பொது
சிரிக்கதை - "குப்புசாமியும் குழம்பு மிளகாய்ப்பொடியும்..." - வேங்கடகிருஷ்ணன்

20200401204848515.jpg

லாக் டௌன் இன்னும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து அறிவிப்பு வந்த உடனேயே, மீனாட்சி மாமி உஷாராகி வீட்டுக்கு வேண்டிய சாமான்களையெல்லாம் வாங்கிப்போட்டு விட தீர்மானம் செய்தாள். கழக தலைவர் முடிவெடுத்தால், கழகத் தொண்டர்கள் அவதிப்படுவது போல... மாமி முடிவெடுத்தால், குப்புசாமி மாமா தானே அதன் பலனை முழுவதுமாக அனுபவிப்பவர்.

அனுமார் வாலை விட நீளமாக ஒரு லிஸ்ட் எழுதி தயாராக வைத்திருந்தாள் மீனாட்சி மாமி. மாமாவுக்கு அதைப் பார்த்த உடனே கொரோனவுக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தது. மூச்சு சிரமமாய் வந்தது, தொண்டை வறண்டது... etc., etc... மாமிக்கா தெரியாது அவரை எப்படி உற்சாகமாய் கடைக்கு அனுப்பவது என்று. மாமாவிடம் சொன்னாள்... “நீங்க காபி பொடி வாங்கி வந்தா தான் சாயங்காலம் காபியே” என்றாள்.

அவ்வளவு தான்... தன் உரிமையில் மாமி கை வைத்து விடுவாளோ என்று பயந்து, மாமா மார்க்கெட் போக தயாரானார். சொல்லி வைத்தாற்போல மாமியின் தம்பி, மாமாவுக்கு கல்யாணம் ஆனதிலிருந்து இலவச இ(தொ)ணைப்பு. மாமியின் தம்பி அச்சுவும், பின்னர் கொசுறாக அவன் பிள்ளை சுப்புணியும் உள்ளே நுழைந்தார்கள். அது அவர்கள் விலையில்லா (ஓசி) காபி குடிக்கும் நேரம். அவர்களை பார்த்தவுடன் முகமெல்லாம் சிரிப்புடன், வாயெல்லாம் பல்லாக (பல் செட்டாக) வரவேற்றாள் மீனாட்சி மாமி... “வாடா, கரெக்டா தான் வந்துருக்கே, மாமா கூட மார்க்கெட்டுக்கு தொண போக யாரும் இல்லையே அப்படின்னு நினைச்சேன், நீ போயிட்டு வந்துடுடா அச்சு” என்றாள்.

மாமா நினைத்தார் (இவ நிஜமாவே ஹெல்ப்புக்கு அனுப்பறாளா? இல்ல என்ன வேவு பாக்க அனுப்பறாளா?). அச்சு உடனே, “அக்கா எனக்கு பயங்கர தலைவலி (இது வேறயா? குப்புசாமி மாமா) , எனக்கு முதல்ல காபி குடு” (அதானே பார்த்தேன்... குப்புசாமி மாமா), மாமி... “காபி பொடி இல்லடா, அதான் இவரை போய் வாங்கிண்டு வாங்கோன்னு இப்போதான் சொன்னேன், நீ கொஞ்சம் இப்படி படுத்து ரெஸ்ட் எடு, சுப்புணி வேணா அவர் கூட போயிட்டு வரட்டும்...”


அச்சு... “சரிக்கா, நான் மாமா ரூம்ல படுக்கறேன், அங்க தானே AC இருக்கு” (நானே போட்டுக்கறதில்ல, இவனுக்கு AC இல்லாம துக்கம் வராதா?).

ஒரு வழியாக சுப்புணியுடன் கிளம்பினார் மாமா. ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி வாங்கிக் கொண்டு வந்தார், பொருட்கள் ஏற... ஏற... இருவருக்கும் சுமப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கடைசியாக, மிளகாய் வற்றல் வாங்கும் போது, பழக்கமான குரல் கேட்டது... “என்ன மாமா, பர்சேஸ்லாம் பலமா இருக்கு? என்ன விஷயம்...” கேட்டுக்கொண்டே வந்தாள், பக்கத்து வீட்டு பரிமளா மாமி. “ஒன்னும் இல்லை, லாக் டௌன் எக்ஸ்டெண்ட் பன்றேன்னு சொன்னாளோல்யோ அதான்... கொஞ்சம் பர்ச்சேஸ், நீங்க வாங்கி முடிச்சாச்சா...” குப்புசாமி மாமா கேட்டார்.

