்.

மயிலாப்பூர் என்றவுடன் எல்லோருக்கும் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்தான் நினைவிற்கு வரும். ஆனால், கபாலீஸ்வரர் கோயில் அருகே ஆறு பழமையான சிவாலயங்கள் இருப்பது யாருக்கும் அவ்வளவாக தெரியாது.

மைலாப்பூரில் அருகருகே உள்ள இந்த ஏழு கோவில்களுமே கி.பி 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாறு கூறுகிறது. இவை அனைத்தும் அருகிலேயே இருப்பதால், இந்த சப்த (ஏழு) சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய முடியும்.

கபாலீஸ்வரர் கோயிலை தரிசிப்பதற்கு முன்பாக, மற்ற ஆறு கோயில்களையும் தரிசிப்பதால் முக்தி பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தலங்களை கீழ்கண்ட வரிசைப்படி தரிசிக்க வேண்டும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

1. ஶ்ரீகாரணீஸ்வரர் கோயில்,

2. ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில்,

3. ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோயில்,

4. ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில்,

5. ஶ்ரீவாலீஸ்வரர் கோயில்,

6. ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில்,

7. ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில்.

20200413143942339.jpeg

1. ஶ்ரீகாரணீஸ்வரர் கோயில்

மயிலையில் சப்த சிவாலயங்களில் முதலாவதாக வழிபட வேண்டிய ஸ்தலம் ஶ்ரீகாரணீஸ்வரர் கோயில். இங்கு ஶ்ரீஸ்வர்ணலதாம்பிகை சமேத ஶ்ரீகாரணீஸ்வரராக அருள் பாலிக்கிறார். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஶ்ரீகாரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டுள்ளார். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி, திருக்கடையூர் மற்றும் காளஹஸ்தி தலங்களில் உள்ள சதுர வடிவ லிங்கத் திருமேனி போல் காட்சி தருகிறது. நோய் நொடிகள் தீர, வாழ்வில் வளம் பெருக பக்தர்கள் இத்தல சிவபெருமானை வணங்கி பலனடைகின்றனர். இங்குள்ள ஶ்ரீஸ்வர்ணலதாம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும், பொருளும் வந்து சேரும். இது வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் ஆகும்.

மயிலையில் பஜார் சாலையில் காரணீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

2. ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில்

சப்த சிவாலயங்களில் இரண்டாவதாக வழிபட வேண்டிய ஸ்தலம் ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில். இங்கு ஶ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் அருள் பாலிக்கிறார். அகஸ்தியர் தனக்கு ஏற்பட்ட நோய் நீங்குவதற்காக, இந்த ஆலயத்திற்கு வந்து சிவபெருமானையும் அம்பாளையும் வணங்கினார் என்பது தல வரலாறு. அகத்தியர் உயரம் குறைந்தவர் என்பதால், அவர் தன்னை மலர்களால் பூஜை செய்யும் போது, தன் உயரத்தையும் குறைத்துக் கொண்டாராம் சிவன். அதன் காரணமாகவே இத்தலத்து சிவனும், அம்பாளும் இரண்டடி உயரத்தில் மிகவும் சிறிய உருவமாக உள்ளனர். சுவாமி சற்றே இடப்புறம் சாய்ந்தபடி, தோற்றத்தில் ஒரு வெள்ளரிப்பழம் போல காட்சி தருகிறார். மற்றும் அத்ரி முனிவரால் வழிபட்ட திருத்தலமாகும்.

ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரருக்கு கடல் நீரால் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.

திருமணதோஷம், புத்திர தோஷம் மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கவும், நோய் இல்லாத வாழ்க்கை அமையவும் வேண்டிக்கொண்டு பாயசம், பானகம் போன்ற உணவுகளை ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரருக்கு நைவேத்தியம் செய்து அங்கு வருபவர்களுக்கு கொடுப்பதால் நற்பலன்களை அடையலாம்.

மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது.

திருக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

3. ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோயில்

மூன்றாவதாக வழிபட வேண்டிய ஸ்தலம் ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோயில். ஶ்ரீகாமாக்ஷி அம்மன் சமேத ஶ்ரீவெள்ளீஸ்வரர் இங்கு அருள் புரிகின்றார். அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகின்றது. எனவே, ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். நினைத்த காரியம் நிறைவேறவும், மனக்குறைகள் நீங்கவும், திருமணம் நடக்கவும் இங்குள்ள காமாட்சி அம்மனை வேண்டி நற்பலன்களை பெறுகின்றனர்.

ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது.

கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு அருகிலும், தெற்கு மாட வீதியின் பிரதான சாலையிலும் ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோவில் இருக்கிறது.

