மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகவும், தன்னுடைய இறை சக்தியை காண்பிக்காமல் குழந்தையாகப் பிறந்து சாதாரண மனிதராக, வாழ்ந்து காட்டியது ஶ்ரீராமாவதாரம். சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார். இந்த ஆண்டு பங்குனி 23ஆம் தேதியும், ஏப்ரல் 6ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று ஶ்ரீராம நவமி கொண்டாடப்படுகிறது.
இந்தியா முழுவதும் ஸ்ரீராம நவமி மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த அவதாரத்தில், ராமபிரான், குருவிற்கு நல்ல மாணவராக, தாய்–தந்தையருக்கு நல்ல மகனாக, உடன் பிறந்தவர்களுக்கு நல்ல சகோதரனாக, மனைவிக்கு நல்ல கணவனாக, மக்களுக்கு நல்ல மன்னனாக, நண்பர்களுக்கு உற்ற தோழனாக, பகைவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்திருக்கிறார்.
ஶ்ரீராம நவமி அன்று விரதம் இருந்து ராம நாமம் உச்சரித்தால் ராமரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஸ்ரீராம நாமம் மூன்று வேதங்களைச் சொன்ன பலனையும், பாவங்களைப் போக்கக் கூடிய உயர்ந்த மந்திரமாகவும் போற்றப்படுகிறது.
ஸ்ரீராம மகிமை:
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவ பெருமானே ராமரைப் புகழ் பாடும் ஒரு ஸ்லோகம் வருகிறது. இந்த ஸ்லோகத்தை மட்டும் படித்தால் சஹஸ்ரநாமம் சொன்ன முழு பலனும் உண்டு.
“ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே”
என்பதே அந்த ஸ்லோகம்.
“பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது ராம நாமம். அனைத்து நல்லவைகளின் இருப்பிடமும், இக்கலியுகத்தின் தோஷங்களைப் போக்கக் கூடியதும், மிகத் தூய்மையானதும், மோட்ச மார்க்கத்தில் சாதகர்களின் வழித்துணையாகவும், சான்றோர்களின் உயிர் நாடியாகவும் விளங்குவது “ராம” என்னும் தெய்வீக நாமம் ஆகும். இவ்வாறு முனிவர்கள் சொல்லுகிறார்கள்”
எனச் சிவபெருமான் பார்வதி தேவியிடம் ராம நாமத்தின் மகிமையை எடுத்துரைப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது.
மகான் போதேந்திர சுவாமிகள் இரண்டு லட்சம் சுலோகங்கள் அடங்கிய பதினாறு கிரந்தங்களை எழுதியுள்ளார். அக்கிரந்தங்கள் முழுக்க முழுக்க ராமரின் மகிமையைத்தான் சொல்கின்றன. சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் தெலுங்கில் பல கீர்த்தனங்கள் எழுதி இசை உலகுக்குப் பெருமை சேர்த்தவர். இராமனுடைய கதைச் சம்பவங்களை வைத்தே பல பாடல்கள் புனைந்துள்ளார். இராமனையும், ராம நாமத்தையும் சிறப்பித்துப் பல பாடல்கள் தானே ரசித்து, பாடி, ஆராதித்திருக்கிறார். அவர் தன்னுடைய கீர்த்தனையில் ‘ராம என்பது மகாமந்திரம். அந்த மந்திரம், சைவாகமத்திற்கும், வைஷ்ணவாகமத்திற்கும் உரியது. இரண்டும் கலந்த சேர்க்கைதான் ராம மந்திரம்’ என்று விளக்கியிருக்கிறார். அவர் ராம நாமத்தை தொண்ணூற்று ஆறு கோடி வரை ஜபம் செய்தவராம். இராமபிரானே இவருக்கு நேரடியாகத் தரிசனம் கொடுத்திருக்கிறார்.
ஶ்ரீராம நவமி விழா:
இந்தியா முழுவதும் ஸ்ரீராமருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். தெய்வமாக இருந்தாலும், பூமியில் மனித பிறப்பெடுத்து இறுதி வரை நீதி நெறி வழுவாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை எய்துகிறார்.
