தொடர்கள்
இசை
கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை - ஒரு சிறப்பு நேர்காணல் - கோமதி லண்டன்

20250305081109881.jpeg

சினிமா மற்றும் ஊடகங்கள் பெரிதும் ஆதிக்கம் செலுத்தும் இக்காலக்கட்டத்தில், கர்நாடக இசை கச்சேரிகளும் பரதநாட்டியமும் மக்களிடையே ஆதரவை இழந்து வருகின்றனவோ என்று எண்ணும்போது, கிளீவ்லாந்தில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழா, அந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றி விடுகிறது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் இந்த விழாவை "இசை நடனத் திருவிழா" என்று அழைக்கலாம். சுமார் நூறு கலைஞர்களுக்கும் மேலாக பங்குபெறும் இந்த விழாவில், நாலாயிரத்திற்கும் மேலான ரசிகர்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும், அமெரிக்காவின் பல இடங்களிலிருந்தும் ஆர்வமுடன் கலந்து கொள்வது வியப்பு மட்டுமல்ல மகிழ்ச்சியுமளிக்கிறது.

20250305081438787.jpeg

இப்படிப்பட்ட ஒரு பிரமாண்டமான நிகழ்வை, அமெரிக்காவில் நிகழ்த்தி சாதித்துக் கொண்டிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் வி.வி.சுந்தரம். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் முதுகலை பட்டம் பெற்றதோடு, மிகப் பெரிய தனியார் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வகித்து, அதிலிருந்து ஓய்வு பெற்றவர்.

சென்னையில், இவரது தலைமையில் நடைபெற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் தான் சுந்தரம் அவர்களை நான் முதன் முதலில் சந்தித்தேன். கர்நாடக இசை, நடனக் கலையின் மகத்துவம், மற்றும் அதன் நுணுக்கங்களை, தெளிவாகவும், கேட்போர் ரசிக்கும் விதத்திலும் பேசும் வல்லமை பெற்றவர்.

கடந்த வாரம், தனது எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு இமாலய மலையின் பேஸ் கேம்ப் வரை சென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

20250305081400367.jpeg

பல்வேறு இசைக்கலைஞர்கள் பற்றியும், கலைத்துறை பற்றியும், அமெரிக்காவில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை பற்றியும்..பேச்சு சுழன்றது....

20250305081502233.jpeg

தியாகராஜ ஆராதனை விழா இந்த ஆண்டும் ஏப்ரல் 16 முதல் 27 வரை நடைபெற உள்ளது. இந்த விழாவின் வரலாறு, எவ்வாறு இது தொடங்கப்பட்டது, நீங்கள் எப்பொழுது இதில் இணைந்தீர்கள் ?

முதலில், எனக்கு இந்த வாய்ப்பினை அளித்த விகடகவிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 1970 களில் அமெரிக்காவில் வாழ்ந்த தென்னிந்தியர்கள்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதிலும், கர்நாடக இசையில் நாட்டம் கொண்டவர்கள் அதனிலும் குறைவு. அந்த காலகட்டத்தில், நான் கிளீவ்லாந்தில் வசித்து வந்தேன். ஸ்டாண்டர்ட் ஆயில் கம்பெனி என்னும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். அப்பொழுது ராம்நாடு ராகவன், மிகவும் புகழ்பெற்ற மிருதங்க வித்வான், ராம்நாடு கிருஷ்ணன் அவர்களின் சகோதரர் கிளீவ்லாந்துக்கு வந்திருந்தார். நாங்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது, இங்கே ஒரு தியாகராஜ உற்சவம் ஆரம்பித்தால் நன்றாக இருக்குமே என்று தன்னுடைய கருத்தை வெளியிட்டார். அது ஒரு உந்துதல். எந்த ஒரு நிகழ்விற்கும் முக்கிய உறுப்பினர்கள் இருக்க வேண்டுமல்லவா! நாங்கள் கிளீவ்லாந்து பஜனை குழு என்ற ஒரு அமைப்பை பல ஆண்டுகளாக நடத்தி வந்தோம். வெள்ளிக்கிழமை தோறும், ஒரு வீட்டில் பாடல்கள் பாடி, குறிப்பாக சிறுவர்களை அதில் பங்கு பெற செய்தோம். நமது கலாச்சாரம், பண்பாடு, குறிப்பாக இறை நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக, சிறுவர் சிறுமியரை அதில் ஈடுபடுத்தினோம். அந்த குழந்தைகளுக்கு ராகவன் அவர்கள் கர்நாடக இசை கற்பித்தார். அவர் பஞ்சரத்தின கீர்த்தனைகளை நானே கற்பிக்கிறேன், தியாகராஜ ஆராதனையை நாம் இங்கே இவர்களை கொண்டு துவங்கலாம், என்று கூறி அதற்கு ஒரு விதை தூவினார் . நானும் அந்த பஜனை குழுவில் இருந்ததால், என்னோடு கூட, என் மனைவி கோமதி, கிளீவ்லாந்து பாலு என்பவர், அவரது மனைவி கோமதி மற்றும் டொரோண்டோவை சேர்ந்த வெங்கடராமன் அவரது மனைவி பத்மா நாங்கள் ஆறு பேர் இணைந்து, இந்த விழாவை ஆரம்பிக்கலாம் என்று தீர்மானித்தோம்.