திருக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

4. ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில்

சப்த ஸ்தல வழிபாட்டில் நான்காவதாக வழிபட வேண்டிய ஆலயம் ஶ்ரீவிசாலாட்சி அம்பாள் சமேத ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில். இக்கோயிலில் பெரிய ஆவுடையாரில் அமைந்த மிகப் பெரிய லிங்கத் திருமேனியாக அருள் புரிகிறார். இந்த ஸ்தலத்தில் விசாலாட்சி அம்பாள் சன்னிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது.

இங்குள்ள சிவபெருமான் பக்தர்களின் விருப்பங்களை தன் கண் பார்வையாலேயே தீர்த்து வைப்பதால் விருப்பாக்ஷீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது.

குத்ஸ முனிவரால் வழிபட்ட இத்திருத்தலத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் வந்திருந்து ஈசனை வழிபட்டுள்ளார்.

மயிலை கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில்தான் ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயிலும் உள்ளது.

திருக்கோயில் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

5. ஶ்ரீவாலீஸ்வரர் கோயில்

ஐந்தாவதாக வழிபடவேண்டிய ஸ்தலம் ஶ்ரீவாலீஸ்வரர் கோயில். இங்கு பெரிய நாயகி அம்மன் உடனுறை வாலீஸ்வரராக ஈசன் அருள் பாலிக்கின்றார். இராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டு பல வரங்களைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் இங்குள்ள ஈஸ்வரர் வாலீஸ்வரர் என்று அழைக்கபடுகின்றார். இங்குள்ள பஞ்சலிங்க சந்நிதி மிகுந்த சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. காசிக்கு இணையாக இந்த பஞ்சலிங்கத்தை கூறுகின்றனர்..

ஸ்ரீ இராமரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.

சனிக்கிழமை தோறும் காம்பு நீக்கிய வெற்றிலையை மாலையாகக் கோர்த்து, அந்த மாலையை வாலீஸ்வரருக்கும், சுவாமி சன்னிதியின் உட்புறத்தில் இறைவனை வணங்கியபடி உள்ள வாலியின் திருவுருவத்திற்கும் சாத்தி வழிபட்டு வந்தால் பக்தர்கள் வேண்டிய பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கௌதம முனிவர் இங்கு வந்து வழிபட்டுள்ளார்.

மயிலையில் கோபதி நாராயண செட்டித் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு கோலவிழி அம்மன் ஆலயத்தின் அருகாமையில் இருக்கிறது இத்திருத்தலம்.

திருக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4.00மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

6. ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில்

மயிலையில் ஆறாவதாக வழிபட வேண்டியது ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில். இங்கு மரகதாம்பிகை சமேத ஶ்ரீ மல்லீஸ்வரராக அழகிய சிறிய கோவிலில் காட்சியளிக்கிறார். ஆதி காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இடத்தில் ஈஸ்வரன் எழுந்தருளியிருந்ததால் மல்லீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. மாசி மாத வளர்பிறை நாளில் காலையில் சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மேல் விழுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இந்த ஸ்தலத்திற்கு வந்து வழிபட்டவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்திருத்தலம் பிருகு முனிவரால் வழிபட்ட ஸ்தலமாகும்.

மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலையில்) காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

திருக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

7. ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில்.

மயிலையின் சப்த சிவஸ்தலங்களில் ஏழாவதாகவும், ஶ்ரீகற்பகாம்பிகை சமேத ஶ்ரீகபாலீஸ்வரர் கோயிலே நாம் நிறைவாக தரிசிக்கவேண்டிய திருக்கோயிலாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலில் அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு சிவபெருமானை வழிபட்டதாகவும், பிரம்மன் வழிபட்டு தன் ஆற்றலை திரும்பப் பெற்றதாகவும், முருகன் தன் வேலினை பெற்றதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது. திருஞான சம்பந்தர் பதிகம் பாடி இறந்த பூம்பாவை எனும் பெண்ணை உயிர்த்தெழச் செய்த ஸ்தலம்.

ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர்.

இந்த கோயிலை தரிசித்தால் உடல் சம்மந்தமான நோய்கள் நீங்கும், திருமணம் கை கூடும் மற்றும் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

இது காஸ்யப முனிவர் வழிபட்ட திருத்தலம் ஆகும்.

மயிலையின் மத்திய பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. திருக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இவ்வளவு பெருமைமிக்க மைலாப்பூரில் உள்ள இந்த சப்த சிவஸ்தலங்களை வணங்கினால் நமது கஷ்டங்கள் தீரும், நாம் வேண்டியது நிறைவேறும்!!!

“தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!

ஓம் நமசிவாய...!

“திருச்சிற்றம்பலம்” சிவாய நம ஓம்...!

ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!”