கருப்பும் வெள்ளையும் மாறி மாறி உடலில் அடித்தது போல ஒரு அழகிய நிறம். கண்ணை சுற்றிய அந்த கருமை இந்த பறவைக்கு மேலும் அழகூட்டக்கூடிய ஒன்று. மைனாவை விட பெரிதாகவும், புறாவைவிட அளவில் சிறிதாகவும் இருக்கும் இந்த கார் வெண் மீன்கொத்தி.
கூறிய கத்தி போன்ற அலகுகள். பாறைகள் மேல் அமர்ந்து கொண்டு நீரோட்டத்தை கவனித்துக்கொண்டிருக்கும். இந்த பறவை மீன் பிடிக்கும் விதமே தனிதான். நீர்நிலைகளுக்கு மேல் பத்து நிமிடங்களுக்கு சுற்றிக்கொண்டிருக்கும் அல்லது ஒரே இடத்தில் நின்றுகொண்டு நீரோட்டத்தில் மேலே மீன்கள் எதுவும் வருகிறதா என பார்த்துக்கொண்டிருக்கும். அவ்வாறு நிலையாக அந்தரத்தில் நிற்பதற்கு இந்த பறவையின் வால் மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார் பறவைகள் இன ஆராய்ச்சியாளர்களின் தந்தை சலீம் அலி.
மீன்களை மேலே கண்டவுடன், வில்லிலிருந்து பாயும் அம்பு போல (அல்லது போன் அடித்தவுடன் ஓடிச் சென்று எடுக்கும் இளவட்டங்கள் போல) சரக்கென்று நீரில் முங்கி மீனை அனாயாசமாக கவ்விக்கொண்டு, மீண்டும் பாறையின் மேல் வந்து அமர்ந்து கொள்ளும். ஏனெனில் அந்த மீனை நன்றாக குத்திக்கிழித்து அப்படியே விழுங்கிவிடும் என விவரிக்கிறார் சலீம் அலி.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் காணப்பட்டாலும், கேரளாவில் உள்ள கார் வெண் மீன்கொத்தி மற்ற மாநிலத்தில் உள்ளதைவிட சற்று மாறுபட்டு இருக்கும் என்கிறார் சலீம் அலி.
தனியாகவோ அல்லது தனது இணையுடனோ சேர்ந்து காணப்படும் இந்த கார் வெண் மீன்கொத்தி மீனைத்தவிர, தலைப்பூச்சிகள், தவளைகள், மற்றும் நீரிலுள்ள சிறு பூச்சிகளையும் உட்கொள்ளும். இந்த பறவையின் இனப்பெருக்க காலம் அக்டோபர் முதல் மே வரையிலுள்ள மாதங்கள். ஒரு சமயத்தில் ஐந்து முதல் ஆறு முட்டைகளை ஈனும் இந்த பறவை.
ஒரு கிளோசப்...
Leave a comment
Upload