திரு வேங்கடராகவன் அவர்கள் டொரோண்டோவில், எங்களுக்கு முன்பே, ஐந்து வருடங்களாக தியாகராஜ ஆராதனை விழாவை நடத்தி வந்ததால், அவரது அனுபவம் எங்களுக்கு பெரிதும் உதவியது. அவரது துணையுடன், ராகவன் அவர்களின் வழி நடத்துதலில், பஞ்ச ரத்தின கீர்த்தனைகளை விருப்பமானவர்களுக்கு கற்பித்து, 1978ல் முதன் முதலில் ஒரு சிறிய தேவாலயத்தின் அடித்தளத்தில் இந்த விழா துவங்கியது. எழுபது முதல் எழுபத்தைந்து நபர்கள் இதில் அப்பொழுது கலந்து கொண்டார்கள். இதற்கு முழு முதற் காரணம், எங்களுக்குள் இருந்த ஒரு ஆவல். நமது கலாச்சாரம், பண்பாட்டை விட்டு விடகூடாது என்கிற எண்ணம். ராம்நாடு ராகவன் அங்கு இருந்தது எங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருந்தது. அவர் ஊக்கம் கொடுத்து இந்த இசையை அனைவருக்கும் கற்பித்தார். இவ்வாறு தான் இந்த விழா துவங்கப்பட்டது.

20250305081531112.jpeg

இந்த விழாவை துவங்கும் பொழுது,பெரிய அளவில் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று எண்ணி துவங்கினீர்களா?

அப்படி ஒரு எண்ணத்தில் நாங்கள் இதை துவங்கவில்லை. முதல் வருடத்தில் எங்களுடைய மொத்த பட்ஜெட் சுமார் ஐநூறு டாலர். அதற்கு, அமெரிக்காவிலே இருந்த, சரோஜா பாலசுப்ரமணியம் அவர்கள், நல்ல பாடகி, அவர்களை பாடுவதற்கும்,கிளீவ்லாந்தை சேர்ந்த வயலின் வித்வான் கே.ஏ. ராமாராவ் (ஆல் இந்தியா ரேடியோ கலைஞரும் கூட) ஏற்பாடு செய்திருந்தோம். மிருதங்கத்திற்கு ராம்நாடு ராகவன் ஏற்கனவே எங்களோடு இணைந்து இருந்ததால் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கச்சேரி ஏற்பாடு செய்தோம். இரண்டாவது வருடம், இந்தியாவிலிருந்து யாரையாவது அழைத்து வரலாம் என்று எண்ணிய பொழுது, பாலு அவர்கள் டெல்லியில் வசித்து வரும் டி. ஆர். சுப்பிரமணியம் அவர்களை அழைத்து வரலாம் என்று கூறினார். அதே சமயம், என்னுடைய மரியாதைக்குரிய ரங்க ராமானுஜ ஐயங்கார் அவர்களும் இவரை அழைத்து வரலாம் என்று தன்னுடைய கருத்தை தெரிவித்தார். ரங்க ராமானுஜ ஐயங்கார் அவர்கள், "க்ருதி மணி மாலை" என்கிற புத்தகத்தை நான்கு பாகமாக வெளியிட்டவர் . முமூர்த்திகளின் கீர்த்தனைகள் அனைத்தும் அந்த புத்தகத்தில் உள்ளது. எவ்வாறு உ.வே. சாமிநாத அய்யர் அவர்கள் ஓலைச் சுவடிகள் மூலம் சங்க இலக்கியங்கள் சேகரித்தாரோ, அதே போன்று இவரும் வீடு வீடாக சென்று கீர்த்தனைகளை கற்று புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தகைய பண்டிதர், டி.ஆர்.எஸ் பற்றி கூறும் பொழுது, அவர்கள் வளர்ந்து வரும் நல்ல கலைஞர் என்று கூறவே, அவரை அழைத்து வர ஏற்பாடு செய்தோம். டி.ஆர்.எஸ் அவர்கள் தான் வரும் பொழுது, வயலின் மேதை திரு.கல்யாணி வரதராஜன் அவர்களையும் அழைத்து வருவதாக கூறவே, இவர்களையும் மிருதங்கத்திற்கு ராம்நாடு ராகவன் அவர்களையும் கொண்டு கச்சேரி நடத்தினோம். அதற்கடுத்த வருடம், நெடுனுரி கிருஷ்ணமூர்த்தி என வருடா வருடம் திட்டமிட்டு விழா நடத்தி வந்தோம். பெருமளவில் நடத்த வேண்டும் என்கிற எண்ணம் அப்பொழுது இல்லை.

