நொறுக்ஸ்
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கொரோனா... - மாலாஸ்ரீ

20200401165228785.jpg

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் அமெரிக்கா முதலிடம் வகித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க, அனைத்து நாடுகளிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.


இந்நிலையில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் அபேபர்லாங் (38). இவர் தனது மகன் டெவினின் முதல் பிறந்த நாளை, ஊரடங்குக்கு மத்தியில் கடந்த 28-ம் தேதி தனது வீட்டுக்குள்ளேயே கொண்டாடினார். அவர்கள் அனைவரும் கொரோனா ‘பிராண்ட்’ அடையாளங்களுடன் கேக் வெட்டி, அந்த புகைப்படங்களை பேஸ்புக் வலைதளப் பக்கத்தில் போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

பிறந்த நாள் கொண்டாடும் குழந்தை உள்பட குடும்பத்தினர் அனைவரும் பல்வேறு வண்ணங்களில் கொரோனா டி-ஷர்ட் அணிந்திருந்தனர். பிறந்த நாள் கேக்கூட கொரோனா வடிவில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அக்குடும்பத்தினர் கரோனா பீர் அருந்தும் புகைப்படக் காட்சிகளும் சமூகவலைதளத்தில் போடப்பட்டு இருந்ததால் மக்களிடையே பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.


இதுகுறித்து அபேபர்லாங் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ‘எனது மகனின் முதலாமாண்டு பிறந்த நாளை எனது குடும்பத்தினருடன் கொண்டாட திட்டமிட்டேன். அதற்குள் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற அரசு சொல்லியதால், பிரமாண்ட முறையில் பிறந்த நாள் கொண்டாட சாத்தியமில்லை என தோன்றியது. இதைத் தொடர்ந்து, எனக்குள் தோன்றிய ஐடியாபடி கொரோனா பிராண்டுகளில் கேக், டி-ஷர்ட் என்ற அடையாளத்துடன் அனைத்து பொருட்களையும் தயார் செய்து வீட்டுக்குள்ளேயே கொண்டாடினோம்.


நாங்கள் பிறந்தநாள் கொண்டாடுவதை எந்தவொரு தனிமைப்படுத்தலும் தடுக்காது. இது, எங்கள் வாழ்வில் நிச்சயமாக மறக்க முடியாது. எனக்கு குடும்பமே முக்கியம். எங்கள் வீட்டில் நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். அதுதான் மிக முக்கியம். எதிர்காலம் எப்படி இருக்கும் என யாருக்கு தெரியும்? இப்போதைய மகிழ்ச்சிதான் முக்கியம்’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.