தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை 15 - மனப்பூட்டைத் திறந்த மலர்க் கணைகள் - மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்

20250305083634241.jpg

சில அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் நேரடிக் கேள்விகளுக்கு பதில் வராது. ‘எதற்கு இந்தக் கேள்விகள்?’ என்று புரிந்து கொள்ளாதபடி கேள்விகளைத் தொடுக்க வேண்டும்.

வருடம் 1980; அப்போது தமிழ்நாட்டில் திமுகவும், காங்கிரசும் கூட்டணிக் கட்சிகள். அவர்களுக்கிடையே ஏதோ ஒரு புகைச்சல். சென்னையிலும், புதுச்சேரியிலும் பத்திரிகையாளர்கள் இதுபற்றி நேரடியாக திமுக தலைவர் கருணாநிதியிடம் கேட்டபோது பதில் ஏதும் வரவில்லை.

மறுநாள் காலை 6.30 மணிக்கே சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே இருந்த தமிழ்நாடு ஹோட்டலில் கருணாநிதியைச் சந்தித்தான் அவன். உடன் இருந்தவர் தினகரன் நிருபர் குருமணி. காலை 7.30 மணிக்கு கருணாநிதி ஒரு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டியிருந்ததால் இரண்டு நிருபர்களையும் காலை 6.45 மணிக்கு சந்திந்தார்.

கருணாநிதியின் சில புதிய திட்டங்களைப் பற்றி பேசிவிட்டு, பொது விஷயங்கள், வேறுசில விஷயங்கள் பற்றியும் பேசிவிட்டு, எதற்கு அவன் பேசுகிறான் என்று கருணாநிதி ஊகிக்க முடியாத தருணத்தில் இப்படி பேச்சை மாற்றினான் அவன். இப்படி சென்றது அவர்கள் உரையாடல்:

‘‘ஐயா, பெரியகுளம் இடைத்தேர்தல் வரப்போகுது?’’

‘‘ஆமா வரப்போகுது.’’

‘‘போட்டி உண்டுதானே?’’

‘‘நிச்சயம் உண்டு.’’

‘‘எப்படி சார்? நீங்க வேட்பாளரை நிறுத்துவீங்களா இல்லையா?’’

‘‘ஆமா நிறுத்துவோம்.’’

‘‘யார் போட்டியிட்டாலும், நீங்கள் உங்கள் வேட்பாளரை நிறுத்துவீர்களா?’’

‘‘ஆமாம், அதிலென்ன சந்தேகம்?’’

‘‘காங்கிரஸ் போட்டியிட்டாலும் உங்கள் வேட்பாளரை நிறுத்துவீர்களா?’’

‘‘நிச்சயமாக’’ என்றார் கருணாநிதி.

அவனுக்கு எதிர்பார்த்த பதில் கிடைத்துவிட்டது. அதுவரை மௌனமாக இருந்தவரை வாய் திறக்கச் செய்துவிட்டான். ஒரு சாமர்த்தியமான அரசியல்வாதியின் மௌனம் கலைந்தது, எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத கேள்விகள்.

கூட்டணியில் விரிசல் என்பதை கருணாநிதி உணர்த்தியது அப்போது ஒரு அதிரடிச் செய்தி. சென்னை நிருபர்களும், புதுச்சேரி நிருபர்களும் பெறாத பதிலை அவன் மறுநாளே சாதுர்யமாகப் பேசிப் பெற்றான்.

அவன் தன் செய்தியை ‘‘பெரியகுளம் இடைத்தேர்தலையொட்டி திமுக காங்கிரஸ் கூட்டணி உடைகிறது, காங்கிரசை எதிர்த்து, திமுக போட்டியிடும் என்ற செய்தியை உடனடியாக தந்தியில் அனுப்பினான்.

அந்த நேரத்தில் விருத்தாச்சலத்திலிருந்து சிதம்பரத்திற்கு வந்த தினமணி நிருபர் தண்டபாணி தன் பத்திரிகைக்கு தொலைபேசியில் செய்தி கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட தினமணி ஆசிரியர் குழு செய்தி நிஜம்தானா என்று தண்டபாணியைக் கேட்க அவரோ ஹிண்டு நிருபரும், தினகரன் நிருபரும் அந்தச் செய்தியை கொடுத்து விட்டார்கள் என்று தெரிந்து கொண்ட பிறகு தான் தினமணி ஆசிரியர் குழு அந்த செய்தியை நம்பியது. அப்படிப்பட்ட ஒரு திடீர் செய்தி. என்றார்.

இதே போல் ஒரு கூடுதல் கலெக்டரிடம் சுற்றி வளைத்து கேள்வி கேட்டு, தனக்கு வேண்டிய பதிலைப் பெற்றான் அவன். தென்னாற்காடு மாவட்டத்தில் தனியார் சிமெண்ட் ரேஷன் கார்டுகளுக்கு 6 மாதங்களாக சிமெண்ட் தரப்படவில்லை என்ற தகவல் ஒரு முக்கிய நபரிடமிருந்து கிடைத்தது. இருந்தாலும் அரசாங்கத் தரப்பிடமிருந்து தகவல் பெற விரும்பினான்.