20250305081555377.jpeg

மறக்கமுடியாத, தங்கள் மனதிற்கு நெகிழ்ச்சி அளித்த தருணங்கள் ?

ஒன்று, இரண்டு அல்ல எத்தனையோ நெகிழ்வான தருணங்கள் உள்ளன. எழுபது நபர்களை கொண்டு துவங்கிய இந்த விழா, இன்று பஞ்சரத்ன கீர்த்தனை பாடும் பொழுது மேடையில் ஐநூறு பாடகர்களும், அரங்கில் மொத்தம் ஐயாயிரம் ரசிகர்களும் பங்குபெறும் விழாவாக உயர்ந்துள்ளதை பார்க்கும் பொழுது மகிழ்வளிக்கிறது.கிளீவ்லாந்தில் எந்த ஒரு அரங்கமும் இவ்வளவு நபர்களை கொள்ளும் அளவிற்கு இல்லை. எனவே நாங்கள், கூடைப்பந்து மைதானத்தில் அரங்கம் அமைத்து இந்த விழாவை நடத்தி வருகின்றோம். இது நாங்கள் எதிர்பாராத ஒன்று. இந்த விழா இவ்வளவு தூரம் வளர்ந்ததிற்கு முக்கிய காரணம், அமெரிக்காவில் வாழும் குழந்தைகளுக்கு இந்த சங்கீதத்தில் ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்த வேண்டும், அதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்கிற கொள்கையை கொண்டிருந்தது என்று கூறலாம். இரண்டாவது முக்கிய காரணம், நல்ல தேர்ந்த கலைஞர்களை அழைத்து வந்து பங்கு பெற வைக்க வேண்டும் என்கிற எண்ணம். புகழ்பெற்ற பாடகர்களை கூட்டி வரலாம், முக்கியமாக ஆழ்ந்த சிறந்த ஞானமுள்ள கலைஞர்களை அழைத்து வந்து, இதுவும் சிறந்த பாடல், இதையும் ரசியுங்கள் என்று கூறும் விதமாக, பல தனித்துவமான நிகழ்ச்சிகளை செய்து காட்டினோம். எடுத்துக்காட்டாக, மாண்டலின் உ.ஸ்ரீனிவாஸ், புல்லாங்குழல் மேதை என்.ரமணி அவர்களும் இணைந்து சாகீர் உசைன் அவர்களோடு ஒரு கச்சேரி கிளீவ்லாந்தில் மட்டுமே நிகழ்ந்த ஒரு அரிதான நிகழ்வு. வேறு எங்கும் இது நிகழவில்லை. சாகீர் உசைன் அவர்கள் புகழின் உச்சத்தில் இருந்த போதிலும், இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டபொழுது, உடனே நான் வருகிறேன் என அவர் ஒப்புக்கொண்டது இன்றும் மறக்க முடியாத சம்பவம். அந்த விழாவில் அரங்கம் முழுவதும் மக்கள் நிரம்பி வழிந்தது. பாரத நாட்டியத்தில், ஒரு நடன நாடகம் நிகழ்த்தலாம் என்று எண்ணி, புகழ்பெற்ற லால்குடி ஜெயராமன், மற்றும் கிளீவ்லாந்தை சேர்ந்த உமா பாலகணேசன் அவர்கள் இணைந்து, "ஜெய ஜெய தேவி" என்ற தலைப்பில் நாட்டிய நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார்கள். பாரத நாட்டிய புகழ் ராதா அவர்கள் இதற்கு நாட்டிய வடிவம் கொடுத்து உதவினார. மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இந்த தயாரிப்பு, அமெரிக்கா முழுவதும் சுமார் இருபத்தைந்து மேடைகளில் அரங்கேற்றப்பட்டது. முப்பது வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, முப்பது மேதைகளை கொண்டு, தொலைவில் இருந்தாலும் குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் "Sustaining Sampradhaaya" என்னும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். நெடுனுரி கிருஷ்ணமூர்த்தி, அவரது குரு ஸ்ரீபாத பினாகபாணிகாரு என அனைவரும் இதில் பங்குகொண்டனர்.

