ஆப்பிரிக்காவில் நிலவும் கடுமையான வெப்பம், குறைந்து விட்ட மழை பொழிவு, பருவ நிலை மாற்றத்தால் பூச்சியினத்தின் இனப்பெருக்கம் அதிகமாகி விட்டது.
ஆப்பிரிக்கா கண்டத்தில் மழைவளம் குன்றியதால், பயிர்களை நாசம் செய்யும் குறுகிய கொம்பு மஞ்சள் நிறவெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் கோடிக்கணக்கில் நிகழ்ந்து வருவதை வெட்டுகிளிகள் வெடிப்பு என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
“நிகழ்வாண்டில் ஆப்ரிக்கா, கென்யா, எதியோப்பியா மற்றும் சோமாலியாவில் பயிரிடப்பட்டிருக்கும் உணவு பயிர்களை கிட்டதட்ட 25 மில்லியன் மக்கள் உண்ணலாம். ஆனால் வரும் மாதத்தில் வெட்டுக்கிளிகள் கூட்டமாக பறந்து வந்து இந்த உணவுப் பயிர்களை முற்றிலும் சேதமாக்கி கடித்துத் தின்றுவிடும்” என விவசாய வல்லுநர்கள் கணக்கிட்டுள்ளனர். இதனால் ஆப்பிரிக்க நாடுகளில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் என உலக உணவு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்ற ஆண்டில் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யா நாடுகளில் கோடிக்கணக்கில் இனப்பெருக்கம் மூலம் உருவான வெட்டுக்கிளிகள் உகாண்டா, தான்சேனியா, காங்கோ மற்றும் தெற்கு சூடான் நகரங்களில் மேல் மாபெரும் திரளாக பறந்து பயிரிடப்பட்டிருந்த அனைத்து உணவு பயிர்களையும் தின்று கபளீகரம் செய்துவிட்டது.
கோடிக்கணக்கணக்கான வெட்டுக்கிளிகள் ஆப்பிரிக்கா மற்றும் சோமாலியா நாட்டின் மீது படையெடுத்து அப்படியே விளை நிலங்களில் உள்ள உணவு தானிய பயிர்களை தின்று கபளீகரம் செய்கிறது. இளம் வெட்டுக்கிளிகள் பயிர்களை வேகமாக சாப்பிடும் திறனால், அவை வேகமாக வளர்ந்து, இனப்பெருக்கம் செய்கிறது. ஆப்பிரிக்காவின் 23 நாடுகளின் விவசாய விளை நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த அனைத்து பயிர்களையும் அடியோடு வெட்டுக்கிளிகள் கூட்டம் தின்று விட்டது. வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கத்தினை தடுக்க வேளாண் விஞ்ஞானிகள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆப்பிரிக்க நாட்டின் மேல் தற்போது பறக்கும் செயற்கைகோள்கள் வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் செய்யத் தயாராக இருக்கும் ஏரியாக்களின் புகைப்படங்களை எடுத்து அந்த பகுதி முழவதும் வெட்டுக்கிளிகள் அழிப்பு மருந்துகளை விமானம் மூலம் ஸ்ப்ரே செய்கின்றன. அப்படியும் பூச்சி மருந்துக்கு தப்பிப் பிழைக்கும் வெட்டுக்கிளிகள் வேகமாக இனப்பெருக்கம் செய்வதால் தற்போது அவற்றின் இனப்பெருக்கத்தினை அழிக்க ராணுவ உதவி நாடப்பட்டுள்ளது
சென்ற ஆண்டு ஜனவரியில்… ஆப்பிரிக்காவில் இருந்து கூட்டமாக வந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பு ஏமன், சவுதி அரேபியா, தென் மேற்கு ஈரான் வழியாக கூட்டமாக பறந்து வந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவிலும் நுழைந்து விட்டது. ராஜஸ்தான், குஜராத் மாவட்டங்களில் விளைந்திருந்த கடுகு, சீரகம், கோதுமை பயிர்கள் 3.5 லட்சம் ஹொக்டேர் பயிர்களை அவை தின்று தீர்த்துவிட்டது. ராஜஸ்தானில் இருந்து பறந்து சென்ற வெட்டுகிளிகள் கூட்டம், பஞ்சாப், அரியானா மாநில விளைச்சல் நிலங்களில் இருந்த உணவு தானியங்களையும் பதம் பார்த்தது. ராஜஸ்தான் மாநில அரசு, விவசாயிகளுக்கு ரூ30 ஆயிரம் வரை நஷ்ட ஈடு வழங்கியது.
ஒரே நாளில் 4 கோடி வெட்டுக்கிளிகள் கூட்டம் விவசாய நிலங்களில் இருக்கும் உணவு தானிய பயிர்களை சாப்பிடும் அளவு 35 ஆயிரம் மனிதர்கள் சாப்பிடும் உணவிற்கு அல்லது 20 ஒட்டகம் அல்லது ஆறு யானைகள் சாப்பிடுவதற்கு சமம் என்கிறது ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு .
என்னதான் கண்டம் விட்டு கண்டம் பறந்து வரும் வெட்டுகிளிகள் படையெடுப்பினை செயற்கோள்களை வைத்து, தரவுகள் சேகரித்தாலும் வெட்டுக்கிளிகள் கூட்டமாக பறப்பதற்கு தயார் ஆகும் ஆறு வாரத்திற்கு முன்பு தான் அதனை கண்டுபிடித்து பாதிப்புக்குள்ளாக இருக்கும் நாடுகளை எச்சரிக்க முடியும். சென்ற ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் இருநாடுகளூம் கூட்டாக வெட்டுக்கிளி இனப்பெருக்கம் செய்வதை தடுக்கும் விதத்தில் மருந்து தெளிக்க முடிவானது. பாகிஸ்தான் இந்த அழிப்பு மருந்து தெளிப்பினில் சுணக்கம் காட்டியது. இந்தியாவில் நீண்ட பருவமழை காலம் நிகழ்ந்துவிட்டதால் வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கத்தினை அழிக்கும் பணியினை சரிவர தொடர முடியாததால், இந்தியாவில் வெட்டுகிளிகள் படையெடுத்து உணவு பயிர்கள் சேதாரம் ஆனது.
இதனை உலக நாடுகள் எப்படியாவது தடுக்க வேண்டும் என கங்கனம் கட்டி செயல்பட்டு வந்தாலும், வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கத்தினை தடுக்க முடியவில்லை என்கிறது உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு.
வெட்டுக்கிளிகள் கூட்டத்தால் இந்தியாவில் விளைவிக்கப்படும் சேதாரம், கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவிற்கு இருக்கும் என ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரித்துள்ளது.
ஏற்கனவே கொரனா பாதிப்பால் இந்தியாவின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி இருக்கும் நேரத்தில், ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்டு இந்தியாவை நோக்கி வரும் வெட்டுக்கிளிகளின் நாச வேலை வட இந்திய விவசாயிகள் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
Leave a comment
Upload