“ஓ! அதெல்லாம் காலையிலேயே முடிச்சுட்டேன். இப்போ தீப்பெட்டி வாங்க மறந்துட்டேன்.. அதான் வந்தேன். வாங்களேன் என் ஸ்கூட்டிலேயே போய்டலாம், நிறைய வெய்ட் வச்சுண்டிருக்கீங்களே... சுப்புணி பாவம், தூக்க முடியாமல் கஷ்டப்படறானே” என்று அவனிடமிருந்து பையை , மாமி வாங்கி கொண்டு முன்னாள் நடக்க ஆரம்பித்தாள். அப்படியே ஒரு லாலி பாப் வாங்கி அவனிடம் கொடுத்தாள். அவளும் அவனும் நேராகச் சென்று அவளுடைய ஸ்கூட்டியில் ஏறிக்கொண்டார்கள்.”

குப்புசாமி மாமா செய்வதறியாது விழித்தார். மாமியின் பையனும் பெண்ணும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அங்கெல்லாம் இது சகஜம். குப்புசாமி மாமா சகல தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு, வண்டியின் கால் வைக்கும் இடத்தில் தன் மூட்டையை வைத்துவிட்டு, பின்னால் ஏறிக்கொண்டார், நடுவில் சுப்புணி, அதுவரையில் பிழைத்தேன் என்று நினைத்துக்கொண்டார்.


தனது தெரு முனையிலே, எலுமிச்சம்பழம் வாங்க மறந்து விட்டதாகவும், தான் வாங்கிக் கொண்டு வருவதாகவும், மாமி போய் சுப்புணியை இறக்கி விடுமாறும் சொன்னார். பரிமளா மாமியும் சரியென இவரை இறக்கி விட்டுவிட்டு போய்விட்டாள்... (தனது ராஜ தந்திரத்தை எண்ணி பூரித்துக்கொண்டே, விசிலடித்தபடி நடந்து வந்தார். வீட்டை நெருங்கும் போது, வாசலிலேயே மீனாட்சி மாமி காத்துக்கொண்டிருந்தாள்... “என்ன மீனு, இங்க நிக்கற?” (கவனிக்க மீனு, ஐஸ் வைத்து விட்டதாக நினைப்பு)

“பின்ன உங்கள நம்புனா, தெருவில தான் நிக்கணும்” மாமி பாப்கானைப்போல் பொரிந்தாள்...

“சரி.. சரி உள்ள வா, பேசிக்கலாம்” அவளின் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே போய்விட்டார். மாமிக்கு கோபம் அதிகமாகிவிட்டது. ‘ஸ்கூட்டில பின்னாடி உக்காந்து வந்ததுக்கே இந்த effect ஆ? இருக்கட்டும் பேசிக்கறேன்...’ என்று மனதிற்குள் புகைந்தபடியே உள்ளே போனாள்.


சுப்புணி லாலி பாப் சப்பியபடியே நல்ல பிள்ளையாய் டிவி பார்த்துக்கொண்டிருந்தான், மாமா நேராக பாத்ரும் போய்விட்டார். (பின்ன திட்டிலிருந்து எப்படி தப்பிக்கறதாம்) வெளியில் வந்த போது பேரமைதி! (புயலுக்கு முன்னேவா, பின்னேவா என்று குப்புசாமி குழம்பினார்)

மாமி நேரடியாக விஷயத்திற்கு வந்தாள், “பரிமளா கூட வந்தீங்களா ரெண்டு பேரும்?” (அவ வந்தாளா?) மாமா, சுப்புணியை பார்த்தார்... அவன் கண்டுக்காமல் டிவி பார்த்தான்.. அவன் என்ன சொன்னான் என்று தெரியாததால், “இல்ல, நாங்க வந்து கடைல லிஸ்ட்டுபடி சாமானெல்லாம் வாங்கிட்டு இருந்தோம்... அவ கடைக்கு ஏதோ வாங்க வந்தா... சுப்புணி ஸ்கூட்டில வந்தான், நான் ஸ்கூட்டி பின்னால வந்தேன். அதான் முன்னாடி அவன் வந்துட்டான், நான் பின்னால வந்தேன்” என்று ம நீ ம தலைவரின் அறிக்கை போல அவருக்கே புரியாத வகையில் பதில் சொன்னார்.