இதே போன்று பிருந்தாம்மா அவர்களின் சகோதரி ராதா அவர்களை அழைத்தபொழுது, "என்னை ஏன் அழைக்கிறீர்கள், எனக்கு சென்னையில் கச்சேரியே கிடையாது. அப்படியே வந்தாலும் மிகச்சிலரே வந்து ரசிக்கிறார்கள், அங்கு நான் வர வேண்டுமா" என வினவினார். வரவேண்டும் என்ற வற்புறுத்தலின் பேரில் வந்த அவரது கச்சேரிக்கு அரங்கம் நிறைந்த கூட்டம். பல முறை ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி, அவரை பாராட்டி ஆதரவும் அளித்தனர். இதை கண்டு, ராதா அவர்கள் மனமுருகி வியப்பிலாழ்ந்தார். அதே போன்று வீணை மேதை கல்பாக்கம் க்ரிஷ்ணமுர்த்தி, குழிக்கரை விஸ்வலிங்கம் பிள்ளை அவர்களையும் அமெரிக்காவிற்கு வரவழைத்து மரியாதை செலுத்தினோம்.

இவை அனைத்தையும் தாண்டி என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான நிகழ்வு என்றால் பண்டிட் பிரிஜு மகாராஜ் அவர்களின் ஆதரவோடு மஹாபாரதக் கதையை ஐந்து பாகங்களாக அரங்கேற்றி காட்டிய நிகழ்வு என்று கூறலாம். ஐந்து நடன மணிகளின் துணையோடு,ஒவ்வொரு பாகமும் மூன்று மணி நேரம் என்று நடந்த அந்த நாட்டிய நாடகம் அனைவரின் ஆதரவையும் பெற்றது. அப்பொழுது பயிற்சியின் பொழுது, மிருதங்கம் வாசித்தவர் ஒரு சிறு இடைவெளி எடுத்து இதோ வந்துவிடுகிறேன் என்று சென்றபொழுது, பிரிஜு மகாராஜ் பயிற்சி நின்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்தார். அந்த பயிற்சியில் பங்கு கொண்ட ஜனனி சேதுராமன், என்னிடம் வந்து, "என் வாழ்நாளில் பிரிஜு மகாராஜ் மிருதங்கம் வாசிக்க நான் நடனம் ஆடுவேன் என்று நான் எண்ணியிருப்பேனா" என்று பூரித்து கூறினார். அருணா சாய்ராம் அவர்களிடம் ஒருமுறை பதம் நீங்கள் பாடுங்கள், இந்த சிறுமியர் நடனமாடட்டும் என்று கேட்ட பொழுது உடனே இசைந்து பாடினார். இவை அனைத்துமே கலைஞர்கள் எங்களிடம் கொண்ட அன்பையே வெளிப்படுத்துகிறது. திருவாரூர்.வைத்யநாதன் ஒரு வருடம், இந்த முறை கிளீவ்லண்ட் விழாவிற்கு நூறு கலைஞர்களின் விமான சீட்டிற்கு, தன்னுடைய மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த பணத்தை கொடுக்க முன்வந்தார். எங்களுக்கு எப்பொழுதுமே பணவீக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். ராதா அவர்கள்,வி.வி.எஸ். முராரி, ஷஷிகிரண் என அனைத்து கலைஞர்களும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். இதற்கு நான் என்ன பாக்கியம் செய்திருக்கிறேன் என்று எப்பொழுதும் நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

