தொடர்கள்
தொடர்கள்
பத்திரிகை ஆசிரியர் சுப்புசாமி...! 4-புதுவை ரா. ரஜனி ஓவியங்கள்: மணி ஸ்ரீகாந்தன்

2025030508445173.jpeg


"ஓ... நீங்களா? நான் ஏதோ ஆம்புலன்ஸ்தான் கிராஸ் ஆகிறதென்று நினைத்து விட்டேன். ப்ளீஸ் கம் இன்...!"

அந்தப் பிருமாண்ட கண்டெய்னர் வண்டியிலிருந்து இறங்கிய டிப் டாப் டை கட்டிய இளைஞன், பாட்டியைப் பார்த்து ஓங்கி ஒரு சல்யூட் வைத்தான்.

சுப்புசாமிக்கு பகபகவென்று வயிறு எரிந்தது!

கிழவிக்குச் செல்லுமிடமும் சிறப்பு, செல்லாமல் வீட்டில் இருந்தாலும் சிறப்பு! பக்கத்தில் அவளுடைய மகா புருஷன் நான் இருக்கிறேன். சல்யூட்கூட வேண்டாம்...ஒரு குட்டி வணக்கம் வைத்தல்கூடவா இந்த டை காரனுக்குத் தெரியாது?

"நான் சூப்பர்வைசர் சுந்தர் லால். மும்பய் ஹெட் ஆபீசிலிருந்து வரேன். இந்தப் பொருட்களை பத்திரமாக சேர்ப்பித்துவிட்டு வரச் சொன்னார்கள். எங்கே இறக்க வேண்டும் மேடம்?" என்றான் பவ்வியமாக. பாட்டி கையில் ஒரு செக் லிஸ்டையும் கொடுத்தான்.

பாட்டி சப்தமாக வாசித்தாள்.

"அந்தமான் படாக் மர டேபிள் ஒன்னு, ஒரு புத்தக அலமாரி, மூன்று விசிடர் நாற்காலிகள், ஒரு ஹை டிசைன் லெதர் குஷன் ரிவால்விங் நாற்காலி, பர்மா தேக்கு பென் ஸ்டாண்ட், இரண்டு சோபா செட்டுகள்... ஓகே அப்படி அந்த ரூமில் இறக்கி வெச்சுடுங்கோ...!"

"ஆமா நானும் பாத்துகிட்டுதான் இருக்கேன். ரொம்ப ஓவரா, இல்லையில்லை படா படா ஓவரா போய்கிட்டுதான் இருக்கே. அவனவன் ஒருவேளை நாஸ்டாவுக்கு ஜிங்கி அடிக்கிறப்போ, பல்லுபோன வயசுல உனக்கு இவ்வளவு ஆடம்பரப் பொருட்கள் கேட்குதா? எவன் வீட்டு காசு...?" என்று அடக்கமாட்டாமல் பொறிந்து தள்ளினார் தாத்தா.

"பார்த்து...பார்த்துப்பா...! வளைவில் ஸ்கிராச் விழுந்திடப் போகுது. பார்த்து மெல்லமா வையுங்க...!" என்று சூப்பர்வைசருக்கும் தொழிலாளர்களுக்கும் வழிகாட்டிக் கொண்டிருந்தாள் பாட்டி. தாத்தா பொருமியதை மதிக்கவே இல்லை.

"இங்க ஒருத்தன் நாயா கத்திக்கிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு உன் வேலையைப் பார்த்துகிட்டு இருக்கே. எனக்கும் நாலு சனங்க என் நாதியைக் கேட்கிறதுக்கு உண்டு. ஞாபகத்துல வச்சுக்கோ...!"

"பென் ஸ்டாண்டை இங்கே வையுங்க...!" - பாட்டியின் கட்டளைகளுக்கு ஏற்ப இயங்கிக் கொண்டிருந்த டைக்கார சூப்பர்வைசர் அடிக்கடி தாத்தாவை ஒரு மாதிரி பார்த்தான். பின்னர் கேட்டான்:

"மேடம், இந்த ஆளு ஏதாவது பிராப்ளம் பண்ணுதா? ஏதாவது உதவி வேண்டுமா?"

