இந்த வாரம் மாம்பலத்திலிருந்து கொஞ்சம் தள்ளி , கீழ்கட்டளைக்கு போகப்போகிறோம். என் நண்பர் ரொம்ப நாளா வரச்சொல்லிகிட்டே இருந்தார். உணவகத்தின் பெயர் “இட்லி வடா”, அவர் முதல் முறை சொல்லும்போது ‘இட்லி வாடா’ என்று தான் காதில் விழுந்தது. அழகான, அமைப்பான உணவகம்...
இரு நண்பர்கள் சேர்ந்து துவங்கிய உணவகம். வாடிக்கையாளர்களின் விமர்சனங்களை பொறுத்து மாற்றங்களை உடனே செய்கின்றார்கள், அது தான் இவர்களின் வளர்ச்சிக்கு காரணமும் கூட (இதை நான் சொன்ன உடன் என் வீட்டம்மா முகவாய்க்கட்டையை தோளில் இடித்துக் கொண்டே, ம்கூம் நீங்களும் இருக்கீங்களே....)
இட்லி, தோசை, வடை என்று இருந்தாலும், சில விசேஷ உணவு வகைகளும் உண்டு. அது தான் இவர்கள் சிறப்பு. வீச்சு பரோட்டா... மிகவும் மெல்லிதாக, சாப்பிட வசதியாக இருப்பது சிறப்பு, டயட் பிரியர்களுக்காக வெந்தய தோசை (ஜொள்ளு விடற ஆளாயிருந்தா கூடவே வடகறி), வெஜிடபிள் ஊத்தப்பம் (ஆஹா...அருமையான சுவை) பார்க்கவும் அழகாக இருக்கும்.
நார்த் இந்தியன் உணவு வகைகளில் டால் தடுக்கா, மிகவும் அருமையாய் இருக்கும். மலாய் கோப்தா, புலாவ் வகைகள் நாவில் நீர் ஊற வைக்கும், பார்க்கும் போதே.... மற்ற எல்லா ஐட்டங்களும் உண்டு... சரியான விலையில்.
சாப்பிட்டு முடித்ததும், அன்றைய உங்கள் அதிர்ஷ்டத்தை பொறுத்து, அசோகா அல்வா, சர்க்கரைப் பொங்கல், அல்லது பாதுஷா, எப்போதும் உண்டு குலாப் ஜாமூன் (ஐஸ்க்ரீமும் உண்டு... அடடா...) டயட்டா.... பழ சலாட் இருக்கவே இருக்கு!
இதை எல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி... அருமையான சேவை... சரி சார், கீழ்கட்டளைல எங்க இருக்கு... இதோ முழு முகவரி...
சஹானா காம்ப்ளக்ஸ், மேடவாக்கம் மெயின் ரோடு. அப்பறமென்ன வுடுங்க சவாரி!
Leave a comment
Upload