தொடர்கள்
அரசியல்
விலகுகிறாரா மோடி ??? - விகடகவியார்

20250305063649316.jpeg

பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பலர் இணைந்து சேவை செய்வார்கள். அப்படி சேவை செய்கின்ற பலர் தான் பாஜகவில் முக்கிய பதவிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்துக்கான வாய்ப்பு பெறுபவர்களாக இருப்பார்கள். இப்போது பாரதிய ஜனதாவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பலர் ஆர்எஸ்எஸ் தயாரிப்பு தான். பிரதமர் மோடி கூட ஒரு காலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேர ஊழியராக இருந்து வந்தவர் தான்.

2014இல் பிரதமராக பதவி ஏற்ற பின் மோடி ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு செல்லவில்லை. அதே சமயம் கடந்த 11 ஆண்டுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத்தும் மோடியும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது முறையாக பிரதமராகியுள்ள மோடி, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு சில தினங்களுக்கு முன்பு சென்றார். ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்துக்கு ஒரு பிரதமர் செல்வது இதுதான் முதல் முறை. நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசினார் பிரதமர்.

பிரதமர் மோடியின் நாக்பூர் பயணம் தற்சமயம் சர்ச்சையாகி இருக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பொறுத்தவரை 75 வயது நிறைவடைந்தவர்கள் யாரும் இயக்கத்தின் முக்கிய பதவியில் இருக்கக் கூடாது என்ற ஒரு முடிவை 2009 இல் எடுத்தார்கள். இந்த 75 வயது என்பதை பாஜக கட்சியிலும் ஆர்எஸ்எஸ் கிட்டத்தட்ட செயல் படுத்தியது என்றே சொல்லலாம். 2014 பாராளுமன்றத் தேர்தலின் போது பாஜக மூத்த தலைவர் அத்வானியை பிரதமர் வேட்பாளராக ஆர்எஸ்எஸ் முன்னிறுத்தாததற்கு காரணம் அவர் 75 வயது கடந்தவர் என்பதுதான். இப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 வயது நடந்து கொண்டிருக்கிறது. வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி அவருக்கு 75 வயது நிறைவு ஆகிறது. இதனாலேயே 2024-இல் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட மாட்டார், நிதின் கட்காரி அல்லது உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார்.

இப்போது நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைவர்களை மோடி சந்தித்ததை தொடர்ந்து உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பிரதமர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதை தெரிவிக்கவே மோடி ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அடுத்த பிரதமராக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆவார். குறிப்பாக அவர் மகாராஷ்டிர முதல்வர் பாட்னாவிஸ் பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று சர்ச்சைக்குரிய ஒரு செய்தியை கொளுத்தி போட்டார். இந்த செய்தி பரபரப்பானது.

இதுகுறித்து மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் 2029-இல் மோடியை மீண்டும் பிரதமராக பார்ப்போம். அவரது வாரிசை தேட வேண்டிய அவசியம் இல்லை. அவர் எங்கள் தலைவர் அவர் தொடர்ந்து ஆட்சி செய்வார். நமது கலாச்சாரத்தில் தந்தை இருக்கும்போது வாரிசுரிமை பற்றி பேசுவது பொருத்தமற்றது என்று சொல்லி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பட்னாவிஸ். ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களில் ஒருவனான சுரேஷ் பையாஜி ஜோஷி இந்த சர்ச்சை பற்றிய கேள்விக்கு "எனக்குத் தெரிந்து ராவத் கூறியது போன்ற எந்த தகவலும் இல்லை "என்று மறுத்திருக்கிறார்.

மோடி 75 வயது நிறைவடைந்த பிறகு அதாவது செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பிறகு என்ன நடக்கும் என்று யார் அறிவார் !

நம் நாட்டில் வதந்திகளுக்கு பஞ்சமேயில்லை.