20250305081627475.jpeg

இந்த விழாவிற்கு இப்பொழுது பண உதவி அரசாங்கத்திடமிருந்து கிடைக்கிறதா?

கிடையவே கிடையாது. கடந்து ஆண்டு விழாவின் பொழுது நான் கூறியது "எங்களுக்கு நான்கு முக்கிய நபர்களின் ஆதரவு இருக்கிறது. முதலாவது, அந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் கலைஞர்கள், அதே போன்று பங்கு பெரும் சிறுவர் சிறுமியர், மூன்றாவது ரசிகர்கள் மற்றும் நிகழ்ச்சிக்கு நிதி வழங்கியவர்கள்." இதில் கலைஞர்கள் தங்களிடம் பயின்ற மாணாக்கர்களின் மூலமும் ஆதரவு அளித்து வருகின்றனர். இப்பொழுதும் எங்களுடைய பட்ஜெட், பன்னிரண்டு நாட்களுக்கு ஐந்நூறு முதல் அறுநூறு ஆயிரம் டாலர்ஸ். ஒவ்வொரு வருடமும் நன்கொடையின் மூலமே இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும் இல்லை. இங்கே இருக்கும் கொயோஹா கமிட்டியிடமிருந்து சுமார் பத்தாயிரம் டாலர் கிடைக்கும். அவ்வளவே! இந்த விழாவிற்கு அனுமதி இலவசம். உணவும் பிட்ட்ஸ்புர்க் கோவிலை சார்ந்த கணேச அய்யர் அவர்களின் துணையோடு உணவும் வழங்கப்படுகிறது.

பல அரிய பேசப்படாத கலைஞர்களை நீங்கள் எவ்வாறு அடையாளம் காணுகிறீர்கள் ?

கலைஞர்கள் பலரிடம் பேசும் பொழுது அவர்கள் இடையிடையே "என்னதான் இருந்தாலும் குழிக்கரை விஸ்வலிங்கம் மாதிரி வருமா" என்று இப்படி பலரை பற்றி கூறுவார்கள். குழிக்கரை விஸ்வலிங்கம் பற்றிய ஒரு சுவாரசியமான நிகழ்வை உங்களோடு பகிர விரும்புகின்றேன். ஒரு முறை நானும், என்னுடைய மனைவியும் மயிலாப்பூரில் இவரது கச்சேரியை கேட்டு பிரமித்தோம். இவரை நாம் நிச்சயம் அமெரிக்காவிற்கு அழைத்து சென்று பாடவைக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். முதல் முறை இவருக்கு விசா விண்ணப்பித்த பொழுது, அமெரிக்க தூதரகம் இவரிடம், நீங்கள் ஏதாவது விருது வாங்கியிருக்கிறீர்களா என்றும், வெளிநாட்டுக்கு சென்றதுண்டா என்றும் கேட்டு, இல்லையென்றதும் விசா தர மறுத்துவிட்டனர். அடுத்த வருடம்,மீண்டும் விண்ணப்பம் விண்ணப்பித்து, நாங்கள் இவருக்கு மரியாதை செய்ய விருப்பதை தெரிவித்தோம், பண்டிட் ரவிசங்கருக்கு நிகரான கலைஞர் என்றும் எழுதி இருந்தோம். அந்த வருடம் அவருக்கு விசா அனுமதிக்கப்பட்டு, விழா சிறப்புற நிகழ்ந்தது. முக்கியமாக செவிவழி செய்தியாகவோ, நான் மிகவும் மதிக்கும் கலைஞர்கள், சிலரை பற்றி கூறும் பொழுது அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

பல வருடங்களாக நிகழ்ந்து வரும் இந்த விழா, அன்றும் இன்றும் எப்படி... ஒப்பீடு...??

