ஆர்.எஸ்.எஸ் - இராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் - 100
இன்றைக்கு பாராளுமன்றத்தில், பாராளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சிகள் பாரதிய ஜனதாவை வசைபாடும் போது அவர்கள் ஆர் எஸ் எஸ்ஸை சேர்த்து தான் விமர்சிக்கிறார்கள் அல்லது வசை பாடுகிறார்கள். ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் எனப்படும். ஆர்எஸ்எஸ் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கம் தன்னைப் பெரிய அளவு விளம்பரப்படுத்திக் கொள்ளாது. விமர்சனங்களுக்கு பதில் சொல்லாது. அவர்கள், அவர்கள் வேலையை கரெக்டாக செய்து விடுவார்கள். இப்போது கூட நூற்றாண்டு என்பது மிகப்பெரிய வரலாற்று சாதனை அதை அவர்கள் பெரிதாக விழாவாக கொண்டாடவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை என்று கடந்து போய் விடுவார்கள்.
மார்ச் 30-ஆம் தேதி பிரதமர் மோடி நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு விஜயம் செய்தார். அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குஜராத் முதல்வராவதற்கு முன்பு பிரதமர் மோடியின் புகலிடம் நாக்பூர் ஆர்எஸ்எஸ் அலுவலகம் தான் அங்குதான் அவர் கற்ற பாடம் தான் இன்று உலகம் முழுவதும் பேசும் பிரதமர் மோடியாக இருக்கிறார். அவரைப் பற்றிக் கூட விமர்சனங்கள் வந்தது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் ஆர்எஸ்எஸ் தலைவர்களை சந்திக்க மறுக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் சொல்கிறபடி நடக்கவில்லை என்ற விமர்சனங்கள் எல்லாம் வந்தது. ஆனால் விமர்சனங்களுக்கு ஆர்எஸ்எஸ் என்றுமே பதில் சொன்னதில்லை. அதேசமயம் ஆர் எஸ் எஸ் தலைவர் பாரதிய ஜனதா என்பது ஒரு குறிப்பிட்ட இருவர் நம்பி இருக்கக் கூடாது என்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை சிக்னலும் தந்திருக்கிறது.
இன்றைக்கு பாஜக ஆளுங்கட்சியாக நடைமுறைப்படுத்தும் எல்லா திட்டங்களும் ஆர் எஸ் எஸ் வழிகாட்டல் தான். அது காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, ராமர் கோயில், பொது சிவில் சட்டம் வக்பு வாரிய சட்ட திருத்தம் எல்லாமே எதிர்க்கட்சியாக இன்னும் சொல்ல போனால் ஜனசங்க கட்சியாக பாரதிய ஜனதா இருந்தபோது பேசியதுதான். ஆர்எஸ்எஸ் எப்போதும் யார் முதுகிலும் குத்தாது. அதன் நடவடிக்கை எப்போதும் வெளிப்படையாக தான் இருக்கும். இவை எல்லாவற்றையும் செய்வோம் என்று சொல்லி தான் செய்தார்கள். அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் என்றுமே வித்தியாசம் இருக்காது. கூட்டணிக் கட்சி நிர்ப்பந்தம் ஆட்சிக்கு ஆபத்து இதெல்லாம் ஆர்எஸ்எஸ்க்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. இதற்காக எல்லாம் அவர்கள் எப்போதும் பணிந்து போக மாட்டார்கள்
ஆர்எஸ்எஸ் உண்மையில் தேசபக்தி உள்ள ஒரு இயக்கம். காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் காந்தியை கொன்ற இயக்கம் என்று விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் அந்த விமர்சனம் மிகவும் காலாவதியானது. அந்தத் தலைமுறையை இப்போது இல்லை. ஆர்எஸ்எஸ் ஐ ஏற்றுக் கொண்டவர்கள் தான் இன்றைக்கு பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்து அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள்.