மாமி கோபமாய் கத்த துவங்கும் போது, ஆபத் பாந்தவனாய் அச்சு வந்தான், “அக்கா கொஞ்சம் காபி போடறியா, தலைவலி அதிகமா இருக்கு” என்று சொன்னவுடன்... பாசமலர் சாவித்ரியாய், காபி பொடியுடன் கிச்சனுக்கு போனாள் மாமி.

குப்புசாமி மாமா, அச்சுவுக்கு விஜய் சேதுபதி போல கட்டிப் பிடித்து ஒரு முத்தம் கொடுத்தார். “அச்சு தலைவலி பரவாயில்லையா” என்று கேட்டுக்கொண்டே சுப்புணியை ஓரம் கட்டினார். “ஏன்டா அத்தைகிட்ட வத்தி வெச்சியா?” என்றார். சுப்புணி வெடுக்கென்று சொன்னான்... “சும்மா போங்க அத்திம்பேர்... நீங்க ஸ்கூட்டியில் விட்ட மூட்டையை பரிமளா மாமி தான் கொண்டு வந்து கொடுத்தா... அது மட்டுமில்லாம... “மாமாவை ஏன் இப்படி வெய்ட்டெல்லாம் தூக்கச் சொல்லி கஷ்டப்படுத்தறேள்... ஆன்லைன் ல ஆர்டர் போட்டா தானா கொண்டு வந்து கொடுத்துறப்போறான். அவரும், சுப்புணியும் தூக்க முடியாம தூக்கிண்டு வரதை பாத்துட்டு நாந்தான், அவங்களையும் மூட்டையும் ஏத்திண்டு வந்தேன், இந்தாங்கோ”ன்னு சொல்லி கொடுத்துட்டு போனாள்.

இப்போது தெரிந்து விட்டது மாமாவுக்கு, தான் இன்றோடு சுமங்கலியாய் போய் சேர்ந்து விடுவோம் என்று. அமைதியாய் போய் அச்சுவுக்கு பக்கத்தில் படுத்துக்கொண்டு விட்டார். மாமி காபியோடு வந்து “நங்” - மாமா கண்ணை திறக்கவேயில்லை .....


அடுத்த இரண்டு நாள் முழு ஊரடங்கு போல் மரண அமைதி..... மறுநாள் காலையில் மாமி தான் மவுனத்தை கலைத்தாள்... காபி கையில் தரப்பட்டது, (அது சமாதான உடன்படிக்கையின் முதல் படி). “சரி.. சரி.. குழம்பு மிளகாய்ப்பொடிக்கு சாமானெல்லாம் காய வைத்திருக்கேன், மெஷின் ல கொடுத்து நல்ல நைசா அரைச்சி எடுத்திட்டு வாங்க, மசாலா போட்டப்புறம் போட்டுறாதீங்கோ” என்றாள்.


நல்ல பிள்ளையாய் கிளம்பினார். மெஷினில் கூட்டம், சமூக விலகல் கடைபிடித்து எல்லோரும் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்றனர், மாமா குழம்பு பொடி சாமான்களை கொடுக்கும்போது கரண்ட் போய் விட்டது. மெஷின்காரர், ‘அரை மணியில் வந்து விடும் , காத்திருக்கலாம் அல்லது வேறு எங்காவது போயிட்டு வாருங்கள்’ என்று சொன்னார்...