இது பற்றி ஒன்றை நான் கூற விழைகிறேன். அன்று பங்கு பெற வரும் சிறுமியர் அரங்கத்திற்கு வரும்பொழுது மேற்கத்திய உடை அணிந்து வந்து, அரங்கத்தில் தாவணி, புடவை என நமது கலாச்சார உடையை மாற்றி மேடையில் பாடிவிட்டு பின்பு மறுபடியும் மேற்கத்திய உடைக்கு மாறி வெளியே செல்வார்கள்.இன்று இது மாறியிருக்கிறது. டொரோண்டோவில் ஒரு விழாவிற்கு சென்ற பொழுது, பாவாடை தாவணியில் ஒரு சிறுமியை கண்டேன். அவளும் விழாவிற்கு தான் வருகிறாள் என்று எண்ணி, விழா எங்கு நடக்கிறது என்று வினவினேன். தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன்னுடைய வகுப்பிற்கு செல்வதாகவும் அவள் பதிலளித்தாள். "Ethnic Pride" என்று கூறுவோமே, இது என்னுடையது என்று கூறும் இந்த தன்னம்பிக்கை வளர்ந்திருப்பதை கண்டு பூரிப்படைகிறேன். இதைத் தவிர, கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தைகள் இந்த விழாவில் பங்கு பெறுகிறார்கள். இவ்வளவு சிறுவர் சிறுமியர் பாட்டு, நடனம் கற்கிறார்கள் என்பது மிகப் பெரிய மாற்றம். "அடுத்த எம்.எஸ், செம்மங்குடி, பாலமுரளி, நடனத்திற்கு பாலா சரஸ்வதி, கமலாவோ இந்தியாவிலிருந்து வரப்போவதாக நான் கருதவில்லை, அமெரிக்காவிலிருந்து தான் வரப்போகிறார்கள் " என்ற எனது கூற்றை மிகைப்படுத்துவதாக இருந்தாலும் அதுவே உண்மை.

இந்த விழாவின் சிறப்பம்சமாக எதை குறிப்பிடுவார்கள் ?

இதில் பங்கு பெரும் குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் "Singing With Stars" என்னும் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பித்தோம். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் பாலமுரளி கிருஷ்ணா, அருணா சாய்ராம், ஷஷிகிரண் என பல புகழ்பெற்ற கலைஞர்களோடு சேர்ந்து ஒரே மேடையில் பாடும் வாய்ப்பை பெறுகின்றனர். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்வு. குழந்தைகளும், தானும் அந்த மேடையில் அமர்ந்து பாடவேண்டும் என்று எண்ணி ஊக்கத்துடன் செயல்படுகிறார்கள் .

இன்று கலைத்துறையில் வர வேண்டும் என்று எண்ணும் இளைய தலைமுறையினருக்கு தங்களின் அறிவுரை ?

இந்த துறையில் மிகவும் புகழ் பெற்று விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில், மக்களை கவரும் விதத்தில் எவ்வாறு பாடலாம் என்று எண்ணி, அந்த வழியில் செல்லலாம். இதில் எந்த தவறும் இல்லை. மற்றுமொரு பாதை, இந்த சங்கீதத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது,இவ்வாறு தான் பாடப்போகிறேன், நடனமாடப் போகிறேன், நீங்கள் இதை ரசித்தால் எனக்கு மகிழ்ச்சி என்ற எண்ணத்தோடு செயல்படுவது. நான் பார்த்த வரையில் இந்த காலகட்டத்தில் இந்த துறையை எடுத்துக்கொண்டால் வாழ்க்கை நடத்துவதற்கான வருமானம் இல்லை என்கிற நிலை இல்லை. இந்த நுண்கலையை நம்பி இறங்கலாமா என்றால், உங்களிடம் உங்களுக்கு நம்பிக்கை வேண்டும், உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை திடமாக தீர்மானிக்க வேண்டும், உடனே இதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று எண்ணாமல் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

நேர்காணலின் முடிவில், தனது இமாலய பயணத்தின் புகைப்படங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.

சென்ற வருடம் நடந்த ஆராதனையின் வீடியோ இங்கே.... காண கேட்க கண் கொள்ளா காட்சி...... அற்புதம்.