(ஆர்.எஸ்.எஸ். தோற்றுவித்த டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் நாக்பூரை சேர்ந்தவர்)
ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தொடங்கிய கேசவபலிராம் ஹெட்கோவர் பிறந்த தினம் மார்ச் 30-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவாக அன்றைய தினத்தை நாக்பூரில் எளிமையாக கொண்டாடினார்கள். அந்த நிகழ்ச்சியில் தான் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் இப்போதும் இணைந்து கொண்டிருக்கிறார்கள். ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் பிரச்சாரம் ஒழுக்கத்தை எப்போதும் போதிக்கும். அவர்களுக்கு அரசியல் ஆசை எல்லாம் கிடையாது. இதை ஒரு முறை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஆர்எஸ்எஸ் இயக்கத் தொண்டர்கள் தங்களை விளம்பர வெளிச்சத்திற்கு உட்பட்டு கொள்ள மாட்டார்கள். மேடையில் புகைப்படத்துக்கு போஸ் தர மாட்டார்கள் ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள் பதவி ஆசை எல்லாம் கிடையாது அவர்கள் இலக்கு பாரதிய ஜனதாவை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதுதான். அவர்கள் நினைத்ததை சாதிக்க கூடியவர்கள் கட்சித் தொண்டர்களுக்கு எச்சரிக்கை என்ற முறையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பாராட்டி பேசி இருக்கிறார். ஒருமுறை திமுக தலைவர் கருணாநிதி கூட திராவிட கழகம் போல் ஆர் எஸ் எஸ் இயக்கமும் ஒரு சமுதாய இயக்கம் தான் என்று சொல்லி இருக்கிறார். ஆர்எஸ்எஸ் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பது தான் உண்மை.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து இந்துக்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு கொண்டு வந்ததில் ஆர் எஸ் எஸ் பங்கு மிகப் பெரியது. ஆனாலும் அது நம் கடமை என்று தான் செய்தார்களே தவிர அதை அவர்கள் பெரிதாக கொண்டாடவில்லை அதுதான் ஆர்எஸ்எஸ். அவசர நிலையின் போது ஆர் எஸ் எஸ் இயக்கத்தை இந்திரா அம்மையார் கிட்டத்தட்ட முடக்கி ஆர் எஸ் எஸ் தலைவர்களையும் கைது செய்தார். அதேசமயம் அவசர நிலை நீக்கப்பட்டு மீண்டும் தேர்தல் அறிவித்தபோது ஜனநாயகத்தை நிலைநாட்ட ஆர்எஸ்எஸ் பங்கு மிகவும் முக்கியமானது.
எல்லாவற்றையும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அரசியல் கட்சிகள் இடையே ஆர்எஸ்எஸ் இயக்கம் தேசப் பாதுகாப்பு, எல்லை மேலாண்மை, கிராம வளர்ச்சி என்று தனது பங்களிப்பை தொடர்ந்து தொண்டர்கள் மூலம் செய்து கொண்டிருக்கிறது.
ஆர்எஸ்எஸ் இயக்கம் தங்களுக்கு எதிரி என்று யாரையும் நினைத்தது கிடையாது. இன்று நம்மை எதிரியாக நினைப்பவர்கள் நாளை நம்மோடு சேர்ந்து நம்ம ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு அந்த இயக்கத்தின் செயல்பாடு இருக்கும்.
பாரதிய ஜனதா தலைவர்கள் கூட ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மறைமுகமாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பாஜக தேசிய தலைவர் நட்டா 'தன் சொந்த காலில் நிற்கும் அளவுக்கு பாரதிய ஜனதா முன்னேறி உள்ளது 'என்றார். அதாவது ஆர்எஸ்எஸ் தயவு இல்லாமல் பாஜக ஆட்சி அமைக்கும் என்பதைத் தான் இப்படி சூசகமாக சொல்கிறார் என்ற விமர்சனம் வந்தது .அதனால் தான் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக பணியாற்ற ஆர்எஸ்எஸ் ஆர்வம் காட்டவில்லை. பாராளுமன்றத் தேர்தலில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு தொகுதிகள் குறைந்தது அதற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததற்கு காரணம் ஆர்எஸ்எஸ் ஒத்துழைக்கவில்லை என்பதுதான் என்பது கூட பேசும் பொருளாக இருந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேர ஊழியராக இருந்த பிரதமர் மோடி நட்டாவின் கருத்து பற்றி எதுவும் பேசாமல் அமைதி காத்தார். அதே சமயம் ஆர்எஸ்எஸ் தலைவர்களும் இதற்கு எதிர்வினை ஆற்றவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஆனால், அதன் பிறகு அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது ஆட்சி அமைத்தது. இதற்கு காரணம் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஆற்றிய களப்பணிதான் என்பதும் உண்மை.
ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்திய வளர்ச்சியில் இந்திய ஆட்சி அமைப்பில் ஒரு தவிர்க்க முடியாத சக்தி. இப்போது அதன் பார்வை தென் மாநிலங்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. ஆர்எஸ்எஸ் எப்போதும் அவசரப்படாது நிதானமாக நினைத்ததை சாதிக்கும். அதற்கு சாட்சி அந்த இயக்கத்தின் 100 ஆண்டு வரலாறு.
Leave a comment
Upload