"அவர் அப்படித்தான் கத்திக்கிட்டு இருப்பார். நீங்கள் புறப்படலாம். தேங்க் யூ ஆல்...!" என்று அவர்களை அனுப்பினாள் பாட்டி.

சுப்புசாமியின் உள்ளிருந்த முண்டாசுக்கவி கோபமாக வெளிவந்தான்! வந்தவன் நொந்தே போனான்.

பாரதி: தாத்தனே, ஏனிந்த பரிதாப அ.தி.மு.க நிலை...?

சாமி: அங்கே அம்மா கட்டிக் காத்தாள். இங்கே இந்த அம்மா என்னைக் குமட்டில் குத்துகிறாள்...!

பாரதி: ஆணுக்கோர் அழகு மீசை வைத்தல், மழித்தல் அல்ல...!

சாமி: வைத்துக்கொண்டா வஞ்சனை?
ஆசை கொண்டு மீசை வைத்தல் எம் மனையில் அனுமதி கிடையா...!

பாரதி: ரவுத்திரம் பழகு...!

சாமி: இங்கு பெண்ணுக்கு மட்டுமே நீதி...நிதி அவள் வசமடா...!

பாரதி: உம்மை முற்றும் அறிந்த கிழவர் என்று யாம் நினைத்தோம். கிழவியிடம் பயங்கொள்ளும் குழவி நீர், ஐயகோ...! அறிவு பயக்க நல்ல தோழன் இல்லையோ...?

சாமி: யான் அறிந்தது கெட்ட தோழன் மட்டுமே. அவனது திருநாமம் குண்டுராஜா! எமகாதகப் பயல். ஒரு லட்சம் லவட்டிட்டான்...!

பாரதி: இந்தக் கிழவனாரைக் காக்க வேணும். ஆணுக்கோர் நீதி எப்போதும் வேணும், காளி தேவீ...!

சுப்புசாமியின் மூக்கைத் தடவி பாரதி ஆசீர்வதித்து மறைந்தான்.

*****

"உங்களைத்தானே...!" என்றாள் கோமு.

"என்ன வேணும் உனக்கு?" என்றார் தாத்தா கடுப்பாக.

"நமக்குள்ளே என்ன விரிசல்? இஸ் நாட் தி குட் ஆபர்சூடினி ஐ கெட் ஆல்சோ யுவர்ஸ்...? என் புதிய தலைமைக்கு உங்க ஆசீர்வாதம் தேவை. நாளை வெப் இன் ஏரில் பதவி ஏற்கிறேன்...!"

'நீ வெப்புல ஏற்றாலும் சரி, ஏரோபிலேன்ல ஏற்றாலும் சரி எனக்கு என்ன லாபம்? அந்த குண்டுப் பயல், புதன்கிழமை நல்ல நாளு, டேபிள் ரெடி, சேர் ரெடின்னு நூறு ரூபா கட்டா மஞ்சப் பையிலே சுத்தி எடுத்துட்டுப் போனான்...போனவன் போனாண்டி கதைதான்...!' - மனதுக்குள் குமைந்து, கொதித்து, குதித்து, நொதித்துக் கொண்டிருந்தார்.

பாட்டியின் பல்செட்டு வாய், ஏதோ கேட்டு அசைவதைப் பார்த்து, பிரசெண்ட் டென்ஸ்க்கு வந்தார்.

"என்ன கேட்கிறாய்?"

"என்னோட அறையில் பீரோவைத் திறந்தால் ஒரு பேட் ஸ்மெல் வருகிறது. லைக் பீடி ஸ்மெல் மாதிரி. தட் நேஸ்டி ரவுடி கருணா பை சான்ஸ் இங்கே வந்தானா...?

(குறும்பு தொடரும்...)