மாவட்ட கூடுதல் கலெக்டர் எம்.ராமு, சிமெண்ட் விநியோகத்திற்கு பொறுப்பு என்று தெரிந்து கொண்ட அவன் அவரைச் சந்தித்தான். இப்படிச் சென்றது அவர்களது உரையாடல்:

அவன்: ஐயா உங்களுக்கு ஊர் திருமழபாடி யாமே? ​

ராமு: உங்களுக்கு ஊர்?

அவன்: உங்கள் ஊருக்கு எதிர்கரையில் உள்ள மகாராஜபுரம்.

அதை கேட்ட ராமுவுக்கு பிறந்த மண் பாசம் வந்துவிட்டது.

அவன்: ‘‘என்ன சார், மாவட்டம் பூராவும் தன்னிறைவுத் திட்டம் என்று கலக்குறீங்களே? அதிக செலவாகும் பெரிய திட்டங்கள் உங்களிடம் இருக்கும் போலிருக்கிறதே?’’

ராமு:‘‘ஆமாம் சார், நிறையவே திட்டங்கள் இருக்கு,’’

அவன்: ‘‘அது சரி, காண்டிராக்டிற்காக கட்சிக்காரர்கள் உங்களை தொந்தரவு பண்ணுவாங்களே?’’ எப்படி சமாளிக்கிறீங்க.

ராமு: ‘‘அதையேன் கேட்கிறீர்கள் சார், ரொம்பவும் தொந்தரவு தான். சங்கடமாகத்தான் இருக்கு.’’

அவன்: இப்போது வரையிலும் எந்த காண்டிராக்டிற்கும் சகாயம் செய்யவில்லை.

அவன்: ‘‘அந்தந்த குவாட்டரில் பணத்தை செலவிட வேண்டுமே, நிதி ஒதிக்கீடு காலாவதி ஆகிவிடுமே, என்ன செய்தீர்கள்?’’

ராமு: ‘‘மொத்த ஒதுக்கீட்டிற்கும் சிமெண்ட் மூட்டைகள் வாங்கி வைத்து விட்டேன்’’.

அவன்: ‘‘நல்ல முன்யோசனை தான் சார்? அது சரி நம் மாவட்டத்திற்கு எவ்வளவு சிமெண்ட் ஒதுக்கீடு? அரங்சாங்கத்திற்கு எவ்வளவு? தனியாருக்கு எவ்வளவு?’’

ராமு தன் பி.ஏ.வை அழைத்து, புள்ளி விபரங்களை தெரிந்து கொண்டு, பச்சை மையில் ஒரு தாளில் குறித்துக் கொண்டார். அந்தத் தகவலில் ஆர்வம் இல்லாதது போல் காட்டிக் கொண்ட அவன் வேறு ஏதேதோ விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தான். விடைபெறும் போது சார் உங்கள் கையெழுத்து நன்றாக இருக்கும் போலிருக்கிறது என்று அந்த காகிதத்தைக் கேட்டு வாங்கி கொண்டான். பிறகு ஏதோதோ விஷயங்களை பேசிய பிறகு விடைபெற்றான்.

நேரே விழுப்புரம் சென்று “சிமெண்ட் ரேசன் கார்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட சிமெண்ட் மூட்டைகளை பயனாளிகளுக்கு தராமல் மாவட்ட நிர்வாகமே எடுத்துக் கொண்டுவிட்டது. கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் கிடைத்த தகவல்” என்று புள்ளி விபரங்களையும் கொடுத்தான். மறுநாள் ஹிண்டுவில் இந்த செய்தி வந்ததும், கலெக்டர் சந்திரலேகா அப்போது இளம் அதிகாரியான கூடுதல் கலெக்டர் எம்.ராமுவை காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சிவிட்டு சொன்னார், ‘‘நீங்கள் புதுசு, அந்த ஹிண்டு நிருபரிடம் ஜாக்கிரதையா இருக்கணும்’’ என்றார். ‘அவரிடம் சிமெண்ட் புள்ளி விபரங்களை ஏன் கொடுத்தீர்கள்?’ என்று கேட்டார்.

ராமு அப்போது சொல்லியிருக்கிறார், ‘‘அம்மா, அவர் என்னென்னமோ பேசினார், பேச்சு வாக்கில சிமெண்ட் பற்றியும் ஏதோ கேட்டார், சொல்லிட்டேன். அவர் அதை எழுதுவார்னு எதிர்பார்க்கவில்லை, அம்மா’’-.

அந்த நிருபர் அப்படிதான் ஏதேதோ பேசி உங்கள் வாயை பிடுங்குவார். இனி ஜாக்கிரதையாய் இருங்கள் என்றார் கலெக்டர். இந்த நிகழ்வுக்குப் பிறகு வெகு காலம் அவனை கண்டாலே விலகிச் சென்றார் ராமு.

ராமு தஞ்சை மாவட்ட கலெக்டரான பிறகு இருவரும் சந்தித்தார்கள். பழைய சங்கடத்தை மறந்துவிட்டு சகஜமாக பேசிக்கொண்டிருந்தார்கள். இரு தரப்பிலும் தொழில் முறை சங்கடங்கள் சகஜம் தான். ஆனால் தொழில்கள் மாறும்போது, தர்ம சங்கடங்களுக்கு இடமில்லாமல் போகிறது.