மாமா அங்கேயே இருக்கலாம் என்று முடிவு செய்து, மொபைலில் ரம்மி விளையாட ஆரம்பித்தார். அன்று அவருக்கு நரி முகம், 500 ரூபாய் ஜெயித்து விட்டார், “நீங்க இதெல்லாம் ஆடுவேளா?” பழகிய குரல் முதுகுக்கு பின்னர் கேட்டது, திரும்பினார். பரிமளா மாமியின் ஒன்று விட்ட தங்கை பாக்கியலட்சுமி நின்று கொண்டிருந்தாள்...

“நானும் மாவு அரைக்கத்தான் வந்தேன், அக்கா மஞ்சள் அரைத்து வரச்சொன்னாள்... நீங்க?” என்றாள்... பேசும்முன் மாமா சுற்று முற்றும் ஒரு முறை பார்த்துக்கொண்டார். தெரிந்த முகம் எதுவும் இல்லை... நிம்மதியாய், “குழம்பு பொடி அரைக்க வந்தேன்” என்று மொபைலில் விளையாடிக் கொண்டே பதில் சொன்னார். கரண்ட் வந்து கூட்டம் நகர்ந்தது... மாமா ஜெயித்துக்கொண்டே இருந்தார்... அரைத்து முடித்து வீட்டுக்கு வந்து கொடுத்து விட்டார் மாமியிடம்... நியூஸ் பார்த்துக்கொண்டிருந்த மாமி, அதை அப்படியே வாங்கி, கிச்சனில் வைக்கச் சொல்லி சுப்புணியிடம் கொடுத்தாள்.


அச்சுவும், சுப்புணியும் கிளம்பினார்கள். அச்சு மாமாவிடம் ஒரு நூறு ரூபாய் இருந்தால். கொடுங்கள் என்றான். மாமா இரு நூறு transfer பண்ணினார். அவர்தான் 1000 ரூபாய் ஜெயித்திருக்கிறாரே....


மறுநாள், மாமா காய்கறி வாங்கிக் கொண்டு வீட்டினில் நுழைந்தபோதே.... மாமியின் உச்ச ஸ்தாயி அலறல்.... “எங்க இந்த மனுஷன்... சொல்லி சொல்லி அனுப்பிச்சேன்.... குழம்புப் பொடியில முழுக்க மசாலா வாசனை.... கிரகச்சாரம்.... என்ன மசாலாவோ.... எனக்கு கொமட்டிண்டு வர்றது.... வரட்டும் சொல்றேன்... இவரை.... இன்னிக்கு” என்று கத்தி ஊரைக் கூட்டவும், பரிமளா மாமி உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது. “இந்தாங்கோ மெஷின்ல மாமா நூறு ரூபா கொடுத்துட்டு பாக்கி சில்லறை வாங்க மறந்துட்டாராம், என் தங்கச்சி பாகி தான் இந்த பாக்கிய கொடுத்தா”.. என்று சொல்லி பாக்கியை கொடுத்துக்கொண்டே... “ம் ம் நல்ல மசாலா smell. குருமாவெல்லாம் பண்ணுவேளா பலே பலே” என்று சொல்லிக்கொண்டே போய் விட்டாள்..... “ஓஹோ இப்போ பாக்கியலட்சுமி வேறயா?..... எங்க இந்த மனுஷன்...... வரட்டும். இ ன்னிக்கு இருக்கு கச்சேரி” என டிவி நடிகை போல தனக்குத் தானே உரக்கப் பேசினாள்.

பாவம் மாமா...... வாசல் படியில் கால் வைத்தவர் அமித் ஷாவைப் பார்த்த அத்வானி போல பின்வாங்கி அப்டிக்கா ரோட்டில் சத்தமின்றி நடக்க ஆரம்பித்தார்..........

ரெண்டு நாளா மாமாவை காணோம், யாரவது பார்த்தால் மீனாட்சி மாமிக்கு தகவல் சொல்லுங்களேன் ப்ளீஸ்...!

(பின் குறிப்பு: ரம்மியில் ஜெயித்துக்கொண்டிருந்த சந்தோஷத்தில், மெஷின்காரன், மசாலா அரைச்சிருக்கேன், இதைப் போடலாமா என்று கேட்டதை காதில் வாங்காமலும், அவன் கொடுத்த சில்லறையை கையில் வாங்காமலும் விட்டதை அவரால் நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை.... பாகியையும் தான்!)