உணவு
குலாப் பா(க்) – சத்யா GP

20200401211751157.jpeg

நாம் எத்தனையோ விதமான இனிப்பு வகைகளை கேள்விப்பட்டிருப்போம், சுவைத்திருப்போம். ஆனால், என் வாழ்வில் கேள்விப்படாத இனிப்பொன்றை எட்டு வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டு, ருசித்து அதன் பெயரும், செய்முறையும் கேட்டுப் பெற்ற அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தனியார் வங்கி ஒன்றில் எஸ்எம்ஈ – ஃபண்டிங் பிரிவில் உத்தியோகம். பாரீஸ் கார்னர் பகுதியில் ஸ்டேஷ்னரி பொருட்கள் அதிகமாக விற்கும் தெருவில் என் வாடிக்கையாளர் தம் நிறுவனத்தை நடத்தி வந்தார். வாடிக்கையாளர் என்றால் ஒருவர் அல்ல மூன்று சகோதரர்கள். பல ஸ்டேஷ்னரி பொருட்களின் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ். மூன்று பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள். மூன்று ஃபர்ம்களின் கான்ஸ்டிடியூஷன் சற்று வித்தியாசமாக இருக்கும்.

ஒரு நிறுவனத்திற்கு முதலாமவரும் மூன்றாமவரின் மனைவியும் பார்ட்னர்கள். இன்னொரு நிறுவனத்திற்கு இரண்டாமவரும் முதலாமவரின் மனைவியும் பார்ட்னர்கள். மூன்றாம் நிறுவனத்திற்கு மூன்றாமவரும் இரண்டாமவரின் மனைவியும் பார்ட்னர்கள்.

சகோதரர்களின் பூர்வீகம் கட்ச். (குஜராத்) மெட்ராஸின் மையமான பகுதி ஒன்றில் அவர்கள் வசித்து வந்தார்கள். ஒரு பெரிய பழங்கால அடுக்கு மாடி குடியிருப்பு. மெட்ராஸ் மாநகருக்கு ஃபிளாட்ஸ்கள் அறிமுகமாகும் போது கட்டப்பட்டது. தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள். ஒவ்வொரு ப்ளாக்கிலும் தலா நாலு என்ற விகிதத்தில் 16 ஃபிளாட்கள். 7 ப்ளாக்குகள் என்பதால் மொத்தம் 112 ஃபிளாட்கள். துவக்கத்தில் லிஃப்ட் கிடையாது அக்குறையையும் நாளடைவில் போக்கி விட்டார்கள்.

குடியிருப்புக்குள் மந்திர், குழந்தைகள் விளையாடும் பகுதி, வாக்கிங் செல்ல இடம் என பல செளகரியங்கள் உண்டு. ஒரு ப்ளாக்கின் தரைத்தளத்தில் உள்ள நான்கு வீடுகளையும் வாங்கி ஒன்றாக இணைத்து கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் வீட்டுக்கு ஒரு முறை செல்ல... வீட்டிலிருந்த பெரியவர் டீ சாப்பிட வற்புறுத்த... டீயுடன் சமோஸா மற்றும் ஒரு இனிப்பு பலகாரமும் வந்தது. ருசி அசத்தலாக இருக்க... என்னையும் அறியாமல், குரல் உயர்த்தி “இது என்ன ஸ்வீட், டேஸ்ட் அமோகமா இருக்கு?” என்றேன்.

“இது ‘குலாப் பா(க்)’, எங்க கட்ச் ஃபேமஸ்..”

“இதை எப்படி செய்வீங்க?”

“சக்கரை இல்லாதா கோவாவை நெய்ல வதக்கி, திக்கான பாலை சுண்ட காய்ச்சி அதுல வதக்கின கோவாவை சேர்த்து கிளறி, குல்கந்து கலக்கணும். ஏலப்பொடி, முந்திரி, பிஸ்தா, பாதாம் எல்லாம் நெய்ல வறுத்து தூவிடனும். அப்புறம் ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்துப் போட்டு கலக்கணும். கடைசில ரெண்டு சொட்டு ரோஸ் வாட்டர் சேர்த்து ப்ளேட்ல நெய் தடவி கொட்டி பீஸ் போட்டு...” தேர்ந்த செஃப் போல் பிரஸ்தாபித்தார்.

“நல்ல குல்கந்து எங்க சார் கிடைக்கும்?”

“இங்க எங்கேயும் குல்கந்து சரியா இல்லை”

“நீங்க என்ன செய்யறீங்க”?

“ஆமா செய்யறேன், வீட்லயே குல்கந்து செஞ்சுப்போம்...”

சில நிமிடங்களில் வீட்டு ஆட்களிடம் சொல்லி ஒரு பாட்டிலில் குல்கந்து நிரப்பி என்னிடம் தந்தார்...

“சாப்பிட்டுப் பாருங்க, புரியும்...”

முடிந்தால் இந்த குலாப் பா(க்) இனிப்பை செய்து சுவையுங்கள். மிருதுவாக, அட்டகாசமாக... இது “ குதூகுலாப்பா” தான்!