அன்றைய தினத்தில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பத்ராச்சலம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறும். இந்த இடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள். மேலும் இராமர், சீதா, லட்சுமணன் மற்றும் ஹனுமான் ஆகியோரின் ரதயாத்திரைகள், தேர் ஊர்வலங்கள் பல்வேறு இடங்களில் நடைபெறும்.
தென்னக அயோத்தி என்று போற்றப்படும் கும்பகோணத்தில் உள்ள ராமஸ்வாமி திருக்கோவிலில் ராமர், சீதாதேவியுடன் பட்டாபிஷேக திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இங்கு ஸ்ரீராம நவமி வெகு சிறப்பாக நடைபெறும்.
நவமியில் அவதரித்த இராமர்:
அஷ்டமி, நவமி திதிகளில் மக்கள் நற்காரியத்தை செய்வதைத் தவிர்த்து விடுவார்கள். இதனால் வேதனையுற்ற அஷ்டமி, நவமி திதிகள், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டன. நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம்? எங்களை ஏன் அனைவரும் கெட்ட திதிகளாக நினைத்து ஒதுக்குகின்றனர் என்று கேட்டனர். அதற்கு மகாவிஷ்ணு, நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். மக்கள் உங்களையும் போற்றி துதிக்கும் நாள் வரும் என்று உறுதி அளித்தார். அதன்படியே நவமி திதியில் ராமரும், அஷ்டமி திதியில் கிருஷ்ணரும் பிறந்து சிறப்புச் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
ஸ்ரீராம நவமி விரத பூஜை:
ஸ்ரீராம நவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டைத் தூய்மைப்படுத்தி பூஜை அறையில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்து, அதற்குச் சந்தனம், குங்குமம் இட்டு, துளசிமாலை அணிவித்து ஸ்ரீராம நாமத்தைச் சொல்லி அர்ச்சனை செய்த பிறகு வடை, பருப்பு, பானகம், நீர்-மோர், பாயசம், ஆகியவற்றை நைவேத்யம் செய்து, பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு அவற்றைத் தர வேண்டும். (பானகம் , நீர்மோர் போன்றவை ஸ்ரீ ராமர் கானகத்தில் இருந்த போதும் தாகத்திற்கு நீர்மோரும் பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவையிரண்டும் ஸ்ரீராம பிரானுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.) அன்றைய தினம் பால காண்டம், சுந்தர காண்டம் படித்தால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
ஸ்ரீராமரோ பாலம் கட்டி இலங்கை சென்றார் ஆனால் ராம நாமம் சொன்ன, அனுமனோ விண்ணில் தாவி இலங்கையைக் கடந்தார். ராம நாமத்துக்கு அத்தனை மதிப்பு என்கிறது நம் புராணங்கள்.
ஸ்ரீராம நவமி விரதம் இருக்கும் போது ”ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா” என்று 108 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு.
“ரா” என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்கள் எல்லாம் வெளியேறிவிடுகின்றன என்றும்,
“ம” என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போது அந்தப் பாவங்கள் மீண்டும் வராமல் தடுக்கப் படுவதாகவும் ஐதீகம்.
அன்றைய தினம் அருகில் உள்ள ராமர் கோயில் அல்லது பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபடலாம். அங்கு வருபவர்களுக்கு நீர் மோர் தானமாகக் கொடுத்து, அவர்களின் தாகத்தைத் தணிக்கலாம். குடை, விசிறி போன்றவற்றையும் வாங்கி தானமாகக் கொடுக்கலாம்.
ஸ்ரீராம நவமி பூஜையின் பலன்கள்:
ஸ்ரீராம நவமி பூஜை செய்வதால் வாழ்க்கையில் நம்முடைய பயம் நீங்கி துணிச்சல் பிறக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்களும் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும் மேலும் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். குடும்பத்தில் வறுமையும், பிணியும் அகலும்.
ஸ்ரீராம நவமி அன்று ராம நாமத்தைச் சொல்லி ஸ்ரீராமனின் அருளைப் பெறுவோம்.
“ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா!!”
Leave a comment
Upload